இந்த நாட்டின் மிகச் சிறந்த அந்தோலன் ஜீவி மகாத்மா காந்தி தான், எனக் காங்கிரஸ் தலைவர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெற வலியுறுத்தி டெல்லி எல்லையில் விவசாயிகள் கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தப் பரப்பான சூழலில் நாடாளுமன்றம் கூட்டப்பட்டது. அதில் குடியரசு தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் பேசிய பிரதமர் மோடி,” கடந்த சில ஆண்டுகளில் அந்தோலன் ஜீவி (தொழில் முறை போராட்டக்காரர்கள்) எனும் புதிய இனம் உருவாகியுள்ளது. அவர்களை நீங்கள் அனைத்து போராட்டத்திலும் பார்க்கலாம். அவர்கள் உண்மையில் ஒட்டுண்ணிகள், அவர்களிடமிருந்து இந்தத் தேசத்தை நாம் பாதுகாக்க வேண்டும்” என்று கூறியிருந்தார்.
பிரதமரின் கருத்தைக் கடுமையாகக் கண்டித்துள்ள எதிர்கட்சிகள் மற்றும் விவசாயிகள் சங்கங்கள், நான் அந்தோலன் எனும் ஹேஷ்டேக்கை பயன்படுத்தி தங்களின் எதிர்ப்பைப் பதிவு செய்கின்றனர்.
I am a proud andolan jeevi. The quintessential andolan jeevi was Mahatma Gandhi.#iamanandolanjeevi
— P. Chidambaram (@PChidambaram_IN) February 10, 2021
இந்நிலையில் முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், ”நான் ஒரு பெருமைமிக்க அந்தோலன் ஜீவி. மிகச் சிறந்த அந்தோலன் ஜீவி மகாத்மா காந்தி தான்” எனப் பதிவிட்டுள்ளார். மேலும், அந்தப் பதிவில் #iamanandolanjeevi (நான் அந்தோலன் ஜீவி) எனும் ஹேஷ்டேக்கையும் அவர் இணைத்துள்ளார்.
நமக்கு அன்றாடம் உணவளிப்பவர்கள் ஒட்டுண்ணிகளா ? – பாஜகவின் ஆணவத்தை பாருங்கள் : ஹர்சிம்ரத் கவுர் பாதல்
முன்னதாக, மக்களவையில் பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்சிம்ரத் கவுர் பாதல், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளைப் பிரதமர் ஒட்டுண்ணிகள் என்கிறார், நமக்கு அன்றாடம் உணவு வழங்குபவர்களைப் பிரதமர் ஒட்டுண்ணிகள் எனக் குறிப்பிட்டற்கு கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்திருந்தார்.
” மத ரீதியாகவும், மாநில ரீதியாகவும் மக்களை பிரிக்க பாஜக அரசு சதி ” : ராகேஷ் திகாயத்
பாரதிய கிசான் சங்கத்தின் தலைவர் ராகேஷ் டிகாய்ட், ”இந்தத் தேசத்திற்காக உயிரை விட்ட பகத் சிங் ஒட்டுண்ணியா? அல்லது இந்த விவசாய போராட்டத்தில் ஈடுபட்டு உயிரிழந்துள்ள 150 பேர் ஒட்டுண்ணியா?” எனக் கேள்வியெழுப்பியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.