Aran Sei

நீதிமன்ற உத்தரவுகளை புறக்கணிக்கும் ஐஏஎஸ்களின் பதவியைப் பறிக்க வேண்டும் – உயர் நீதிமன்றம்

Image Credits: The Hindu

நீதிமன்ற உத்தரவுகளைத் துச்சமாக நினைத்துப் புறக்கணிக்கும் ஐஏஎஸ் அதிகாரிகளின் பதவியைப் பறிக்க வேண்டுமென சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

1998-ம் ஆண்டு, தாம்பரம் நகராட்சி ஆணையராகப் பணியாற்றிய பழனி, எவ்வித டெண்டரும் கோராமால் ரூ.83,920 மதிப்பிலான பல்வேறு பணிகளை மேற்கொண்டதாகக் கூறி அவருக்கு எதிராகக் குற்றம் சாட்டப்பட்டது.

குற்றச்சாட்டுகளை விசாரித்த அதிகாரி குற்றச்சாட்டுகள் நிருபணம் ஆகவில்லை என அறிக்கை அளித்தார்.

குஜராத் சட்டமன்ற நடவடிக்கைகள் – இணையத்தில் வெளியிட வழக்கு – உயர் நீதிமன்றம் நோட்டீஸ்

ஆனால், நகராட்சி நிர்வாகத் துறை செயலாளர் அந்த அறிக்கையை ஏற்க மறுத்ததுடன், துறை ரீதியான விசாரணை நிலுவையில் வைத்து 2001-ம் ஆண்டு அவரை பணி ஓய்வு பெற அனுமதித்தார்.

பின்னர், 2005-ம் ஆண்டு, அவசியம் இல்லாமல் அவசரப் பணிகளை மேற்கொள்வதற்கான சட்டப்பிரிவுகளை பயன்படுத்தி ரூ.83,920 மதிப்பிலான பணிகளை மேற்கொண்டதற்காக அவருடைய ஓய்வூதியத்தில் ஒவ்வொரு மாதமும் 200 ரூபாய் வீதம் பிடித்தம் செய்யும் வகையில் தண்டனை விதித்து உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை எதிர்த்துப் பழனி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் பதிலளித்த தமிழக அரசு, அனைத்து விதிகளையும் பின்பற்றியே தண்டனை விதிக்கப்பட்டதாகவும், அதில் எந்த விதிமீறலும் இல்லை எனவும் தெரிவித்துள்ளது.

ஒரு பெண் தனது விருப்பத்தோடு எடுத்த முடிவில் யாரும் தலையிட முடியாது – கல்கத்தா உயர் நீதிமன்றம்

வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.வைத்தியநாதன், குற்றச்சாட்டு குறிப்பாணையில் இடிபாடுகளை அகற்ற லாரி அமர்த்தியது, தெரு விளக்குகளுக்குப் பியூஸ் கேரியர் வாங்கியது, மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிக்கு மின் மோட்டார் வாங்கியது உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டதற்காக மனுதாரருக்கு எதிராகக் குற்றச்சாட்டுகள் கூறப்பட்டுள்ளதை குறிப்பிட்டு, இது அவசரகால பணிகள் இல்லையெனக் கூற முடியாது எனவும், அசம்பாவித சமவங்களை தடுக்கும் வகையில் ஒரு லட்சத்திற்கும் குறைவான தொகையையே பயன்படுத்தி இருக்கிறார் என்பதால் பழனிக்கு விதிக்கப்பட்ட தண்டனையை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார்.

” போராடுவது அடிப்படை உரிமை, கட்டுப்படுத்தவோ மட்டுப்படுத்தவோ முடியாது” – உச்சநீதிமன்றம்

மேலும், விதிமீறல் கட்டிடங்கள் மீது எடுக்கப்படும் நடவடிக்கையை எதிர்த்து அளிக்கப்படும் விண்ணப்பங்கள் மீது குறித்த காலத்திற்குள் முடிவெடுக்க உயர் நீதிமன்றம் உத்தரவுகளை பிறப்பித்தபோதும் அதை அதிகாரிகள் அமல்படுத்துவதில்லை எனவும், நீதிமன்ற உத்தரவுகளை துச்சமாக நினைக்கும் அதிகாரிகளின் ஐஏஎஸ் பதவியைப் பறிக்க வேண்டுமெனவும் தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

நீதிமன்ற உத்தரவிற்கு கீழ்படியாமல் இருப்பது கடமையைத் தவறுவதற்கு சமமானது எனத் தெரிவித்துள்ளார்.

நகராட்சி ஆணையராக இருந்த மனுதாரர் பழனி தனது அதிகார வரம்பிற்கு உட்பட்டு தன் கடமையைச் செய்ததற்காகத் தண்டித்திருக்க கூடாது எனவும் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்