நான்கு விவசாயிகள் உட்பட எட்டு பேர் உயிரிழந்தது லக்கிம்பூர் கெரி வன்முறை தொடர்பாக, உத்தரபிரதேச அரசின் சிறப்பு விசாரணை குழுவின் விசாரணையை மேற்பார்வையிட பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி ராகேஷ் குமார் ஜெயின் என்பவரை உச்ச நீதிமன்றம் நியமித்துள்ளது.
இன்று(நவம்பர் 17), தலைமை நீதிபதி என்.வி.ரமணா, நீதிபதிகள் சூர்ய காந்த் மற்றும் ஹிமா கோஹ்லி ஆகியோர் அடங்கிய அமர்வு, மாநில அரசு வழங்கிய ஐபிஎஸ் அதிகாரிகளின் பெயர் பட்டியலை கவனத்தில் எடுத்துக்கொண்டு, சிறப்பு விசாரணை குழுவிற்கு மூன்று அதிகாரிகளை நியமித்துள்ளது. மேலும், விரிவான உத்தரவு விரைவில் பிறப்பிக்கப்படும் என்று தலைமை நீதிபதி கூறியுள்ளார்.
சிறப்பு விசாரணை குழுவானது தனது விசாரணையை முடித்து, வழக்கின் நிலை அறிக்கை மற்றும் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்த பின்னர், இவ்வழக்கை மீண்டும் அமர்வு விசாரிக்கும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
உத்தரபிரதேச மாநில அரசு உருவாக்கிய சிறப்பு விசாரணை குழுவின் விசாரணையை மேற்பார்வையிட, தங்களுக்கு விருப்பமான முன்னாள் நீதிபதியை நியமிக்கலாம் என்ற உச்ச நீதிமன்றத்தின் பரிந்துரையை உத்தரப் பிரதேச அரசு நவம்பர் 15ஆம் தேதி ஏற்றுக்கொண்டது.
முன்னர், நவம்பர் 8 ஆம் தேதி, இவ்வழக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வுக்கு முன் விசாரணைக்கு வந்த போது, இவ்வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும் வரை விசாரணையை மேற்பார்வையிட, பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதிகளான ராகேஷ் குமார் ஜெயின் அல்லது ரஞ்சித் சிங் ஆகியோரின் பெயர்களை பரிந்துரைத்ததோடு, “விசாரணை நாங்கள் எதிர்பார்த்தபடி நடக்கவில்லை. சம்பவம் தொடர்பான காணொளி ஆதாரங்களின் தடயவியல் அறிக்கைகளை பெறுவதில் தாமதம் ஏற்படுவதையும் நாங்கள் கவனத்தில் கொண்டுள்ளோம்” என்று சுட்டிக்காட்டி இருந்தது.
லக்கிம்பூர் வன்முறை: ‘காவல்துறையின் விசாரணை எதிர்பார்த்தபடி நடக்கவில்லை’- உச்ச நீதிமன்றம்
இவ்வழக்கில் ஒன்றிய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா உள்பட 13 பேரை உத்தரபிரதேச காவல்துறையினர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.
Source: PTI
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.