Aran Sei

இஸ்லாமிய கலாச்சார மையத்தின் மீது வெறுப்பு குற்றம் – டெல்லி போலீஸ் எஃப்ஐஆர் பதிவு

Image Credit : Saket Gokhale, Twitter

ஹிந்து சேனா என்ற அமைப்பு டெல்லியில் உள்ள “இந்திய இஸ்லாமிய கலாச்சார மையம் (IICC)” நிறுவனத்தின் பெயர்ப்பலகை மீது “ஜிகாதி பயங்கரவாத இஸ்லாமிய மையம்” என்ற போஸ்டரை ஒட்டியிருக்கிறது. “சொத்தை சேதப்படுத்துவதை தடுப்பதற்கான டெல்லி சட்டம் 2007”-ன் கீழ் அடையாளம் தெரியாத நபர்கள் மீது, டெல்லி போலீஸ் வழக்கு பதிவு செய்துள்ளது.

ஹிந்து சேனா அமைப்பின் தலைவரான விஷ்ணு குப்தா, “இவ்வாறு போஸ்டர் ஒட்டியது சட்ட விரோதமானதா இல்லையா என்பதை நீதிமன்றம் தீர்மானிக்கும்” என்று கூறியதாக thewire.in செய்தி தெரிவிக்கிறது. “போஸ்டர்கள் எளிதாக பிய்க்கப்படக் கூடியதாக இருந்ததாலும், எந்த அடையாளத்தையும் விட்டுச் செல்லவில்லை என்பதாலும் தனது தொண்டர்கள் எந்தத் தவறும் செய்யவில்லை” என்று அவர் வலியுறுத்தியிருக்கிறார்.

“பிரான்சில் நடந்த பயங்கரவாத தாக்குதலை கண்டித்து எங்கள் தொண்டர்கள் அந்த போஸ்டரை ஒட்டினார்கள்” என்று அவர் கூறியுள்ளார்.

சென்ற வியாழக்கிழமை, பிரான்ஸ் நாட்டின் நைஸ் நகரில் ஒரு நபர் ஒரு கிருத்துவ தேவாலயத்தில் 3 பேரை கத்தியால் தாக்கி கொலை செய்தார்.

பிரான்ஸ் தேவாலயத்தில் மூவர் கொலை : மீண்டும் பதற்றம்

இரண்டு வாரங்களுக்கு முன்பு பாரிஸ் நகரில் பேச்சு சுதந்திரம் தொடர்பான பாடத்தின் போது மாணவர்களுக்கு முகமது நபி பற்றிய கார்ட்டூன்களை காட்டியதற்காக ஒரு பள்ளி ஆசிரியர் தலை வெட்டி கொலை செய்யப்பட்டார்.

‘நான் சாமுவேல்’ – கொலை செய்யப்பட்ட ஆசிரியருக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டங்கள்

இந்த இரண்டு தாக்குதல்களையும் தொடர்ந்து பிரெஞ்சு அதிபர் இம்மானுவேல் மக்ரோன் “இஸ்லாம் நெருக்கடியில் இருப்பதாகவும், இஸ்லாமிய தீவிரவாதத்திலிருந்து பிரான்சின் மதச்சார்பற்ற மதிப்பீடுகளை பாதுகாக்க வேண்டும் என்று பேசியிருந்தார்.

தனிமனித பயங்கரவாத தாக்குதலை பயன்படுத்தி மதத்தின் மீதான வெறுப்பைத் தூண்டும் பிரெஞ்சு அதிபரின் பேச்சு பரவலாக கண்டனத்துக்குள்ளானது.

இஸ்லாம் குறித்து சர்ச்சை கருத்து – பிரான்ஸ் அதிபருக்கு வலுக்கும் எதிர்ப்பு

இந்நிலையில் டெல்லி இந்திய இஸ்லாமிய கலாச்சார மையத்தின் பெயர்ப் பலகையின் மீது மத வெறுப்பைத் தூண்டும் போஸ்டர் ஒட்டப்பட்டது தொடர்பாக சமூக செயல்பாட்டாளர் சாகேத் கோகலே ட்வீட் செய்திருந்தார்.

“இது மிகத் தெளிவாகவும், நேரடியாகவும் ஒரு வெறுப்பு குற்றம்” என்று கூறிய அவர், “இது தொடர்பாக முதல் தகவல் அறிக்கை (எஃப்ஐஆர்) பதிவு செய்யப்பட்டதா என்று டெல்லி போலீசுக்கு எஸ்எம்எஸ் அனுப்பியுள்ளேன்” என்று தெரிவித்திருந்தார்.

அதைத் தொடர்ந்து, பொருத்தமான சட்டப் பிரிவுகளின் கீழ் தேவையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று டெல்லி போலீஸ் ட்விட்டரில் அவருக்கு பதில் அளித்திருந்தது.

முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்ட தகவலையும் அவருக்கு ட்வீட் செய்தது, டெல்லி போலீஸ்.

“இந்த வழக்கில் நடவடிக்கை எடுப்பதை தொடர்ந்து உறுதி செய்வேன்” என்றும் சாகேத் கோகலே தெரிவித்திருக்கிறார்.

ஆனால், இது தொடர்பாக பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையில், பிரிவுகள் 295A (எந்த ஒரு பிரிவினரின் மதம் அல்லது மத நம்பிக்கைகளை காயப்படுத்தும் நோக்கத்துடன் வேண்டுமென்றே செய்யப்படும் தீய செயல்கள்), பிரிவு 153A (மதம், இனம், பிறப்பிடம், இருப்பிடம், மொழி ஆகியவற்றின் அடிப்படையில் வெவ்வேறு குழுக்களிடையே பகைமையை தூண்டுவதும், நல்லிணக்கத்தை பராமரிப்பதற்கு எதிரான செயல்களை செய்வது” ஆகியவை குறிப்பிடப்படவில்லை என்கிறது thewire.in செய்தி.

ஐஐசிசி-ன் துணைத் தலைவர் எஸ் எம் கான், இந்த நிகழ்வு துரதிர்ஷ்டவசமானது என்று குறிப்பிட்டு அதற்கு கண்டனம் தெரிவித்திருக்கிறார். “ஐஐசிசி-ல் மதங்களுக்கு இடையேயான உரையாடல், விவாதங்கள், தேசிய ஒருமைப்பாட்டை வள்ரத்தல் ஆகியவற்றில் நாங்கள் நம்பிக்கை வைக்கிறோம். எந்த ஒரு பயங்கரவாத செயலையும் நாங்கள் ஆதரிக்கிறோம் என்று சொல்வது அபத்தமானதும், முழுக்க முழுக்க ஆதாரமற்றதும் ஆகும்” என்று அவர் விளக்கியிருக்கிறார்.

“1981-ல் பதிவு செய்யப்பட்ட இந்திய இஸ்லாமிய கலாச்சார மையத்தின் நோக்கம், நாட்டு மக்களிடையே பரஸ்பர புரிதலையும், நல்லிணக்கத்தையும் வளர்ப்பது ஆகும். மேலும் சகிப்புத்தன்மை கொண்ட, தாராளவாத, முன்போக்கு, பகுத்தறிவு பூர்வமான இஸ்லாமின் உண்மையான முகத்தை பரப்புவது” என்று இந்த அமைப்பின் இணையதளம் தெரிவிப்பதாக தி வயர் செய்தி தெரிவிக்கிறது. இந்த நிறுவனத்துக்கு அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி 1984-ம் ஆண்டு ஆகஸ்ட் 24-ம் தேதி அடிக்கல் நாட்டினார்.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்