Aran Sei

ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் என்ற கனவு எவ்வாறு மெய்பட்டது? – கியான் ப்ரகாஷ்

வஹர்லால் நேரு பல்கலைக்கழகம்(JNU) அரசின் குரூரக் கண்களை ஈர்ப்பது ஏன்? அதற்கு ஒரு காரணம், அது தனித்துவமான நிறுவனமாக இருந்தது, இன்னும் இருக்கிறது என்பதோடு, இந்திராவின் தந்தை, இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் பெயரிடப்பட்டிருப்பதன் பெருமையை அனுபவிக்கிறது என்பதும்தான்.

நீதிபதியும், கல்வி அமைச்சருமான எம்.சி. சுக்லா 1964 ம் ஆண்டின் இறுதியிலேயே ஜேஎன்யூ மசோதாவை நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்திய போதிலும், நேரு இறந்த மே 27 ஆம் தேதிக்கு பிறகுதான், பல்கலைகழகத்தை நிறுவுவது குறித்த விவாதங்கள் தொடங்கின.

1964 ஆகஸ்ட் மாதத்தில், ஜவஹர்லால் நேரு நினைவு நிதியம், ஏற்கனவே உள்ள பல்கலைக்கழகங்களிலிருந்து மாறுபட்ட ஒரு உயர்கல்வி நிறுவனத்தை, நேருவின் பெயரில் நிறுவுவது குறித்து விவாதிக்க வல்லுநர் குழுவை அமைத்தது.

அதற்கான மிகவும் விரிவான ஆலோசனை, தில்லி, ஃபோர்ட் அறக்கட்டளையின் முனைவர் டக்ளஸ் என்ஸ்மிங்கரிடமிருந்து வந்தது. “இந்தியாவில் உயர் கல்விக்கான புதிய தேசிய கல்வி நிறுவனத்திற்கான தகவலேடு” என்று தலைப்பிடப்பட்டிருந்த அவரது ஒன்பது பக்கக் குறிப்பு, நேரு அகாடமி என்ற ஒரு சிறிய குடியிருப்பு நிறுவனத்தை அல்லது உயர் அல்லது மேம்பட்ட ஆய்வுகளுக்கான நேரு தேசிய நிறுவனம் அல்லது நேரு தேசிய பல்கலை கழகத்தை முன்மொழிந்தது. இந்த நிறுவனம் சுதந்திரமான தாகவும், அரசாங்கத்தின் தலையீட்டிலிருந்து விடுபட்டதாகவும் இருப்பதை உறுதி செய்யவதற்காக ஒரு சிறப்புச் சட்டத்தை இயற்றுமாறும் அது அறிவுறுத்தியது.

மேலும் அந்த குறிப்பு, நிறுவனத்தின் கட்டமைப்பு, ஒரு பாரம்பரியமற்ற மற்றும் பல்துறைமை (interdisciplinary) பாடத்திட்டம் மற்றும் வளாகத்திற்குள்ளேயே குடியிருக்கக் கூடிய திறமையான ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களைத் தேர்ந்தெடுத்தல் ஆகியவற்றையும் கொண்டிருந்தது. இந்த வளாகம் தில்லியில் அல்லது பெங்களுரு, நாசிக், ஐதராபாத் அல்லது திருவனந்தபுரம் போன்ற, நகர்புற மற்றும் தொழில்துறை மையத்திற்கு அருகில் இருக்க வேண்டும் என பரிந்துரைத்தது‌.

