Aran Sei

பட்டினிச்சாவு குறித்து தவறான தகவல் அளித்த ஒன்றிய அரசு – அறிக்கை தயார் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவு

‘இந்தியாவில் பட்டினிச் சாவுகளே இல்லை’ என அது குறித்த உச்ச நீதிமன்றத்தின் கேள்விக்கு ஒன்றிய அரசு பதில் அளித்துள்ளது.

சமூக ஆர்வலர்கள் அனுன் தவான், இஷான் தவான் மற்றும் குஞ்சனா சிங் ஆகியோர் இணைந்து தாக்கல் செய்த மனுவில், தமிழகத்தின் அம்மா உணவகம் எவ்வாறு சுயஉதவிக் குழுக்களால் ஈடுபடுத்தப்பட்டு, ஏழைகளுக்குச் சுகாதாரமான உணவுகளை வழங்குவதன் மூலம் மாபெரும் வெற்றியைப் பெற்றது. மேலும் ராஜஸ்தானின் அன்னபூர்ணா ரசோய், கர்நாடகாவில் உள்ள இந்திரா கேண்டீன்கள், டெல்லி ஆம் ஆத்மி கேன்டீன், ஆந்திராவின் அண்ணா கேண்டீன், ஜார்கண்ட் முக்கியமந்திரி தல் பட் மற்றும் ஒடிசாவின் ஆஹார் மையம் வெற்றி அடைந்துள்ளன.

சமூக சமையலறைகளைச் செயல்படுத்துவதற்கான திட்டத்தை உருவாக்க வேண்டும். “எந்தவொரு நபரும் வெறும் வயிற்றில் தூங்கக் கூடாது” என்பதை உறுதிப்படுத்தவும் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமைச் செயலாளர்களுக்கு உத்தரவிட வேண்டும். பொது விநியோகத் திட்டத்தின் எல்லைக்கு அப்பாற்பட்ட தேசிய உணவுத் தொகுப்பை ஒன்றிய அரசு உருவாக்க வேண்டும் என்று மனு கூறியுள்ளது.

இதையொட்டிய உச்சநீதிமன்ற கேள்விக்கு 2015-2016 அறிக்கையைக் காட்டி ஒன்றிய அரசு பதில் அளித்துள்ளது.

“நீங்கள் ஏன் 2015-2016 அறிக்கையைப் பார்த்து இப்போது பட்டினி சாவுகள் இல்லை என்று சொல்கிறீர்கள்? தற்போது என்ன நிலைமை என்பதைப் பற்றி தரவுகள் உங்களிடம் இல்லையா? இதற்கும் நீங்கள் ஒரு செய்தித்தாள் செய்தியைப் பார்த்துத்தான் சொல்ல வேண்டுமா? என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரமணா ஒன்றிய அரசிடம் கேள்வி கேட்டுள்ளார்.

இந்தியாவில் உள்ள எந்த மாநிலமும் பட்டினிச் சாவுகளைப் பற்றிப் புகாரளிக்கவில்லை என்று ஒன்றிய அரசு தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தை உச்சநீதிமன்ற அமர்வு குறிப்பிட்டுப் பேசத் துவங்கியது.

உங்கள் அதிகாரிகளிடம் பட்டினிச் சாவுகள் பற்றிய சமீபத்திய தகவல்கள் ஏதேனும் இருக்கிறதா? பட்டினிச் சாவுகள் ஏற்படுகிறதா இல்லையா என்பதைக் குறிக்கும் ஆய்வறிக்கை ஏதேனும் உள்ளதா? எங்களுக்குக் கொஞ்சம் தரவுகள் கொடுங்கள் என்று உச்சநீதிமன்றம் கேட்டுள்ளது.

“எங்களிடம் 131 உணவு தொடர்பான நலத்திட்டங்கள் உள்ளன. இந்த உணவுத் திட்டங்களுக்கு வழங்கப்படும் நிதியிலேயே பெரும் தட்டுப்பாடு உள்ளது. ஊட்டச்சத்துக் குறைபாடு இருப்பது உண்மைதான், அதனைப் போக்க சமூக சமையலறைகள் தேவை, ஆனால் அதற்கு நிதியளிப்பதுதான் பெரும் பிரச்சினை” என்று இதற்குப் பதிலளித்த ஒன்றிய தலைமை வழக்கறிஞர் வேணுகோபால் குறிப்பிட்டார்.

ஏழைகளுக்கு உணவுப் பாதுகாப்பை உறுதி செய்ய மாநிலங்களுக்கு ஆதரவளிக்கும் சமூக சமையலறை திட்டங்களின் சாத்தியக்கூறுகளை ஆராய வேண்டும். மாநிலங்களுக்குக் கூடுதலாக 2% உணவு தானியங்களை வழங்க வேண்டும் என்று ஒன்றிய அரசை உச்சநீதிமன்றம் கேட்டுக் கொண்டுள்ளது.

சமூக சமையலறை திட்டங்களுக்கான பரிந்துரைகளுடன் ஊட்டச்சத்துக் குறைபாடு மற்றும் பட்டினி சாவுகளின் நிலை குறித்த அறிக்கைகளை 2 வாரங்களில் தாக்கல் செய்யுமாறு அனைத்து மாநிலங்களையும் உச்சநீதிமன்றம் கேட்டுக் கொண்டுள்ளது.

“பசியால் இறக்கும் மக்களுக்கு உணவு வழங்குவதே ஒவ்வொரு மக்கள் நல அரசின் முதல் பொறுப்பு” என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரமணா கூறியுள்ளார்.

உலகெங்கும் 82 கோடிக்கும் அதிகமானோர் ஊட்டச்சத்துக் குறைபாட்டுடன் இருக்க அவர்களில் 19 கோடிக்கும் அதிகமானோர் இந்தியாவில் இருக்கிறார்கள். இந்தியாவில் 14.8% பேர் ஊட்டச்சத்துக் குறைபாட்டுடன் இருக்கிறார்கள், இது உலகளாவிய மற்றும் ஆசியச் சராசரியை விட அதிகம்” என்று 2018 இல் வெளியான உணவு மற்றும் வேளாண்மை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது என்று இந்த மனுவில் கூறப்பட்டுள்ளது

நாட்டில் சுமார் 19 கோடி மக்கள் தினமும் இரவில் வெறும் வயிற்றில் உறங்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாகத் தேசிய சுகாதார ஆய்வு 2017 இல் தெரிவித்தது. மேலும், பட்டினி மற்றும் ஊட்டச்சத்துக் குறைபாட்டால், தினமும் சுமார் 4500 ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகள் இறக்கின்றனர், பசியின் காரணமாக, குழந்தைகள் மட்டும் ஒவ்வொரு ஆண்டும் 3 லட்சத்துக்கும் அதிகமான இறப்புகள் ஏற்படுகிறது என்று புள்ளிவிவரங்கள் கூறுகின்றன

 

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்