லக்கிம்பூர் கெரி வன்முறை வழக்கில் ஒன்றிய அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ராவுக்கு அலகாபாத் உயர் நீதிமன்றம் பிணை வழங்கியதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை மார்ச் 11ஆம் தேதி உச்ச நீதிமன்றம் விசாரிக்கவுள்ளது.
ஆஷிஷ் மிஸ்ராவுக்கு வழங்கப்பட்ட பிணையை மேற்கோள் காட்டி, வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மற்ற நபர்களும் பிணைக் கோரி நீதிமன்றத்தை நாடுகிறார்கள் என சுட்டிக்காட்டும் வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷணின் மனுவை தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வு கவனத்தில் கொண்டுள்ளது.
“இந்த மனு மார்ச் 11 அன்று விசாரிக்கப்படும். மற்ற நீதிபதிகளும் அப்போது இருக்க வேண்டும்” என்று தலைமை நீதிபதி கூறியுள்ளார்.
லக்கிம்பூர் வன்முறை: ‘பிணை பெற்ற குற்றவாளிகள் மக்கள் நீதிமன்றத்தில் டெபாசிட் இழப்பர்’ –அகிலேஷ் யாதவ்
பிணை வழங்கும்போது பின்பற்றப்படுவதற்காக வகுக்கப்பட்டுள்ள சட்டங்களை அலகாபாத் உயர் நீதிமன்றம் பின்பற்றவில்லை என்றும் வழக்கின் சாட்சியங்களை சிதைப்பது மற்றும் நீதி விசாரணையில் இருந்து சம்பந்தப்பட்டவர்கள் தப்ப முயல்வது போன்ற காரணிகளை உயர் நீதிமன்றம் கவனத்தில் கொள்ளவில்லை என்றும் தன் மனுவில் குற்றஞ்சாட்டியுள்ள பிரஷாந்த் பூஷண், “இப்போது பிரச்சனை என்னவென்றால், குற்றம் சாட்டப்பட்ட மற்றவர்களும் பிணைக் கோர தொடங்கிவிட்டனர்” என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், குற்றஞ்சாட்டப்பட்ட மற்றவர்களின் பிணை மனுவை தற்போதைக்கு பரிசீலிக்கக் கூடாது என உயர் நீதிமன்றத்திற்கு உத்தரவிடுமாறு அம்மனுவில் கோரியுள்ளார்.
லக்கிம்பூர் வன்முறை: அமைச்சர் மகனின் பிணைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனு – ராகேஷ் திகாயத்
“மார்ச் 11 அன்று நாங்கள் இம்மனுவை விசாரிக்கிறோம் என உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யுங்கள்” என்று பிரஷாந்த பூஷணிடம் அமர்வு உத்தரவிட்டுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் லக்கிம்பூரில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் விவசாய சட்டங்களை நீக்கக் கோரி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கூட்டத்தினுள் கார் புகுந்ததில் 4 விவசாயிகள் உள்ளிட்ட 8 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து அப்பகுதியில் வன்முறை வெடித்தது.
கலவரத்திற்கு காரணமானவர் என குற்றஞ்சாட்டி ஒன்றிய அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அவருக்கு அலகாபாத் உயர்நீதிமன்ற பிணை வழங்கியது.
அதைத் தொடர்ந்து, பிணை வழங்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து உயிரிழந்த விவசாயிகள் குடும்பத்தினர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். பிணை வழங்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக தலைமையிலான உத்தரப் பிரதேச அரசு மனுத்தாக்கல் செய்யாததால், நாங்கள் மனு தாக்கல் செய்துள்ளோம் என்று உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் தெரிவித்திருந்தனர்.
Source: NDTV
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.