தீவிர காலநிலை மாற்றத்தால் உயிரிழப்பவர்களில் மின்னல் தாக்கி இறப்பவர்களே அதிகம் என்று பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சார்ந்த கோ. சுந்தர்ராஜன் தெரிவித்துள்ளார்.
கடந்த மே 12 அன்று, அசாம் மாநிலம் நாகான் மாவட்டத்தில், 18 யானைகள் மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளன.
கடந்த ஏப்ரல் 1, 2019 முதல் மார்ச் 31, 2020 வரை இந்தியாவில் 1771 பேர் மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளனர் என காலநிலை மாற்ற பாதிப்புகளைக் கண்காணிக்கும் குழு அறிக்கை வெளியிட்டுள்ளதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி கூறுகிறது.
மேலும், அதிகபட்சமாக உத்தரபிரதேசத்தில் 293 பேரும், மத்திய பிரதேசத்தில் 248 பேரும், பீகாரில் 221 பேரும், ஒடிசாவில் 200 பேரும் மற்றும் ஜார்கண்டில் 172 பேரும் மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளதாகவும் அறிக்கை கூறுவதாக அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாது, மத்திய அரசும், பலமாநில அரசுகளும் மின்னல் தாக்குவதை இயற்கைப்பேரிடராக அறிவிக்கவில்லை என்றும் அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி தெரிவிக்கிறது.
இது பற்றி கருத்து தெரிவித்துள்ள காலநிலை மாற்றப் பாதிப்புகளைக் கண்காணிக்கும் குழுவின் தலைவர் சிறீ வஸ்தவா, “மின்னல் தாக்கும் பகுதிகளைக் குறைந்தது மூன்று வருடத்திற்கு ஆராய்ந்து அதன் அளவு, திறன் ஆகியவற்றைக் கண்டறிய வேண்டும்” என்று தெரிவித்துள்ளதாக அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சார்ந்த கோ. சுந்தர்ராஜன், இந்தியாவில் “தீவிர காலநிலை நிகழ்வுகளால்” உயிரிழப்போரில் மின்னல் தாக்கி இறப்போரே அதிகம். மின்னல் தாக்கி அசாமில் 18 யானைகள் உயிரிழந்துள்ள செய்தி நிலைகுலைய வைத்துள்ளது. கடந்த சில ஆண்டுகளாகவே அதிகரிக்கும் புயல்களால், மின்னல்களின் எண்ணிக்கையும், தீவிரத்தன்மையும் அதிகரித்து வருகிறது” என்று கூறியுள்ளார்.
இதேபோன்று, காலநிலை மாற்றத்தால் புயலின் எண்ணிக்கையும், தீவிரமும் அதிகரித்து வருவது குறித்து பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சார்ந்த கோ. சுந்தர்ராஜன் எச்சரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.