Aran Sei

8 உள்கட்டமைப்பு துறைகளின் உற்பத்தி பிப்ரவரி மாதத்தில் கடும் வீழ்ச்சி – மத்திய அரசின் தரவுகள்

image credit : thehindu.com

பிப்ரவரி மாதத்தில் முக்கியமான எட்டு துறைகளின் உற்பத்தி 4.6% குறைந்திருக்கிறது. இது கடந்த 6 மாதங்களில் மிக மோசமான சுருக்கம் என்றும் இது இந்த மாதத்துக்கான ஒட்டு மொத்த தொழில்துறை உற்பத்தி வளர்ச்சியை எதிர் மறைக்குக் கொண்டு போய் விடும் என்று நிபுணர்கள் கருத்து கூறியுள்ளதாக தி ஹிந்து தெரிவிக்கிறது.

நிலக்கரி, கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, சுத்திகரிக்கப்பட்ட பொருட்கள் உள்ளிட்ட அனைத்து முக்கிய துறைகளிலும் உற்பத்தி குறைந்துள்ளது என்று மத்திய அரசு நேற்று வெளியிட்ட அதிகாரபூர்வ தரவுகள் தெரிவிக்கின்றன.

எட்டு உள்கட்டமைப்பு துறைகளான நிலக்கரி, கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு , சுத்திகரிக்கப்பட்ட பொருட்கள், உரங்கள், உருக்கு, சிமென்ட், மின் உற்பத்தி ஆகியவற்றின் வளர்ச்சி சென்ற ஆண்டு பிப்ரவரி மாதத்தில் 6.4% ஆக இருந்தது.

சென்ற ஆண்டு ஆகஸ்ட் மாதம் 6.9% சுருங்கிய இந்த உள்கட்டமைப்பு துறைகள், அதற்கு அடுத்தபடியாக சென்ற மாதம் 4.6% சுருங்கியுள்ளன. ஜனவரி மாதம் இவை 0.9% அளவுக்கு வளர்ச்சி கண்டிருந்தன.

  • நிலக்கரி உற்பத்தி – 4.4% குறைவு
  • கச்சா எண்ணெய் உற்பத்தி – 3.2% குறைவு
  • இயற்கை எரிவாயு உற்பத்தி – 1% குறைவு
  • சுத்திகரிக்கப்பட்ட பொருட்கள் உற்பத்தி -10.9% குறைவு
  • உரங்கள் உற்பத்தி – 3.7% குறைவு
  • உருக்கு உற்பத்தி – 1.8% குறைவு
  • சிமென்ட் உற்பத்தி – 5.5% குறைவு
  • மின் உற்பத்தி – 0.2% குறைவு

வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் தரவுகளின் படி, 2020 ஏப்ரல் முதல் 2021 பிப்ரவரி வரை இந்தத் துறைகளின் உற்பத்தி 8.3% குறைந்துள்ளது. முந்தைய ஆண்டான, 2019 ஏப்ரல் முதல் 2010 பிப்ரவரி வரை இந்தத் துறைகளின் உற்பத்தி 1.3% அதிகரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

“இதுவரை கிடைத்திருக்கும் தரவுகளின் அடிப்படையில் தொழில்துறை உற்பத்தி குறியீட்டு எண் பிப்ரவரி மாதம் 2-3% சுருங்கும் என்று எதிர்பார்ப்பதாக” ஐசிஆர்ஏ நிறுவனத்தின் முதன்மை பொருளாதாரவியலாளர் அதிதி நாயர் தெரிவித்துள்ளார்.

“அரசாங்கம் முன் வைக்கும் V வடிவ மீட்சியுடன் இது எப்படி பொருந்துகிறது” என்று தி வயர் ஆசிரியரான எம்.கே. வேணு ட்வீட் செய்துள்ளார்.

“உள்கட்டமைப்புத் துறை 4.6% சுருங்கியது, கடந்த 6 மாதங்களில் மிக அதிகம்” என்பதையும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்