தன்னால் ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்திற்கு செல்ல முடியாது என்றும், அப்படிச் செல்வதாக இருந்தால் அதற்கு முன் தனது தலை வெட்டப்பட வேண்டும் என்றும் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
இந்திய ஒற்றுமை யாத்திரை தற்போது பஞ்சாபில் நடைபெற்று வரும் நிலையில், யாத்திரையின் இடையே ஹோஷியார்பூரில் ராகுல் காந்தி இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: ”இன்றைய யாத்திரையின்போது தொண்டர் ஒருவர் என்னை கட்டிப்பிடிக்க முயன்றதை பாதுகாப்பு குறைபாடாக நான் கருதவில்லை. பாதுகாப்புப் படையினர் அவரை சோதனை செய்தே அனுப்பி உள்ளனர். உணர்ச்சி மிகுதியில் அவர் என்னை கட்டிப்பிடிக்க முயன்றார். இது ஒரு பெரிய பிரச்சினை இல்லை. இது அடிக்கடி நடப்பதுதான். இந்த யாத்திரைக்கு மிகப் பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. நிறைய மக்கள் மிகுந்த உணர்ச்சிவசப்பட்டு விடுகிறார்கள்.
24 மணி நேரமும் இந்து – இஸ்லாமியர் இடையே பாஜக வெறுப்புணர்வை பரப்பி வருகிறது – ராகுல்காந்தி பேச்சு
இந்திய ஒற்றுமை யாத்திரையில் பங்கேற்க வருண் காந்திக்கு அழைப்பு விடுக்கப்படுமா என்று கேட்கிறீர்கள். வருண் காந்தி பாஜகவில் இருக்கிறார். அவர் இங்கு வந்தால் அது அவருக்கு பிரச்சினையாகிவிடும். எனது சித்தாந்தமும் அவரது சித்தாந்தமும் ஒன்று அல்ல. என்னால் ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்திற்குச் செல்ல முடியாது. செல்வதாக இருந்தால் அதற்கு முன் என் தலை வெட்டப்பட வேண்டும். அதற்குப் பிறகு எனது உடலை வேண்டுமானால் அங்கு கொண்டு செல்ல முடியும். எனது குடும்பத்திற்கென்று சித்தாந்தம் உள்ளது. வருண் காந்தி மற்றொரு சித்தாந்தத்தை பின்பற்றுபவர். அந்த சித்தாந்தத்தை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது.
1984-ல் சீக்கியர்களுக்கு எதிராக நிகழ்ந்த படுகொலைகளுக்காக நான் மன்னிப்பு கோர வேண்டும் என்று அகாலி தளம் கோருவது பற்றி கேட்கிறீர்கள். இது தொடர்பாக பிரதமராக இருந்தபோது மன்மோகன் சிங் நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு குறித்து தெளிவாக விளக்கிவிட்டார். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் தெளிவுபடுத்தி இருக்கிறார். கடந்த காலத்தில் நிகழ்ந்த இந்த விவகாரம் தொடர்பாக நானும் எனது கருத்தை ஏற்கனவே தெளிவுபடுத்திவிட்டேன்.
நாட்டில் நிலவும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதில் ஊடகங்களுக்கு முக்கியப் பங்கு இருக்கிறது. விவசாயிகள் பிரச்சினை, வேலைவாய்ப்பின்மை, சிறு-குறு தொழில் நிறுவனங்கள் சந்திக்கும் பிரச்சினைகள் குறித்தெல்லாம் ஊடகங்கள் பேச வேண்டும். முக்கியப் பிரச்சினைகளில் ஊடகங்கள் அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்” என்று ராகுல் காந்தி தெரிவித்தார்.
Bjp Government gives approval to Tamilnadu Tableau | Republic Day Parade 2023 | Deva’s Update 88
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.