Aran Sei

‘சென்னை உழைக்கும் மக்களின் குடியிருப்பு, நில உரிமையை உறுதிசெய்க’- 300க்கும் மேற்பட்டோர் கலந்துக்கொண்ட மனித சங்கிலி போராட்டம்

சென்னை மாநகர பூர்வக்குடி – உழைக்கும் மக்களின் குடியிருப்பு, நில உரிமையைத் தமிழக அரசு உறுதிசெய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி நகர்ப்புற குடியிருப்பு – நில உரிமை கூட்டமைப்பின் சார்பாக நேற்று (ஜனவரி 8) மாலை 3 மணிக்கு சென்னை எழும்பூர் இராஜரத்தினம் மைதானத்திற்கு அருகில் மனித சங்கிலி நடைபெற்றது. இதில் சென்னையின் பல்வேறு பகுதிகளில் இருந்து 300  மேற்பட்டோர் கலந்துகொண்டு தங்களது கோரிக்கைகளை முழக்கமிட்டனர்.
இந்த மனித சங்கிலிப் போராட்டத்தின் கோரிக்கைகளைத் தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் அந்தந்த தொகுதி சட்டமன்ற உறுப்பினர்களிடம் கடிதமாகக் கொடுக்கவுள்ளார்கள்.
மனித சங்கிலிப் போராட்டத்தின் உடனடி கோரிக்கைகள் :
1.  அன்னை சத்யவானி முத்து நகர் – நீண்ட நாட்களாக வீடிழந்து சென்னை நகரத்திற்குள் மாற்றுவீடுகள் கேட்டுப் போராடிவரும் 190 குடும்பங்களுக்கு உடனடியாகப் பொங்கலுக்குள் புளியந்தோப்பு கே.பி பார்க்கில் வீடுகளை வழங்க வேண்டும்.
2. பெரும்பாக்கம், செம்மஞ்சேரி, கண்ணகி நகர் – தமிழக அரசின் தவறான கொள்கையால் சென்னையில் இருந்து வெளியேற்றப்பட்ட பூர்வக்குடி – உழைக்கும் மக்களின் சீர்குலைக்கப்பட்ட வாழ்க்கையை மீட்டெடுக்கப் பொறுப்பேற்க வேண்டும். வேலைவாய்ப்பு, கல்வி, சுகாதாரம், போக்குவரத்துக்கு, பாதுகாப்பு என அடிப்படைத் தேவைகளை நிறைவுசெய்யும் வகையில் தனிச்சிறப்பான திட்டத்தை அறிவித்து உடனே செயல்படுத்த வேண்டும். பெரும்பாக்கத்தில் மேலும் மக்களைக் குடியமர்த்துவதை நிறுத்த வேண்டும்.
3. பக்கிங்காம்  கால்வாயோரம் வசிக்கும் மக்களைச் சென்னை நகரத்தை விட்டு வெளியேற்றக் கூடாது.குறிப்பாக பெரும்பாக்கத்தில் குடியமர்த்தக் கூடாது. அவர்கள் வசிக்கும் இடத்திற்கு அருகே வீடுகள் கட்டித்தரவேண்டும்.
4. கொளத்தூர் அவ்வை நகர் – வீடுகள் இடிக்கப்பட்டதில் பாதிக்கப்பட்ட அனைத்துக் குடும்பங்களுக்கும் அருகிலேயே பட்டாவுடன் மாற்று இடம் மற்றும் இழப்பீடு வழங்க வேண்டும்,  G.O. no. 267 / 567 யை அமல்படுத்த வேண்டும்.
5. காசிமேடு சுனாமி – 16 ஆண்டுகளாகப் போராடிவரும் சுனாமியால் பாதிக்கப்பட்ட காசிமேடு AUF மீனவர்களுக்கு அருகில் உள்ள கார்கில் நகரில் உடனே வீடுகள் வழங்க வேண்டும்.
6. திருவொற்றியூரில் இடிந்துவிழுந்த குடிசைமாற்று வாரியக் குடியிருப்பில் வசித்த குடும்பங்கள் தம் உடமைகளை இழந்துள்ளனர். தமிழக அரசு அறிவித்த ஒரு  லட்சம்   ரூபாய் போதுமானதல்ல, பாதிப்புக்குள்ளான அனைத்து குடும்பங்களுக்கும் ரூ. 5 லட்சம் இழப்பீடு வழங்கவேண்டும்.
