Aran Sei

காஷ்மீர் என்கவுன்டர்: காவல்துறையின் விசாரணை அறிக்கையை நிராகரித்த கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தினர்

டந்த மாதம், காஷ்மீர் ஹைதர்போரா என்கவுன்டரில் கொல்லப்பட்ட மூன்று உள்ளூர்வாசிகளின் குடும்பங்கள், காவல்துறையின் சிறப்பு விசாரணைக் குழுவின் (எஸ்ஐடி) விசாரணை அறிக்கையை நிராகரித்துள்ளன.

இவ்வறிக்கை பொய்களால் உருவாக்கப்பட்டுள்ளது என்று அவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த அரசியல் கட்சிகளும் அறிக்கையை நிராகரித்துள்ளன.

என்கவுன்டரில் கொல்லப்பட்ட நான்கு பேரில் ஒருவரான அமீர் மக்ரேயின் தந்தை லத்தீஃப் மக்ரே, “சிறப்பு விசாரணைக் குழுவின் அறிக்கை பொய்களால் ஆனது. அவர்கள் தங்களைக் காப்பாற்றிக் கொள்ள மோசடியாக ஒரு அறிக்கையை அளித்துள்ளனர். முழுக்க பொய் சொல்கிறார்கள்” என்று குற்றஞ்சாட்டியுள்ளார்.

‘என் மகன் நிரபராதி என நிரூபிக்கவே போராட வேண்டியுள்ளது’ – காஷ்மீர் என்கவுண்டரில் கொல்லப்பட்டவரின் தந்தையின் போராட்டம்

இவ்வறிக்கை குறித்து, நேற்று(டிசம்பர் 30), சிறப்பு விசாரணைக் குழுவின் தலைவர் டிஐஜி சுஜித் குமார் சிங் கூறுகையில், விசாரணையில் அமீர் மக்ரே ஒரு தீவிரவாதி என்பதும், என்கவுண்டரில் கொல்லப்பட்ட வெளிநாட்டு தீவிரவாதி பிலால் பாயின் கூட்டாளி என்பதும் கண்டறியப்பட்டது என்று கூறியுள்ளார்.

நவம்பர் 15 அன்று நடந்த இந்த என்கவுண்டரில், அமீர் மக்ரே, பிலால் பாய் ஆகியோரைத் தவிர, உள்ளூர்வாசிகளான அல்தாப் பட் மற்றும் டாக்டர் முதாசிர் குல் ஆகியோரும் கொல்லப்பட்டனர்.

இரண்டு தீவிரவாதிகள் அல்தாப்பை மனிதக் கேடயமாக பயன்படுத்தியதாகவும், பின்னர் துப்பாக்கிச் சூட்டில் அல்தாப் கொல்லப்பட்டதாகவும்  டிஐஜி சுஜித் குமார் சிங் தெரிவித்துள்ளார்.

சிறப்பு விசாரணைக் குழுவின் அறிக்கையை நிராகரித்துள்ள அல்தாப்பின் சகோதரர் அப்துல் மஜீத் பட், “இது முற்றிலும் தவறான அறிக்கை. என் சகோதரரின் உடலில் சித்திரவதைக்கு உள்ளானதற்கான அடையாளங்கள் இருந்தன. நூற்றுக்கணக்கான பாதுகாப்பு படையினர் அங்கு இருக்கும்போது அவர் எப்படி மனிதக் கேடயமாக ஆக்கப்பட்டார்?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

“அப்பாவிகள் ரத்தம் சிந்துவது நிறுத்தப்பட வேண்டும்” – காஷ்மீர் பேரணியில் முழக்கம்

டாக்டர் முதாசிரின் தந்தை குலாம் முகமது ராதர் கூறுகையில், பாதுகாப்பு படையினருக்கு சாதகமாக இக்குழுவின் விசாரணை அறிக்கை உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். இந்த என்கவுன்டர் குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும் என்று கொல்லப்பட்ட உள்ளூர்வாசிகளின் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Source: New Indian Express

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்