Aran Sei

உச்சநீதி மன்றத்தில் பெகசிஸ் விவகாரம் – பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய இயலாது என ஒன்றிய அரசு தகவல்

பெகசிஸ் வழியாக வேவு பார்க்கப்பட்டுள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ள விவகாரத்தில்  தேசிய பாதுகாப்புக் காரணங்களுக்காக பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய இயலாது  என்று  ஒன்றிய அரசு உச்சநீதிமன்றத்தில் கூறியுள்ளது.

பெகசிஸ் வழியாகத் தொலைபேசிகள் வேவு பார்க்கப்பட்டுள்ளதாக எழுந்துள்ளக் குற்றச்சாட்டுத் தொடர்பாக  உச்சநீதிமன்றத்தின் தலைமையில் விசாரணை மேற்கொள்ளப்படவேண்டுமென உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில், இந்த மனுவின் விசாரணையின் போது ஆஜரான ஒன்றிய அரசின் வழக்கறிஞர், “இந்த விவகாரம் தொடர்பாகப் பிரமாணப் பத்திரம் வாயிலாக பதிலளிக்க இயலாது. பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்து பொது விவாதத்திற்கு உட்படுத்துவது சாத்தியமற்றது”  என்றும் கூறியுள்ளார்.

இந்த மனுவிசாரணையின் போது இதுகுறித்து தெரிவித்த நீதிபதி, “தனிநபர்களின் தொலைபேசி வேவு பார்க்கப்பட்டது குறித்து மட்டுமே நாங்கள் அக்கறைக் கொண்டுள்ளோம்.  வேவு பார்த்த அமைப்பு அதிகாரப்பூர்மானதா  அல்லது இல்லையா என்பது குறித்தே அறிய விரும்புகிறோம். தனியுரிமை மீரப்பட்டுள்ளதாக கருதுகின்றனர்” என்றும் தெரிவித்துள்ளனர்.

இதற்கு பதிலளித்த ஒன்றிய அரசின் வழக்கறிஞர், “ஒருவேளை தனிப்பட்ட நபர்களின் தனியுரிமை மீறப்பட்டுள்ளதாகக் கருதினால் அதை முக்கிய விஷயமாக எடுத்துக்கொண்டு நாங்கள் வல்லுநர் குழுவை அமைக்கிறோம்” என்றும் தெரிவித்தார்.

இதனைத்தொடர்ந்து இதனைப் பொருட்படுத்தாத உச்சநீதிமன்ற அமர்வு, குழுவை அமைப்பது ஒரு பிரச்சனை இல்லை என்றும் தெரிவித்தது.

மேலும், இரண்டு முறை வாய்ப்பளித்தும் ஒன்றிய அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யவில்லை என்றும் உச்சநீதிமன்ற அமர்வு சுட்டிக்காட்டியுள்ளது.

அதுமட்டுமல்லாது, இந்த விவகாரத்தில் 2 அல்லது 3 நாட்களில் இடைக்கால உத்தரவுப் பிறப்பிக்க உள்ளதாகவும், ஒருவேளை பிரமாணப் பத்திரம்குறித்து மீண்டும் சிந்தித்தால் நீதிமன்றத்தை நாடலாம் என்றும் உச்சநீதிமன்ற தலைமைநீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Source: Ndtv 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்