7. சேத்துப்பட்டு MS நகர், கோட்டூர்புரம், சைதாப்பேட்டை, ராணி அண்ணாநகர், அயனாவரம் பச்சைக்கல்லு மற்றும் காந்தி நகர் –  பழைய வீடுகள் இடித்து மீண்டும் கட்டும்போது மக்கள் தொகை அடர்த்தியை (Population density) அதிகரிக்கும் வண்ணம் 8,10,14 மாடிகள் கட்ட கூடாது. பராமரிப்பு பொறுப்பை வாரியமே மேற்கொள்ளவேண்டும்
8.  வியாசர்பாடி சத்தியமூர்த்தி நகர், பெரம்பூர் ரமணாநகர், அசோக் பில்லர்:
கட்டிமுடிக்கப்பட்ட அடுக்குமாடிக் குடியிருப்புகளை உடனடியாக மக்களுக்கு வழங்க வேண்டும்.
9. வியாசர்பாடி அன்னை சத்யா நகர் –  பல ஆண்டுகளாகப் பட்டா வழங்காமல் இருக்கும் வியாசர்பாடி அன்னை சத்யா நகர் போன்ற மேம்படுத்தப்பட்ட பகுதிகளுக்கு உடனே பட்டா வழங்க வேண்டும். G.O. no. 267 / 567யை அமல்படுத்த வேண்டும்.
10.  கே.பி பார்க் – ABCD பிளாக் அனைத்திலும் இரண்டு லிப்ட் உள்ள நிலையில் ஒன்று மட்டுமே செயல்படுகிறது, பழுதடைந்துபோன லிப்ட்களை உடனடியாக சரிசெய்து இயக்க வேண்டும்.
11.  பட்டினப்பாக்கம் – கடலோரம் உள்ள நிலங்களை மீனவர்களுக்கான குடியிருப்புகளுக்கு ஒதுக்கவேண்டும்! பட்டினப்பாக்கத்தில் 25 ஏக்கர் பரப்பளவில் திட்டமிடப்பட்டுள்ள ‘மெரினா தொழில் பூங்கா’ திட்டத்தைக் கைவிடவேண்டும்!
என்ற கோரிக்கையை மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தினர். இத்தகைய பின் வரும் கோரிக்கைகளைக் கருத்தில் கொண்டு நகர்ப்புற குடியிருப்பு – நிலஉரிமை தொடர்பாகத் தமிழக அரசு கீழ்க்கண்ட கொள்கைகளை வகுத்திட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
1.    தலைமுறை தலைமுறையாக இந்நிலத்தில் வாழ்ந்துவரும் மக்களின் வாழ்விட உரிமையை உறுதிசெய்ய வேண்டும்.   அரசாணை (G.O.(MS)No. 267 / 567)  அடிப்படையில் ‘ஆட்சேபனையற்ற’ பொறம்போக்கு நிலங்களில் வசிப்பவர்களுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்க வேண்டும்.  தமிழ்நாடு நகர்ப்புற வளர்ச்சி திட்டத்தை (TNUDP)  அமல்படுத்த வேண்டும்.
2. சென்னை நகரத்தில் உள்ள அனைத்து நீர்நிலைகள் மற்றும் வழித்தடத்தின் ‘இன்றைய’ நிலை குறித்து அறிக்கை வெளியிட வேண்டும். நீர்நிலைகளுக்கான சுவடுகளே இல்லாத ‘கொளத்தூர் அவ்வை நகர்’ போன்ற பகுதிகளை ‘நீர்நிலை’ என்று சொல்லி வீடுகளை இடிக்காதே!
3. பக்கிங்காம், கூவம் போன்ற கால்வாயோரங்களில் வசிக்கும் குடிசைவாழ் மக்களை சென்னையைவிட்டு விரட்டக்கூடாது. மக்களின் வாழ்வாதாரத்தை அழிக்கக் கூடாது.
4. தமிழக அரசின் ‘வரைவு  மறுகுடியமர்வு மற்றும் மறுவாழ்வுக் கொள்கையில்’, வீடுகள் அப்புறப்படுத்தப்படும்பொழுது மறுகுடியமர்வு அவ்விடத்தில் இருந்து 5 கீ.மி சுற்றளவிற்குள் செய்யப்படும் என்று திருத்தம் செய்ய வேண்டும்.
5. சென்னை நகரத்தில் உள்ள காலிப் புறம்போக்கு நிலங்கள், அரசு நிலங்கள் மற்றும் குத்தகை நிலங்களை உழைக்கும் மக்களின் குடியிருப்பு தேவைக்குப் பயன்படுத்த வேண்டும்.
