Aran Sei

ஆணவப் படுகொலை செய்யப்பட்ட முருகேசனின் தாயார் மீது தாக்குதல் – வழக்கு பதிந்தும் குற்றவாளிகளை கைது செய்யாத காவல்துறை

ணவக் படுகொலை செய்யப்பட்ட கண்ணகி முருகேசன் வழக்கில் 18 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த செப்டம்பர் 24 ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்ட நிலையில், தற்போது முருகேசனின் தாயார் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் பகுதியைச் சேர்ந்த மருகேசன், அதே மாவட்டம் புதுக்கூரைப் பேட்டையைச் சேர்ந்த மருது பாண்டியனின் தங்கை கண்ணகியை 2003 ஆம் ஆண்டு பதிவு திருமணம் செய்து கொண்டார்.

கண்ணகியின் திருமணத்தை அறிந்த அவரது குடும்பத்தினர், கண்ணகி மற்றும் முருகேசன் மூக்கு, காது வழியாக விஷம் கொடுத்துக் கொலை செய்து, இருவரின் உடல்களையும் தனித்தனியாக எரித்தனர்.

இந்த வழக்கில், 18 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த செப்டம்பர் 24 ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில் குற்றம்சாட்டப்பட்டவர்களில் ஒருவருக்கு தூக்கு தண்டனையும், 12 பேருக்கு ஆயுள் தண்டனையும் வழங்கப்பட்டது.

இந்நிலையில், குப்பநத்தம் கிராமத்தில் வசித்துவரும் முருகேசனின் தாயார் சின்னப்புள்ளை மீது வியாழன் (அக். 14) மாலை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக விருத்தாச்சலம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ஆதியிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

”புதுக்கூரைப்பேட்டை பகுதியைச் சேர்ந்த சுந்தரமூர்த்தி, வரதராசு, பாக்கியராஜ், சதீஷ்குமார், வெங்கடேஷன், ராஜிவ் காந்தி, வினோத் குமார் ஆகியோர் சாதிப் பெயர் சொல்லித் தகாத வார்த்தையால் திட்டியும், கம்பால் அடித்தும் எட்டி உதைத்தும் தாக்கியனர்.” என சின்னப்புள்ளை அந்தப் புகாரில் தெரிவித்துள்ளார்.

புகாரின் அடிப்படையில் 7 பேர்மீது ஆறு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டும், குற்றம்சாட்டப்பட்டவர்களில் ஒருவர் கூட கைது செய்யப்படவில்லை.

இதனைத் தொடர்ந்து, சின்னப்புள்ளையை தாக்கிய குற்றவாளிகளைக் கைது செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் சைலேந்திர பாபுவிடம், கண்ணகி – முருகேசன் வழக்கை நடத்திய உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ரத்தினம் மனு அளித்துள்ளார்.

 

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்