Aran Sei

அதிகரிக்கும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் – கட்டுப்படுத்த மஹாராஷ்டிரா அதிரடிச் சட்டம்

பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கக் கடுமையான தண்டனைகள் மற்றும் அபராதங்கள் அளிக்கும் ஒரு சட்டத்திற்கு மஹாராஷ்டிரா அமைச்சரவை ஒப்புதல் அளித்திருக்கிறது என தி வயர் இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து மஹாராஷ்டிரா உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக், “பெண்களுக்கு எதிரான வன்முறை தொடர்பான வழக்குகளில் 15 நாட்களில் விசாரணையும், 30 நாட்களில் தீர்ப்பும் அளிக்கப்படுவதை இச்சட்டம் உறுதிசெய்யும்” என்று தெரிவித்துள்ளார்.

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களுக்கு மரணதண்டனை, ஆயுள் தண்டனை, கடுமையான அபராதம் போன்ற தண்டனைகள் விதிக்கப்படும் வகையில் இயற்றப்பட்டுள்ள இச்சட்டத்திற்கு ‘சக்தி சட்டம்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.

இந்த வழக்குகளை விசாரித்துத் தீர்ப்பளிக்கச் சிறப்புக் காவல்துறைப் படைகளும், சிறப்பு நீதிமன்றங்களுக்கு அமைக்கப்படும் என சட்ட மசோதா சொல்கிறது.

இச்சட்டத்தின் கீழ், ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட நபருக்கு பத்து லட்சம் ரூபாய் நிவாரணமாகக் கொடுக்கப்படும். மேலும், ஆசிட் வீச்சு தாக்குதல் நடத்திய குற்றவாளியிடம் இருந்து பத்து லட்சம் ரூபாய் அபராதமாக வசூலிக்கப்படும்.

சக்தி சட்டத்தின் கீழ், பெண்களைச் சமூக வலைத்தளங்களில் அச்சுறுத்துதல், போலியான பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகளை வைத்தல், பாலியல் துன்புறுத்தல், ஆசிட் வீச்சு, விசாரணையில் ஒத்துழையாமை, பாலியல் துன்புறுத்தலில் பாதிக்கப்பட்டோரின் அடையாளத்தை வெளிப்படுத்துவது எல்லாம் குற்றங்களாகவே கருதப்படும்.

கடந்த வருடம் ஹைதராபாத்தில் கால்நடை மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுக் கொலைசெய்யப்பட்டதற்குப் பிறகு ஆந்திராவில் கொண்டுவரப்பட்ட திசா சட்டத்தை மாதிரியாக வைத்து இச்சட்டம் இயற்றப்பட்டுள்ளது. மஹாராஷ்டிரா  அமைச்சரவையில் இச்சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்ட நிலையில், அடுத்து சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ளது.

மஹாராஷ்டிராவில் இச்சட்டத்தை நடைமுறைப்படுத்த, இந்திய தண்டனைச் சட்டம், குற்றவியல் நடைமுறைச் சட்டம், பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டம் 2012 ஆகியவற்றில் மஹாராஷ்ட்ரா அரசு திருத்தங்கள் செய்யக்  கோருகிறது. இந்த மசோதா சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பிறகு, மத்திய அரசிடமும், குடியரசுத் தலைவரிடமும் ஒப்புதலுக்காக அனுப்பிவைக்கப்படும்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்