6. எந்த ஒரு TNHUDB (தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம்) குடியிருப்புகளும் இடித்து புதிதாகக் கட்டப்படும் காலம் வரை முறையான ‘தற்காலிக மாற்று குடியிருப்பு’ வழங்கவேண்டும். அனைத்து பிளாக்குகளையும் ஒரேநேரத்தில் இடிக்காமல் பகுதிபகுதியாக இடித்துக் கட்ட வேண்டும்.
7. கே.பி பார்க் போன்று பன்னடுக்கு மாடிகளை (10,12, 14மாடிகள்) கட்டக் கூடாது. மக்கள் தொகை அடர்த்தியை (Population Density) அதிகரிக்கக் கூடாது.Stilt + 4 தளம் என்பதை அமல்படுத்த வேண்டும்.
8. ஏழை எளிய மக்கள் வசிக்கும் வீடுகள் தரமற்று கட்டப்படுவதும் 25 ஆண்டுகள் கடந்த வீடுகள் இடிந்து விழுவதையும் கண்டு வருகிறோம். எனவே முறையான ஆய்வு செய்து தரமான கட்டிடம் கட்ட மக்கள் பிரதிநிதிகளை உள்ளடக்கிய மேற்பார்வை குழு அமைக்க வேண்டும்.
9. ‘நம் குடியிருப்பு, நம் பொறுப்பு’ என்று சொல்லிப் பராமரிப்புப் பணிகளை மக்கள் மீது திணிக்காமல் TNHUDB யே செய்ய வேண்டும்.
10.  TNHUDB குடியிருப்புகளில் வாழும் மக்கள் ‘பயனாளர்கள்’, ‘தற்காலிக குடியிருப்போர்’ என்ற நிலையை மாற்றி குடியிருப்புமீதும், நிலத்தின்மீதும் உரிய சட்ட அங்கீகாரம் வழங்கிடு!
11. TNHUDB இன் தன்னாட்சி உரிமையைப் பலிகொடுத்து  PMAY Urban என்ற பிரதமர் திட்டத்தின் கீழ் ஒரு AGENCY ஆக TNHUDB மாற்றப்பட்டுள்ளது.  ஒன்றிய அரசின் இத்திட்டம், TNHUDB இன் நோக்கத்தையே சிதைக்கும் காரணத்தினால் இத்திட்டத்தை தமிழக அரசு கைவிடவேண்டும்.
இந்த மனித சங்கிலி போராட்டத்தில் பங்கேற்ற தோழர்கள் இக்கோரிக்கைகளை விளக்கி பேசினர். இப்போராட்டத்தை நடத்திய  நகர்ப்புற குடியிருப்பு – நில உரிமை கூட்டமைப்பிலுள்ள அமைப்புகள்,
-சிறிராம், சோசலிச தொழிலாளர் மையம்,
-செபாஸ்டியன், குடிசை மாற்று வாரியக் குடியிருப்போர் நலக்கமிட்டி,
-சிலம்பு செல்வன், தமிழ்த்தேசிய விடுதலை இயக்கம்,
-மோகன், அம்பேத்கர் பொதுவுடைமை முன்னணி,
-சாதிக் அலி, பாப்புலர் ஃபரண்ட் ஆப் இந்தியா,
-உமாபதி, திராவிடர் விடுதலைக் கழகம்,
-பூர்ணிமா, மக்கள் அதிகாரம்,
-ஆர். கீதா, அமைப்புசாரா தொழிலாளர் கூட்டமைப்பு,
-அருண், தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கம்,
-அன்புவேந்தன், இந்திய குடியரசு கட்சி,
-கபடி மாறன்,  தமிழ்நாடு மீனவர் முன்னேற்ற சங்கம்,
-சுகுமார், சத்தியமூர்த்தி நகர் மக்கள் போராட்ட கமிட்டி,
-வீரத்தமிழ்த்தேசிய தமிழர், சிபிஐ (எம்.எல்) செந்தாரகை
-இசையரசு, சமூக செயல்பாட்டாளர்
-நாகராஜன், வியாசர்பாடி அன்னை சத்யாநகர் குடியிருப்போர் சங்கம்
-தாமஸ், கொளத்தூர் அவ்வை நகர்
-சாந்தி, IUF
-புஷ்பா,வீட்டுப்பணியாளர்கள் சங்கம்
-ராமகிருஷ்ணன், அசோக் நகர் திட்டப்பகுதி
-கவுதம், மயிலை அம்பேத்கர் பாலம்
aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்