இடதுசாரி பத்திரிகையாளரும், பிரபல பொது விவகார இதழான ‘செமினார்’ பத்திரிகையின் நிறுவன ஆசிரியருமான ரொமேஷ் தாப்பர் தலைமையிலான வல்லுநர் குழு, என்ஸ்மிங்கரின் முன்மொழிவை இறுதி திட்டமாக உருவாக்கியது. அந்த குழு, நிறுவனத்திற்கு நேரு அகாடமி அல்லது நேரு மேம்பட்ட கல்வி நிறுவனம்(Nehru Institute of Advanced Studies) என்ற பெயர்களை முன்மொழிந்தது. தாப்பர் குழு ஒரு வித்தியாசமான ஆராய்ச்சி சார்ந்த சிறிய நிறுவனத்தைத்தான்  கற்பனை செய்தது. அது தேசிய ஒருங்கிணைப்பு மற்றும் உலகளாவிய கண்ணோட்டம் ஆகிய நேருவின் கருத்துக்களை முன்னெடுத்து செல்வதாக இருக்க வேண்டும் என்றும், நேருவின் பரந்த மனப்பான்மை கொண்ட அறிவியல் முன்னோக்கிற்கு ஏற்ப புதிய நிறுவனம், பல்துறைமை கல்வி மற்றும் ஆய்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதாகவும் மற்றும் பிற இந்திய பல்கலைக்கழகங்களின் ஆண்டு இறுதித் தேர்வு முறையை கைவிடுவதாகவும் இருக்க வேண்டும் என கருதியது. அத்தகைய நிறுவனம்  இந்தியா மற்றும் வெளிநாடுகளின் மிகச் சிறந்த ஆசிரியர்களை நியமனம் செய்து தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்கு கற்பிப்பதாக இருக்க வேண்டும் எனவும் அது எண்ணியது. ஆனால் அமைவிடத்தை பொறுத்தவரை, என்ஸ்மிங்கரின் கருத்தை ஏற்றுக் கொள்ளாமல் இந்த குழு, பன்னாட்டு பரிமாற்றங்களுக்கு வசதியாக இருக்கும் என்பதுடன் பிரதமராக நேருவின் ஆட்சியில் இருக்கும் நகரமாக  இருப்பதாலும், தில்லியில்தான் இருக்கவேண்டும் என்று உறுதியாக வலியுறுத்தியது.

இந்த பல்கலைக்கழகத்தை உருவாக்குவதில் என்ஸ்மிங்கரின் பங்கைப் பற்றி அறிந்தால், 1970களில் இருந்த பல்கலைகழக இடதுசாரி மாணவர்கள் குழு ஆத்திரமடைந்திருக்கும். மாணவர் ஆர்வலர்கள் தீவிரமான அமெரிக்க எதிர்ப்பாளர்களாக இருந்தது மட்டுமல்ல, நேரு மற்றும் இந்திராவின் ஆட்சியின் கீழ், இந்தியாவும் கூட சோவியத் ஒன்றியத்திற்கு ஆதரவாகவே இருந்தது. ஆனால் தனது சோசலிச சார்புக்கு நடுவிலும் நேரு, அமெரிக்க உதவியை வெறுத்து ஒதுக்கவில்லை. பொதுத்துறையில் மிக உயர்ந்த நோக்குடன் நிறுவப்பட்ட இரும்பாலைத்  திட்டங்களுக்கும், கனரகத் தொழிற்சாலைகளுக்கும் மற்றும் நவீனமயமாக்கலுக்கும் தேவையான சிறப்பறிவுத் திறனையும் (expertise), உதவியையும், ஃபோர்ட் அறக்கட்டளை உட்பட அனைவரிடமிருந்தும்  பெற்றுக் கொண்டார்.

அந்த அறக்கட்டளை நிறுவனம், கிராமப்புற சமூகவியலாளரும், கார்னெல் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றவரும், அமெரிக்காவில் வேளாண் துறையில் பணியாற்றியவருமான என்ஸ்மிங்கரை, “மனித நலன்” என்ற திட்டத்தை இந்தியாவில் முன்னெடுக்க நிறுவப்பட்ட கள அலுவலகத்தின் தலைவராக நியமித்தது.

என்ஸ்மிங்கரும் தனது தேர்வை மிகச்சிறந்தது என்பதை நிரூபிக்கும் வகையில் செலாற்றினார். அவர், ஒரு மனித நல நிறுவனம் என்ற அடிப்படையில் அறக்கட்டளையின் வெற்றி, அது அமெரிக்க அரசாங்கத்திடமிருந்து தள்ளி இருப்பதை அடிப்படையாகக் கொண்டது என்பதை அங்கீகரித்தார். இந்தியாவின் அரசியல் உணர்வுதிறன்களை அறிந்திருந்த அவர், இந்தியாவில் தனது அறக்கட்டளையை வளர்ச்சி மற்றும் சமூகப் பொறியியல் அமைப்பாகவும், முழுமையான தொழில்நுட்ப அமைப்பாகவும் நிலைநிறுத்தினார்‌. இந்தியா அடைய விரும்பிய “சோசலிச சமூக வடிவத்தை” ஆதரித்த அவர், திட்டங்களுக்கான தனி ரத்து (veto) அதிகாரத்தை, ஃபோர்டின் நியூயார்க் தலைமையகத்திடம் போராடிப் பெற்றார். மேலும் இந்திய அறிவியலாளர்களுடன் இணைந்து பணியாற்றுவதை உறுதி செய்தார். தில்லியில் தனது 19 ஆண்டுகால பணியில், வளர்ச்சிக்கான முன்னெடுப்புகளில் முக்கிய பகுதிகளை வடிவமைப்பதில், அறக்கட்டளையை புகுத்துவதில் வெற்றி பெற்றார்‌.

