Aran Sei

‘பெட்ரோல், டீசல் விலை குறைக்க முடியாததற்கு கடன் பத்திர சுமையே காரணம்’ – ஆர்.டி.ஐ. மூலம் அம்பலமானது ஒன்றிய அரசின் பொய்

credits : india tv news

கடந்த 2015-16 நிதியாண்டிலிருந்து தற்போது வரை 1.44 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள எண்ணெய் நிறுவனங்களின் கடன் பத்திரங்கள்மீது  ஒன்றிய எவ்வித அசல் தொகையும்  செலுத்தவில்லை  என்று தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்டத் தகவலின் வழியாகத் தெரியவந்துள்ளது.

எவ்வாறாயினும், 2014-15 நிதியாண்டில் ஒன்றிய  அரசு  கடன் தொகையில்  அசல்   தொகையாக 13262.85 கோடி ரூபாய் செலுத்தியுள்ளதாகவும்  சாகேத் கோகலே என்பவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெற்ற தகவலின் வழியாகக் கண்டறியப்பட்டுள்ளது.

மேலும்,  ஜூலை 31 2௦21 வரை  1.44 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள பெட்ரோல் கடன் பத்திரங்கள்மீது 130923.17 கோடி ரூபாய் கடன்மீதான அசலும், 34729.267 கோடி வட்டியும் நிலுவையிலுள்ளதாகவும்  அந்தத் தகவலின் வழியாகத் தெரியவந்துள்ளது.

இந்நிலையில், இந்தத் தகவலின்  நகலைத் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள  சாகேத் கோகலே, பெட்ரோல், டீசல்  விலை  குறைக்கப்படாததற்கு   கடன் பத்திரங்கள்  மீதான  வட்டிக்கும் அசலுக்கும்  கணிசமானத் தொகை செலுத்தப்படுவது தான் காரணம் என்று  நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த ஆகஸ்ட் 16 அன்று  கூறியது பொய் என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

கடந்த ஆகஸ்ட்  மாதம்  தமிழ் நாடு அரசு  பெட்ரோல் மீதான வரியை 3 ரூபாய் குறைத்து பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியிட்டிருந்தது.

இந்த அறிவிப்பைச் சுட்டிக்காட்டி, ஒன்றிய அரசும் வரியைக் குறைக்குமா என்று நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் கேள்வி எழுப்பப்பட்ட நிலையில்,  அதற்குப் பதில் அளித்த அவர், காங்கிரஸ் ஆட்சியில் பெட்ரோல், டீசலுக்கு மானியம் வழங்கியதால் (எண்ணெய் கடன் பத்திரம்) ஏற்பட்ட 1.3 லட்சம் கோடி கடனைத் திரும்பச் செலுத்த வேண்டும் என்று கூறினார். அத்துடன், அடுத்த ஐந்து ஆண்டுகளில் அந்தக் கடனுக்காக (எண்ணெய் கடன் பத்திரம்) 37,000 கோடி வட்டி செலுத்த வேண்டும் என்று கூறிய அவர் அதனால், பெட்ரோல், டீசலுக்கு வரியை குறைக்க முடியாது என்று திட்டவட்டமாக கூறிஇருந்தார்.

 

இந்நிலையில் நிதியமைச்சரின் அறிக்கைக் குறித்து  தெரிவித்துள்ள சாகேத் கோகலே, “பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கும்  எண்ணெய் நிறுவனங்களின் கடன் பத்திரங்களுக்கும் எந்தத் தொடர்புமில்லை என்று ஆர்.டி.ஐ  தகவலின் வழியாக தெள்ளத்தெளிவாகியுள்ளது” என்றும்  கூறியுள்ளார்.

மேலும், இந்தாண்டு  பெட்ரோல் மற்றும்  டீசல் மீதான அரசின் வரி  88% உயர்ந்து 3.35 லட்சம் கோடியாக இருந்தது என்று கடந்த ஆகஸ்ட் மாதம்  ஒன்றிய  பெட்ரோலியத் துறை இணைஅமைச்சர்   ராமேஷ்வர் தெலி நாடளுமன்றத்தில் கூறி இருந்தார்.

தற்போது, கடன் பத்திரங்கள் மீதான ஆண்டு வட்டியாக அரசு 9989 கோடி செலுத்தி வருவது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவலின் வழியாக தெரியவந்துள்ளது.

இந்நிலையில்,  ஒன்றிய அரசு  கடன் பத்திரங்களின்  மீதான  வட்டிக்கான  செலவீனமாக  9989 கோடி மட்டுமே செலுத்தி வரும் அதேவேளையில்,   பெட்ரோல் மற்றும்  டீசல் மீதான அரசின் வரியாக 3.35 லட்சம் கோடி பெற்று வருவதும் போது   பெட்ரோல் மற்றும்  டீசல் விலை குறைக்கப்படாதது ஏன்  என்ற   கேள்வி எழுந்துள்ளது.

.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்