Aran Sei

என்.ஆர்.சி பட்டியலில் சட்டவிரோத வெளிநாட்டினர் – கௌஹாத்தி உயர் நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல்

2019 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட தேசிய குடிமக்கள் பதிவேட்டில் 4,800 ‘சட்ட விரோத வெளிநாட்டினரின்’ பெயர்கள் உள்ளதாக குடிமக்கள் பதிவேட்டைத் தயாரித்த அதிகாரிகள் கௌஹாத்தி உயர் நீதிமன்றத்தில் வாக்குமூலம் கொடுத்துள்ளனர்.

ஆகஸ்ட் 31, 2019 அன்று வெளியிடப்பட்ட தேசிய குடிமக்கள் பதிவேட்டில் இடம்பெற விண்ணப்பித்திருந்த 3.3 கோடி நபர்களில் 19.06 லட்சம் பேர் நிராகரிக்கப்பட்டிருந்தனர். பதிவேடு வெளியான பிறகே தகுதியில்லாத சிலர் பதிவேட்டில் இடம்பெற்றது கண்டுபிடிக்கப்பட்டது. அதாவது, மார்ச் 24, 1971-க்கு முன் அசாமில் குடியிருந்ததை நிரூபிக்க ஆவணங்கள் இல்லாதவர்களின் பெயர்களும் பட்டியலில் இடம்பெற்றுள்ளன. இப்படி, தேசியக் குடிமக்கள் பதிவேட்டில் 4,800 தகுதி இல்லாதவர்களின் பெயர்கள் தவறாக இடம் பெற்றுள்ளன எனச் சொல்லப்படுகிறது.

இப்படி தகுதி இல்லாதவர்கள் சந்தேகத்திற்குரிய வாக்காளர்கள் [DV (doubtful voters)], வெளிநாட்டினர் எனப் பிரகடனப்படுத்தப்பட்டவர்கள் [DF (declared foreigners)], வெளிநாட்டினருக்கான தீர்ப்பாயத்தில் நிலுவையில் இருக்கும் வழக்குகளில் தொடர்புடையவர்கள் [PFT (cases pending in Foreigners’ Tribunal or FT)], சந்தேகத்திற்குரிய வாக்காளர்களின் மரபினர் [DVD (DV’s descendants)], வெளிநாட்டினர் எனப் பிரகடனப்படுத்தப்பட்டவர்களின் மரபினர் [DFD (DF’s descendants)] மற்றும் தீர்ப்பாயத்தில் நிலுவையில் இருக்கும் வழக்குகளில் தொடர்புடையவர்களின் மரபினர் [PFTD (descendants of cases pending in the FT)] எனப் பிரிக்கப்படுகின்றனர்.

“ஆமாம், நாங்கள் வாக்குமூலத்தைச் சமர்ப்பித்திருக்கிறோம். அதைத் தவிர வேறெதுவும் என்னால் சொல்ல முடியாது” என என்.ஆர்.சி மாநில ஒருங்கிணைப்பாளர் ஹிதேஷ் தேவ் ஷர்மா தி இந்து-விடம் தெரிவித்திருக்கிறார்.

தேசிய மக்கள் பதிவேடு அசாமில் பிறந்தவர்கள் (அதனால் இந்தியர்களாபவர்கள்) யார், (முன்னர் கிழக்கு பாகிஸ்தானாக இருந்த) பங்களாதேஷில் இருந்து வந்து குடியேறியவர்கள் யார் என்பதை தீர்மானிக்க 1951-ல் உருவாக்கப்பட்டது. பிறகு, 1980 ஆம் ஆண்டில், அசாம் மாணவர் சங்கம் முன் நின்று நடத்திய வெளிநாட்டினருக்கு எதிரான அசாம் போராட்டத்தின் போது குடிமக்கள் பதிவேட்டைப் புதுப்பிக்க வேண்டும் எனும் கோரிக்கை எழுந்தது. அசாம் பொது வேலைகள் எனும் அரசு சாரா அமைப்பு 2009 ல் உச்சநீதிமன்றத்தில் சமர்ப்பித்த மனுவினால் 2013 டிசம்பர் மாதம் பதிவேடு மீண்டும் புதுப்பிக்கப்பட்டது.

உச்சநீதிமன்றத்தின் மேற்பார்வையில் குறைந்தபட்சமாக 1,600 கோடி ரூபாய் செலவில், 2,500 தேசியக் குடிமக்கள் பதிவேடு சேவை மையங்களில் 55,000 அதிகாரிகள் 3.3 கோடி விண்ணப்பங்களை ஆய்வு செய்து அசாமின் குடிமக்கள் யார் எனத் தீர்மானித்தனர். அதன் முடிவில், நிராகரிக்கப்பட்ட மக்களின் எண்ணிக்கை திருப்தியளிக்கவில்லை என்பதால் மீண்டும் தேசிய மக்கள் பதிவேட்டைச் சரி பார்க்க வேண்டும் என்கிறது பாஜக.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்