கச்சா எண்ணெய் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வரும் நிலையில், டீசலை அதிக அளவு இருப்பு வைத்துக்கொள்ள பஞ்சாப் மாநில மக்கள் டீசலை அதிக அளவு வாங்க தொடங்கியுள்ளனர்.
இதன் காரணமாக, கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் இருந்த டீசல் விற்பனையை விட, இந்தாண்டு விற்பனை 70 விழுக்காடு அதிகரித்துள்ளது.
பஞ்சாப் உள்ளிட்ட ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் மார்ச் 10ஆம் தேதி வெளியானதற்கு பின்னர், எரிபொருள்களின் விலை உயரும் என பஞ்சாப் மக்கள் அச்சத்தில் உள்ளனர். அறுவடை காலம் நெருங்கி வருவது மக்களின் அச்சத்தை மேலும் அதிகரித்திருக்கிறது.
கோதுமை அறுவடைக்கு பயன்படுத்தப்படும் இயந்திரங்களுக்கு டீசல் பயன்படுத்தப்படுவதால், அதற்கு போதுமான அளவு இருப்பை உறுதி செய்ய விவசாயிகள் டீசலை அதிக அளவில் வாங்குகிறார்கள். இதன் வழியாக கணிசமான தொகையை மிச்சப்படுத்த முடியும் என விவசாயிகள் நம்புகிறார்கள்.
உக்ரைன் – ரஷ்யா போர் எதிரொலி: இந்தியாவில் சமையல் எண்ணெய்கள் விலை உயர்வு
கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 22ஆம் தேதி தொடங்கி, 28ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில், 1,09,600 கிலோ லிட்டர் ஆக இருந்த டீசல் விற்பனை, இந்தாண்டு அதே காலக்கட்டத்தில் 1,85,900 கிலோ லிட்டர் ஆக உயர்ந்துள்ளதாக பெட்ரோலிய நிறுவனங்கள் கூறுகின்றன.
டீசலின் இந்த மொத்த விற்பனையில், 30 விழுக்காடு விவசாயிகள் தங்கள் டிராக்டர்கள், ஜெனரேட்டர்கள் மற்றும் விவசாயத்திற்கான பிற உபகரணங்களுக்காக வாங்குகிறார்கள் என்று பெட்ரோலிய நிறுவன அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
மேலும், “விவசாயிகள் மட்டுமின்றி, பல்வேறு தொழிற்சாலைகளும் தங்கள் டீசல் இருப்பை அதிகரிக்கத் தொடங்கியுள்ளன” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
அம்மாநில கிராமப்புறங்களில் டிராக்டர்களில் டீசல் நிரப்ப விவசாயிகள் நீண்ட வரிசைகளில் நிற்பது தற்போது சர்வசாதாரணமாகி உள்ளது என்றும் எரிபொருள் கட்டணத்தை மிச்சப்படுத்த 100 முதல் 1,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட ட்ரம்முகளை விவசாயிகள் கொண்டு வருகிறார்கள் என்றும் நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் தெரிவித்துள்ளது.
Source: New Indian Express
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.