Aran Sei

மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 60% அளவிற்கு கடன் – மாநிலங்களவையில் நிதித்துறை இணை அமைச்சர் தகவல்

ந்திய அரசுக்கு இந்த ஆண்டின் ஜுன் மாதம்வரை 1,19,53,758 கோடி கடன் இருப்பதாக ஒன்றிய நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சவுத்ரி தெரித்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் ஜி.சி.சந்திரசேகர் எழுப்பிய கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக அவர் அளித்துள்ள பதிலில் இதை தெரிவித்துள்ளார்.

ஒன்றிய நிதித்துறையிடம் ஜி.சி. சந்திர சேகர், ” 2021 ஆம் ஆண்டு ஜூன் மாதம்வரை இந்திய அரசின் மொத்த கடன் மற்றும் அதிகரித்திருக்கும் வெளிநாட்டு கடன்குறித்து  தெரிவிக்க அரசுக்கு விருப்பமா?. விருப்பம் இருந்தால், விவரங்களை தெரிவிக்கவும். விருப்பம் இல்லை என்றால் அதற்கான காரணத்தைத் தெரிவிக்கவும்” என கேட்டிருந்தார்.

இதற்கு ஒன்றிய நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சவுத்ரி எழுத்துப்பூர்வமாக அளித்துள்ள பதிலில், ”2003 ஆம் ஆண்டின் நிதி பொறுப்பு மற்றும் நிதிநிலை மேலாண்மை சட்டத்தின் வரையறையின்படி, 2020-21 நிதியாண்டில் ஒன்றிய அரசின் தற்போதைய கடன் 1,19,53,758 கோடி ரூபாய்” என தெரிவித்துள்ளார்.

“2019-20 நிதியாண்டில் இருந்த மொத்த கடன் தொகையான ரூ. 1,04,99,460 கோடி அப்போதைய மொத்த உள்நாட்டு உற்பத்தியான ரூ. 2,03,51,013 கோடியில் 51.6 விழுக்காடாக இருந்த நிலையில் 2020-21 ஆம் நிதியாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ரூ.1,97,45,670 கோடி) கடனின் அளவு 60.5 விழுக்காடாக உயர்ந்துள்ளது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், மொத்த வெளிநாட்டுக் கடன் ரூ. 6,83,677 கோடி என்றும், கடந்த நிதியாண்டுடன் ஒப்பிடுகையில்,  இந்த நிதியாண்டில் ரூ. 76,346 கோடி அதிகரித்துள்ளது என்றும் பங்கஜ் சவுத்ரி கூறியுள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்