Aran Sei

நாகாலாந்தில் 13 பழங்குடிகள் சுட்டுக்கொலை: வருத்தம் தெரிவித்த ராணுவம் – மாநிலம் முழுவதும் பதற்றம்

நாகாலாந்து மாநிலம் மோன் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினரால் பதிமூன்று பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாக அரசு சாரா வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. பாரா கமாண்டோஸ் பாதுகாப்புப் படையினரால் கொல்லப்பட்ட பொதுமக்கள் தீவிரவாதிகள் என தவறாக நினைத்துக்கொண்டதாக கூறப்படுகிறது.

நேற்று(டிசம்பர் 4) மாலை, கொல்லப்பட்டவர்கள் நிலக்கரிச் சுரங்கத்திலிருந்து பணி முடித்து, டிரக்கில் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது இந்தச் சம்பவம் நடந்துள்ளது. அவர்கள் நிலக்கரி சுரங்கத்தில் தினசரி கூலி வேலை செய்து வந்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக, மோன் மாவட்ட மாஜிஸ்திரேட், காவல்துறை கண்காணிப்பாளர் மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் அதிகாரிகளின் கருத்துக்கு கிடைக்கப் பெறவில்லை.

மோன் மாவட்டத்தில் உள்ள கொன்யாக் பழங்குடியினர்களின் தலைவர்கள், நேற்று(டிசம்பர் 4) மாலை ஆறு பேர் உயிரிழந்துள்ளதாகவும், மேலும் ஏழு பேர் இன்று(டிசம்பர் 5) காலை வரை காயமடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

“இச்சம்பவத்தில் 13 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும்,11 பேர் காயமடைந்துள்ளனர். இரண்டு பேர் காணாமல் போயுள்ளனர். இவர்கள் அனைவரும் பொதுமக்கள்தான். குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். உரிய நீதி வழங்கப்படாவிட்டால், உயிரிழந்தவர்களின் குடும்பங்கள் உடல்களை வாங்காது. இக்கொலை சம்பவத்திற்கு நீதிக் கேட்டு, அனைத்து தேசிய மற்றும் சர்வதேச மனித உரிமை அமைப்புகளுக்கும் நாங்கள் செல்கிறோம்” என்று சம்பவத்திற்குப் பிறகு அவ்விடத்திற்கு சென்றுள்ள பழங்குடியினத் தலைவர் ஒருவர் கூறியுள்ளார்.
கொல்லப்பட்டவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக மாவட்ட தலைமையகத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

இதுகுறித்து பேசியுள்ள கொன்யாக் பழங்குடி தலைவர் ஒருவர், “கொல்லப்பட்டவர்களின் கிராமத்திலிருந்து நிலக்கரிச் சுரங்கம் சுமார் 15 கிமீ தூரம் இருக்கும். அவர்கள் ஒவ்வொரு சனிக்கிழமையும் வீட்டிற்கு வருவார்கள். ஞாயிற்றுக்கிழமை குடும்பத்தினருடன் நேரம் செலவழிப்பார்கள். பின்னர் திங்கட்கிழமை காலை பணிக்கு திரும்பி விடுவார்கள்” என்று தெரிவித்துள்ளார்.

கிழக்கு நாகாலாந்து மக்கள் அமைப்பு (இஎன்பிஓ) மாநிலத் தலைநகர் கோஹிமாவுக்கு அருகிலுள்ள கிசாமாவில் நடைபெற்று வரும் வருடாந்திர ஹார்ன்பில் திருவிழாவில் இருந்து விலகுவதாக முடிவு செய்துள்ளது. அம்மாநிலத்தில் ஆறு பழங்குடியினரை பிரதிநிதித்துவப்படுத்தும் இஎன்பிஓ, இத்தீர்னத்தை அறிவித்துள்ளது.
“எங்கள் மக்களை பாதுகாப்புப் படையினர் கொன்றுக்கொண்டிருக்கும்போது நாங்கள் எப்படி திருவிழாவில் நடனமாட முடியும்?” என்று கொன்யாக் பழங்குடி தலைவர் ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இச்சம்பவத்திற்கு இராணுவம் வருத்தம் தெரிவித்ததுடன், உரிய விசாரணை நடத்துவதாக தெரிவித்துள்ளது. இச்சம்பவம் நாகாலாந்து மாநிலம் முழுவதும் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

Source: New Indian Express

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்