Aran Sei

ஹைட்ரோகார்பன் கிணறுகள் அமைக்க அனுமதி கோரும் ஓ.என்.ஜி.சி நிறுவனம் – அனுமதியளிக்கக்கூடாதென தமிழ்நாடு முதலமைச்சருக்கு பூவுலகின் நண்பர்கள் வேண்டுகோள்

ரியலூர் மாவட்டத்தில் ஹைட்ரோகார்பன் ஆய்வுக் கிணறுகள் அமைக்க சுற்றுச்சூழல் அனுமதி கோரும் ஓ.என்.ஜி.சி நிறுவனத்தின் விண்ணப்பத்தை நிராகரிக்க வேண்டுமென தமிழ்நாடு முதலமைச்சருக்கு  பூவுலகின் நண்பர்கள் அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.

காவிரி டெல்டாவில் மீண்டும் ஹைட்ரோகார்பன் எடுக்கும் முயற்சியை தடுத்திட வேண்டும் – தமிழ்நாடு அரசுக்கு பூவுலகின் நண்பர்கள் கோரிக்கை

இதுகுறித்து பூவுலகின் நண்பர்கள் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், ஹைட்ரோகார்பன் எடுப்புக் கொள்கையின் கீழ் மூன்றாம் கட்ட ஏலத்தில் தமிழ்நாட்டின் புதுக்கோட்டை, இராமநாதபுரம் பகுதிகளை சேர்த்ததால் அந்த ஏலத்தை நிறுத்த வேண்டும் என்றும், தமிழ்நாட்டில் எந்தப் பகுதியையும் ஹைட்ரோகார்பன் ஆய்வுக்காக ஏலத்தில் கொண்டு வரக் கூடாது என்றும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதி இரண்டு நாட்களே நிறைவடைந்துள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளது.

இந்நிலையில், அரியலூர் மாவட்டத்தில் 10 ஹைட்ரோகார்பன் ஆய்வுக் கிணறுகள் அமைப்பதற்கான சுற்றுச்சூழல் அனுமதிகோரி ஓ.என்.ஜி.சி நிறுவனம் மாநில சுற்றுச்சூழல் மதிப்பீட்டு ஆணையத்திற்கு கடிதம் எழுதியுள்ளது அதிச்சியளிக்கிறது என்று தெரிவித்துள்ளது.

‘பெல், எண்ணூர் ஆலைகள் இருக்க, வேதாந்தாவிற்கு மட்டும் அனுமதி என்பது மக்கள் விரோதம்’ – பூவுலகின் நண்பர்கள் சுந்தரராஜன்

அரியலூர் மாவட்டத்தில் ஜெயங்கொண்டம் சுற்றுவட்டாரப் பகுதியில் 10 ஆய்வுக் கிணறுகளையும் கடலூர் மாவட்டத்தின் நெய்வேலி சுற்று வட்டாரப் பகுதியில் 5 ஆய்வுக் கிணறுகளையும் அமைப்பதற்கு ஓ.என்.ஜி.சி நிறுவனம் திட்டமிட்டுள்ளதாகவும், இதில் முதற்கட்டமாக அரியலூர் மாவட்டத்தில் 10 ஆய்வுக் கிணறுகள் அமைப்பதற்கான சுற்றுச்சூழல் அனுமதி கோரி ஓ.என்.ஜி.சி நிறுவனம் தமிழ்நாடு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்திடம் விண்ணப்பித்துள்ளதாகவும் பூவுலகின் நண்பர்கள் அமைப்பு அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

அதுமட்டுமின்றி, கடந்த ஜூன் 13ஆம் தேதி ஹைட்ரோகார்பன் திட்டங்கள்குறித்து தமிழ்நாடு முதல்வர் எழுதிய கடிதத்தில், தமிழ் நாட்டில் ஹைட்ரோகார்பன் ஆய்வு மற்றும் உற்பத்தி செய்யத் தேவைப்படும் அனுமதிகளை தமிழ்நாடு அரசு ஒருபோதும் வழங்காது எனத் தெரிவித்துள்ள போதும், அதை கிஞ்சித்தும் மதிக்காமல் இரண்டே நாளில் ஹைட்ரோகார்பன் ஆய்வுக் கிணறுகளுக்கு ஓ.என்.ஜி.சி நிறுவனம் சுற்றுச்சூழல் அனுமதி கோரியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது என்றும் அந்த அமைப்பு கூறியுள்ளது.

நியூட்ரினோ திட்டத்திற்கான டாடா நிறுவனத்தின் விண்ணப்பத்தை நிராகரிக்க வேண்டும் – தமிழ்நாடு அரசுக்கு பூவுலகின் நண்பர்கள் வேண்டுகோள்

எனவே, தமிழ்நாடு சுற்றுச்சூழல்துறையின் கீழ் இயங்கும் மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் உடனடியாக ஓ.என்.ஜி.சி அளித்துள்ள இந்த விண்ணப்பத்தை நிராகரிக்குமாறு உத்தரவிட வேண்டுமென்று தமிழ்நாடு முதலமைச்சருக்கு பூவுலகின் நண்பர்கள் அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்