Aran Sei

`நியமிக்கப்பட்ட பகுதிக்குள் எப்படிப் போராடுவது?’ – ஷாஹீன் பாக் போராட்டக்காரர்கள்

Image Credits: Zee News

“ஷாஹீன் பாக் போராட்டக்காரர்கள், குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பைத் தெரிவிக்க, சாலையை மறித்தது ஏற்றுக்கொள்ள முடியாதது” என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்தத் தீர்ப்பை மறு சீராய்வு செய்யக் கோரி சாலைமறியலில் ஈடுபட்ட போராட்டக்காரர்கள் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

அக்டோபர் 7-ம் தேதி, நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் தலைமையிலான அமர்வு இந்த வழக்கை விசாரித்தது. அப்போது, “ஷாஹீன் பாகின் தாய்மார்கள், குழந்தைகள் மற்றும் மூத்த குடிமக்கள் ஆகியோரால் சிஏஏ-க்கு எதிராகப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியதாகக் கூறப்பட்டது. இந்தப் போராட்டம் பயணிகளுக்குச் சிரமமாக இருந்தது” என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.

“அரசு நிர்வாகத்தால் தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகளில் மட்டுமே போராட்டங்களை நடத்த வேண்டும். எதிர்ப்பைத் தெரிவிப்பதற்கான உரிமை என்பது பொதுமக்கள் இயக்கத்தின் உரிமையைத் தடுக்கக் கூடாது. எதிர்ப்பு ஒரு தொல்லையாக மாறக் கூடாது” என்று அந்த தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

இந்தத் தீர்ப்பு, அமைதியாகப் போராடுவதற்கான உரிமையை உறுதிசெய்திருந்தாலும், பொது இடங்களைக் காலவரையின்றி ஆக்கிரமிக்க முடியாது என்பதையும் தெளிவுபடுத்தியது என ‘தி இந்து’ இணையத்தளம் குறிப்பிட்டுள்ளது.

“அடிப்படை உரிமைகள் தனியான ஒன்றல்ல; ஒன்றுடன் ஒன்று தொடர்புடையது. போராட்டக்காரர்களின் உரிமையும் பயணிகளின் உரிமையும் சமம்தான். அவை பரஸ்பர மரியாதையுடன் இணைந்திருக்க வேண்டும்” என்று அக்டோபர் மாதம் வெளியான தீர்ப்பில் நீதிமன்றம் விளக்கமளித்தது.

இப்போது, காசி பாத்திமா உட்பட 11 போராட்டக்காரர்கள் மறு சீராய்வு மனுவைத் தாக்கல் செய்துள்ளனர். மனுவில், “போராட்டக்காரர்கள் தரப்பு நியாயத்தை நீதிமன்றம் கேட்கவே இல்லை” என்று கூறப்பட்டுள்ளது.

“நியமிக்கப்பட்ட பகுதிகளுக்குள் இருந்தபடி எவ்வாறு போராட முடியும்” என்று மறு சீராய்வு  மனுவில் கேட்கப்பட்டுள்ளது.

“நியமிக்கப்பட்ட பகுதிகளுக்குள் போராட்டங்களைக் கட்டுப்படுத்துவது எதிர்ப்பு மற்றும் ஆர்ப்பாட்டங்களின் அடிப்படையையே சீர்குலைக்கிறது. போராட்டங்களின் வாயிலாகத்தான் குடிமக்களால் தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்ய முடியும். இந்தச் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்துவதால் குடிமக்களின் கவலைகளைத் தெரிவிப்பதற்கான இடம் மறுக்கப்படுகிறது” என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

“சமீபத்திய காலங்களில் மாணவர்கள் மற்றும் போராட்டக்காரர்களைத் தாக்குவதில் காவலர்கள் தன்னிச்சையாகச் செயல்படுகிறார்கள்” என்றும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு அமைதியான முறையில் போராடுபவர்களைத் தாக்கும் காவலர்களின் நடவடிக்கையை மறைக்கின்றது. இதனால், ஒருபோதும் அரசு நிர்வாகம் எதிர்ப்பாளர்களுடன் உரையாடலில் ஈடுபடாது. மாறாக அவர்கள் மீது வழக்குத் தொடுப்பது உட்பட அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும்” என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக வெளியான தீர்ப்பில் “இறுதியாக, கொரோனா தொற்றுதான் ‘கடவுளை’ போலத் தலையிட்டுப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவந்தது” என்று நீதிமன்றம் கூறியுள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்