Aran Sei

டெல்லி உள்ள அரசு பள்ளிகளில் அதிகரித்திருக்கும் மாணவர் சேர்க்கை – கொரோனாவால் ஏற்பட்ட பொருளாதார பின்னடைவே காரணம் எனத் தகவல்

Image Credits: The News Minute

டெல்லியில் உள்ள தனியார் பள்ளியில் இருந்து அரசு பள்ளிக்குப் பிள்ளைகளைச் சேர்க்கும் பெற்றோர்களின் எண்ணிக்கை அதிகரிந்து வருகிறது. கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டில் திட்டமிடாத சேர்க்கைகளின் எண்ணிக்கை இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது.

கிழக்கு டெல்லியில் உள்ள மாவட்ட அரசு மேல்நிலைப்பள்ளியின் முதல்வர் அறைக்கு வெளியில் பிள்ளைகளைப் பள்ளியில் சேர்ப்பதற்காக பெற்றோர்கள் வரிசையில் காத்திருக்கின்றனர்.

தனியார் பள்ளிகளில் சேர்ப்பதை விட அரசு பள்ளிகளில் சேர்ப்பதையே பெற்றோர்கள் அதிகம் விரும்புகின்றனர். இதற்குக் கொரோனா பெருந்தொற்றில் ஏற்பட்ட பொருளாதார பாதிப்பு ஒரு காரணமாக கூறப்படுகிறது.

அரசு பள்ளியில் 11ஆம் வகுப்பில் மாணவரைச் சேர்க்கும் முயற்சியில் இருக்கும் வாகன ஓட்டுநரான நாராயண மூர்த்தி மிஸ்ரா, “கொரோனாவால் முன்பை விட வருமானம் குறைவாக இருப்பதால், நான் என் மகனை அரசு பள்ளியில் சேர்க்க வந்துள்ளேன்” என தெரிவித்துள்ளார்.

10 வகுப்புவரை தனியார் பள்ளியில் படித்து வந்த மகளை அரசு பள்ளியில் சேர்த்துள்ள சந்தோஷ் கோஷ், “நான் காய்கறி கடை நடத்தி வருகிறேன். கடவுள் அருளால் எந்தப் பிரச்னையும் இல்லை. ஆனால், தனியார் பள்ளிக்கு இணையான கல்வி அரசு பள்ளியில் இலவசமாக கிடைக்கும் போது, ஏன் தேவை இல்லாமல் பணத்தை வீணாக்க வேண்டும்” என கூறியுள்ளார்.

அவரது மகள் கூறும்போது, “இங்கிருக்கும் ஆசிரியர்கள் நன்றாக பாடம் நடத்துகிறார்கள், மாணவர்கள் நன்றாக படிக்கிறார்கள். தனியார் பள்ளியைவிட அரசு பள்ளியே எனக்குப் பிடித்திருக்கிறது” என தெரிவித்துள்ளார்.

அரசு பள்ளியில் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.

”கடந்த ஆண்டு  விண்ணப்பித்த 1800 மாணவர்களில் 600 மாணவர்களுக்குச் சேர்க்கை அளிக்க முடிந்தது. இந்த ஆண்டு விண்ணப்பங்களின் எண்ணிக்கை 3500 ஆக அதிகரித்துள்ளது. இவர்கள் அனைவரும் தனியார் பள்ளிகளில் இருந்து விலகி அரசு பள்ளியில் சேர விண்ணப்பித்துள்ளனர். இது போன்ற திட்டமிடப்படாத சேர்க்கைகளில் இந்த ஆண்டு 300 சேர்க்கைகள் மட்டுமே அளிக்க முடியும்” என டெல்லியின் ரோகினி 21ல் உள்ள அரசுப் பள்ளியின் தலைமையாசிரியர் தெரிவித்துள்ளார்.

2020 ஆம் ஆண்டில் 1.2 லட்சமாக இருந்த திட்டமிடப்படாத சேர்க்கைக்கான விண்ணப்பங்கள், 2021 ஆம் ஆண்டில் 2.36 லட்சமாக அதிகரித்துள்ளது.

கடந்த ஆண்டு 96 ஆயிரம் மாணவர்களுக்குச் சேர்க்கை நடைபெற்றிருக்கும் நிலையில், இந்த ஆண்டில் இது 1.58 லட்சமாக உள்ளது. இதன் மூலம் 2020 ஆம் ஆண்டில் 16.28 லட்சமாக இருந்த அரசுப் பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை, 2021ல் 17.67 லட்சமாக அதிகரித்துள்ளது.

”கடந்த ஆண்டு அரசுப் பள்ளிகள் அளித்த தேர்ச்சி முடிவுகளைப் பார்த்து, பலருக்கும் அரசு பள்ளிகளின் மீது நம்பிக்கை வந்துள்ளது. இதனால், பலரும் தனியார் பள்ளியில் இருந்து விலகி அரசு பள்ளியில் தங்கள் பிள்ளைகளைச் சேர்க்க விரும்புகிறனர்.” என டெல்லியின் துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியா தெரிவித்துள்ளார்.

Source : NDTV

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்