Aran Sei

காந்தியை கொன்ற கோட்சேவுக்கு தலைவணங்குகிறேன் – இந்துத்துவ சாமியார் காளிச்சரண் சர்ச்சை பேச்சு

credits : firstpost

“மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி நாட்டை அழித்துவிட்டார், நான் காந்தியை படுகொலை செய்த நாதுராம் கோட்சேவை தலைவணங்குகிறேன்” என்று இந்துத்துவ தலைவர் பேசிய கருத்து சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

காங்கிரஸ் ஆளும் மாநிலமான சத்தீஸ்கரில், தர்மா சன்சாத் என்கிற மதக் கூட்டம் நடைபெற்றது. இரண்டு நாட்கள் நடைபெற்ற இந்நிகழ்வில் இறுதியாக பேசிய இந்துத்துவ தலைவரான காளிச்சரண் மகராஜ், “இஸ்லாமிய மதத்தின் நோக்கம் அரசியலின் வழியாக இந்த தேசத்தை கைப்பற்றுவது தான். கடந்த 1947 ஆம் ஆண்டு, நமது கண் முன்னரே அவர்கள் இந்த தேசத்தை கைப்பற்றினர் (இந்தியா – பாகிஸ்தான் பிரிவினை), இவ்வாறு தான் ஈரான், ஈராக், ஆஃப்கானிஸ்தான் கைப்பற்றப்பட்டது. அரசியலின் வழியாகத்தான் பாகிஸ்தானையும், வங்கதேசத்தையும் கைப்பற்றினார்கள்” என்று கூறியுள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், ”இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக இருக்கும் பகுதிகளில், காவியை பயன்படுத்த காவல்துறை அனுமதி மறுக்கிறார்கள். இது காவல்துறையின் தவறு இல்லை. காவல்துறை அரசு நிர்வாகிகளின் கீழ் செயல்படும் அடிமை, அரசு நிர்வாகிகள் அரசாங்கத்தின் கீழ் செயல்படும் அடிமை. ஆனால், அரசாங்கமே ஆட்சி பொறுப்பில் இருக்கும் அரசியல் தலைவரின் அடிமை தான். எனவே, ஒரு பலம்வாயந்த இந்து அரசியல் தலைவர் உருவாகும் வரை காவல்துறை நமக்கு ஆதரவு தராது” என்று தெரிவித்துள்ளதாக டைம்ஸ் நவ் செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும், “மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி நாட்டை அழித்துவிட்டார், நான் காந்தியை படுகொலை செய்த நாதுராம் கோட்சேவை தலைவணங்குகிறேன்” என்றும் கூறியுள்ளார்.

தர்மா சன்சாத் கூட்டத்தில் காளிச்சரண் ஆற்றிய உரை, தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இது தொடர்பாக, சத்தீஸ்கர் மாநில காங்கிரஸ் நிர்வாகி சுஷில் ஆனந்த் ஷுக்லா, ”மகாத்மா காந்தியை இழிவுப்படுத்தும் வகையில் பேசிய பேச்சு கடும் கண்டனத்திற்குரியது. முதலில் காளிச்சரண் ஒரு துறவி தானா  என்பதை நிரூபிக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

தர்மா சன்சாத் நிகழ்வு தொடர்பாக, காங்கிரஸ் தலைவர் பிரமோத் டூபே, காவல்துறையில் அளித்த புகாரின் அடிப்படையில், காளிச்சரண் மீது, இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 505(2), 294 ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக சத்தீஸ்கர் மாநிலத்தின் முதல்வர் பூபேஷ் பாகல், ”இந்த கருத்துக்கள் எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. இதற்கு வன்மையான கண்டனத்தை பதிவு செய்கிறோம். இதற்கு சட்டத்தின்படி உறுதியான நடவடிக்கைகள் எடுக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.

ஹரித்வாரில் கடந்த டிசம்பர் 17 முதல் 19 வரை நடைபெற்ற தர்மா சன்சாத் கூட்டத்தில், இஸ்லாமியர்களை இனப்படுகொலை செய்ய வேண்டும் என்று இந்துத்துவ அமைப்பைச் சேர்ந்த தலைவர்கள் அழைப்பு விடுத்தனர்.

இவ்வாறு பேசியவர்கள் மீது உத்தரகண்ட் மாநில காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்காத நிலையில், உச்சநீதிமன்றம் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உச்சநீதிமன்ற வழக்கறிஞர்கள் தலைமை நீதிபதி என்.வி.ரமணா-வுக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்