“நான் தொப்பி அணிந்து நாடாளுமன்றத்திற்குச் செல்ல முடியும் என்றால், ஒரு பெண் ஏன் ஹிஜாப் அணிந்து கல்லூரிக்குச் செல்ல முடியாது?” என்று ஆல் இந்தியா மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீன் கட்சியின் தலைவர் அசாதுதீன் ஓவைசி தெரிவித்துள்ளார்.
கர்நாடகா மாநிலம் உடுப்பியில் உள்ள அரசு மகளிர் கல்லூரியில் ஹிஜாப் அணிந்து வந்த இஸ்லாமிய மாணவிகளை வகுப்பறைக்குள் அனுமதிக்கப்படாததை எதிர்த்து கர்நாடக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுக்கள் மீதான விசாரணையின் முடிவில் இந்த வழக்கைப் பெரிய அமர்விற்கு மாற்றி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஹிஜாப் தடை தொடர்கிறது – வழக்கை பெரிய அமர்விற்கு மாற்றி கர்நாடக உயர் நீதிமன்றம் உத்தரவு
நேற்று (பிப்பிரவரி 8) கர்நாடகாவில் ஹிஜாப் அணிந்து வந்த முஸ்கான் என்ற மாணவியை நோக்கிக் காவி துண்டு அணிந்த மாணவர்கள் ‘ஜெய் ஸ்ரீ ராம்’ என்று முழக்கமிட்ட அதற்கு எதிர்வினையாக அந்த மாணவி அல்லாஹு அக்பர் என்று முழக்கமிட்டது சமூக வலைத்தளங்களில் பேசுபொருளானது.
அந்த இஸ்லாமிய மாணவி முஸ்கான் மற்றும் அவரது குடும்பத்தினரை ஒவைசி தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அதில் “மதம் மற்றும் அவளது விருப்பத்தின் சுதந்திரத்தைப் பயன்படுத்துவதிலும், கல்விக்கான தனது அர்ப்பணிப்பிலும் அவள் உறுதியாக இருக்க வேண்டும் என்று நான் பிரார்த்தனை செய்தேன். அவளின் துணிச்சல் நமக்கெல்லாம் தைரியத்தை ஊட்டியுள்ளது” என்று அவர்களிடம் தெரிவித்திருந்ததாக ஓவைசி ட்விட்டரில் ட்வீட் செய்துள்ளார்.
“ஹிஜாப் அணியும் உரிமைக்காகப் போராடும் நமது சகோதரிகளின் போராட்டம் வெற்றிபெற நான் பிரார்த்திக்கிறேன். கர்நாடகாவின் பாஜக அரசின் இந்த போக்கைக் கண்டிப்பதாக ஒவைசி தெரிவித்துள்ளார்.
ஹிஜாப் விவகாரம்: இஸ்லாமியப் பெண்களின் கல்வியை பறிக்கும் இந்துத்துவா – சித்தராமையா குற்றச்சாட்டு
நாளுக்கு நாள் வெறுப்பு அரசியல் இந்தியாவில் எப்படி வலுவடைந்து வருகிறது என்பதையே இந்த ஹிஜாப் விவகாரம் காட்டுகிறது. வெறுப்பு அரசியலை ஆளும் பாஜக அரசு ஊக்கப்படுத்துகிறது. இஸ்லாமியப் பெண்களின் ஹிஜாப் அணியும் உரிமையை மறுப்பது என்பது அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படை உரிமையை மீறுவதாகும் என்று ஒவைசி தெரிவித்துள்ளார்.
“ஒருவர் என்ன உடை உடுத்த வேண்டும், என்ன சாப்பிட வேண்டும் என்பதை இங்கு யாரும் தீர்மானிக்க முடியாது என்பதை உச்ச நீதிமன்ற தீர்ப்புகள் தெளிவுபடுத்தியுள்ளன. கர்நாடகாவில் படிக்கும் இஸ்லாமிய மாணவிகள் நீண்ட காலமாக ஹிஜாப் அணிந்திருக்கிறார்கள். அதில் என்ன தவறு இருக்கிறது, அது யாரைத் தொந்தரவு செய்கிறது” என்று ஆல் இந்தியா மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீன் கட்சியின் தலைவர் அசாதுதீன் ஒவைசி தெரிவித்துள்ளார்.
Source : indiatvnews
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.