”ஒரு ஆசிரியர் பள்ளி மாணவியுடன் அத்துமீறி நடந்து கொண்டதற்காக திமுக மற்றும் திகவைச் சேர்ந்தவர்கள் அப்பள்ளியை அவமானப்படுத்தி வருகின்றனர்” என்று பிஎஸ்பிபி பள்ளி விவகாரம் தொடர்பாக, மாநிலங்களவை உறுப்பினரும் பாஜக மூத்த தலைவருமான சுப்ரமணியன் சுவாமி கருத்து தெரிவித்துள்ளார்.
சென்னையின் கே.கே.நகரில் உள்ள பத்ம சேஷாத்ரி பால பவன் (பிஎஸ்பிபி) பள்ளி மாணவர்களிடம் பாலியல் சீண்டலும், பாலியல் துன்புறுத்தலும் செய்த வணிகவியல் (Commerce) ஆசியர் கே.கே.ராஜகோபாலன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பள்ளியின் முன்னாள் மாணவர்கள், பிஎஸ்பிபி பள்ளி நிர்வாகத்திடம் புகாரளித்திருந்தனர்.
மேலும், இவர் மீது பல்வேறு காலகட்டங்களில் புகார் அளிக்கப்பட்டாலும், பள்ளி நிர்வாகம் அதைக் கண்டுகொள்ளவில்லை என்றும் புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதைடுத்து, பாலியல் சீண்டல் புகாரில் சிக்கியுள்ள ஆசிரியர் கே.ராஜகோபாலனை கைது செய்த காவல்துறை, போக்சோ சட்டம் உட்பட ஐந்து பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணையை மேற்கொண்டு வருகிறது. அப்பள்ளி நிர்வாகத்தைச் சேர்ந்தவர்களும் விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், பாஜகவின் மூத்த தலைவர் சுப்ரமணிய சுவாமி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், ”சென்னையில் மூன்று கிளைகளுடன், 10,000-ம் மாணவர்கள் பயிலும், மதிப்புமிக்க பத்ம சேஷாத்ரி பால பவன் பள்ளி பிராமணர்களால் நிர்வகிக்கப்படுகிறது. ஒரு ஆசிரியர் பள்ளி மாணவியுடன் அத்துமீறி நடந்து கொண்டதற்காக திமுக மற்றும் திகவைச் சேர்ந்தவர்கள் அப்பள்ளியை அவமானப்படுத்தி வருகின்றனர். தமிழக முதலமைச்சர் இந்த குண்டர்களைத் தடுக்கவில்லை என்றால், பிஎஸ்பிபிக்கு ஆதரவாக நான் களமிறங்குவேன்” என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மேலும், ”பிஎஸ்பிபி விவகாரம் தொடர்பாக என்னை அனுகியவர்களிடம் தமிழக பாஜக என்ன செய்து கொண்டிருக்கிறது என்று கேள்வியெழுப்பினேன், அதற்கு அவர்கள் பாஜக செயலற்று கிடக்கிறது என்று கூறினர்” என்று மாநிலங்களவை உறுப்பினரும் பாஜக மூத்த தலைவருமான சுப்ரமணியன் சுவாமி பதிவிட்டுள்ளார்.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.