Aran Sei

டெல்லி கலவர வழக்கில் கைது செய்யப்பட்ட நடாஷா நர்வால் – 3 வார பிணைக்கு பின் சிறையில் அடைப்பு

டந்த ஆண்டு, கிழக்கு  டெல்லி கலவர வழக்கில் தொடர்பிருப்பதாக கைது செய்யப்பட்டிருக்கும் பிஜ்ரா டோட் அமைப்பைச் சேர்ந்த நடாஷா நர்வால் மூன்று வாரப் பிணைக்கு பின்பு மீண்டும் சிறைக்கு திரும்பியுள்ளார் என பிஜ்ரா டோட் அமைப்பு தெரிவித்துள்ளது.

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தின்போது கிழக்கு டெல்லியில் உள்ள பல்வேறு பகுதிகளில் கலவரம் ஏற்பட்டது. இதில் தொடர்பிருப்பதாக கூறி ஜவஹர்லால் பல்கலைக்கழக மாணவரும் பிஜ்ரா டோட் அமைப்பின் நிறுவனர்களில் ஒருவருமான நடாஷா நர்வாலை காவல்துறையினர் கைது செய்தனர். இதில் அவருக்கும் பிணை வழங்கப்பட்டதை அடுத்து அவரைச் சட்டவிரோத (நடவடிக்கைகள்) தடுப்பு சட்டத்தில் டெல்லி காவல்துறையினர் கைது செய்தனர்.

திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நடாஷா நர்வாலின் தந்தை, மகாவீர் நர்வால், கொரோனா தொற்றின் காரணமாக மே 9 ஆம் தேதி உயிரிழந்ததை அடுத்து, அவருக்கு மூன்று வாரம் பிணை வழங்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் பிணை முடிந்த அவர் மே 30 ஆம் தேதி மாலை சிறைக்கு திரும்பி விட்டார் என பிஜ்ரா டோட் அமைப்பு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக அந்த அமைப்பு அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் பதிவில், ”கொரோனா தொற்றில் தந்தை உயிரிழந்ததால், டெல்லி உயர்நீதிமன்றம் வழங்கியிருந்த மூன்று வாரப் பிணை நிறைவடைந்ததை அடுத்து நடாஷா மீண்டும் சிறையில் சரணடைந்துள்ளார். அவர் விரைவில் விடுதலையடைவார் என்ற நம்பிக்கையில், மீண்டும் ஆழ்ந்த கோபத்தோடும் இழப்போடும் அவளிடம் இருந்து விடை பெறுகிறோம். திகார் சிறை அதிகாரிகளிடம் நடாஷா சரணடைந்துள்ள நிலையில், நடாஷா, தேவாங்கனா உள்ளிட்ட அரசியல் கைதிகளை நிபந்தனையின்றி உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்ற எங்களின் கோரிக்கையை மீண்டும் வலியுறுத்துகிறோம்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

நடாஷா நர்வால் திகார் சிறை எண் 6ல் சரணடைந்துள்ளதை உறுதிபடுத்தியுள்ள டெல்லி சிறைச்சாலைகள் தலைமை இயக்குநர் சந்தீப் கோயல், ”நடாஷா வீட்டில் இருந்து வந்துள்ளதால், அவர் அடுத்த இரண்டு வாரங்களுக்குத் தனிமைப்படுத்தப்பட்டு, அவரது உடல்நிலை கண்காணிக்கப்படும். பிறகு, அவர் சிறை எண் 6ல் உள்ள கைதுகளுடன் அடைக்கப்படுவார்” என தெரிவித்துள்ளதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்