குடும்ப கட்டுப்பாடு மற்றும் கிராமப்புற சமூக மேம்பாடு போன்ற திட்டங்களுக்குத் தலைமை தாங்குவதவோடு, இந்திய பொது நிர்வாக நிறுவனம், தேசிய வடிவமைப்பு நிறுவனம், மற்றும் அகமதாபாத் மற்றும் கொல்கத்தாவில் உள்ள இந்திய மேலாண்மை நிறுவனங்கள் போன்ற பல முக்கியமான நிறுவனங்களை அமைக்க ஃபோர்ட் அறக்கட்டளை உதவியது. என்ஸ்மிங்கரின் வெற்றிக்கான திறவுகோல் அவர் நேருவுடன் ஏற்படுத்திக் கொண்ட ஒத்துணர்வு மிக்க நல்லுறவாகும். 1951 ஆம் ஆண்டு, தில்லியில் வந்திறங்கிய போது அவர், “நேருதான்  இந்தியா” என்று  முடிவு செய்தார். அவர் பிரதமர் மட்டுமல்ல, அயலுறவுத் துறை அமைச்சராகவும், திட்டக்குழு தலைவராகவும் இருந்தார்.

“மக்களிடம் நேரு, அவர்களிடமிருந்து எதை எதிர்பார்க்கிறார் எனக் கூறினார். மக்கள் அவர் தாங்கள் என்ன செய்ய வேண்டும் என நேரு கூற வேண்டும் என, அவரைப்  பார்த்தனர். ” என்கிறார் என்ஸ்மிங்கர்.

இதற்கேற்ப, என்ஸ்மிங்கர் அமைதியாக நேருவுடன் ஒரு பயன்தரும் உறவை உருவாக்கிக் கொண்டு, அவருக்கு அறக்கட்டளையின் அனைத்து நடவடிக்கைகளையும் அறிவித்ததோடு, அதன் அனைத்து நடவடிக்கைகளைப் பற்றியும் அவருடன் விவாதித்தார். இதனை அவர் இந்திய அரசால் நிர்ணயிக்கப்பட்ட முன்னுரிமைகள் மீதான தொழில்நுட்ப ஆலோசனைகள் மற்றும் நிதி உதவி என்ற வகையில் செய்தார். எந்த நேரத்திலும் நேருவைச் சந்திக்க மூன்று நாட்களுக்கு மேல் அவர் காத்திருக்க வேண்டி இருக்கவில்லை. மேலும், அவர்கள் இருவரும் நடைபெற்று வரும் செயல் திட்டங்களைப் பற்றி அடிக்கடி செய்திகளைப் பரிமாறிக் கொண்டனர்.

காலப்போக்கில், “உண்மையான இந்தியத் தன்மையைக் கொண்ட உறவை” வளர்த்துக் கொண்டதாக என்ஸ்மிங்கர் கூறுகிறார். நேருவை எந்த நேரத்திலும் தொடர்பு கொள்ளக் கூடிய செல்வாக்கு மிக்க நபராக என்ஸ்மிங்கர் விளங்கியதால்தான், தில்லி ஒருங்கிணைந்த முழுமைத் திட்டத்தை (Master plan) வடிவமைப்பதில் தலைமை தாங்கிய அமெரிக்க கட்டிடக்கலை கலைஞர் ஆல்பர்ட் மேயர் அவரை, “இந்தியாவின் மிக அதிக சக்திவாய்ந்த இரண்டாவது நபர்” என குறிப்பிட்டார். 1964 ஆம் ஆண்டு, நேருவின் மரணம் அவரை மிகவும் வருத்தமுறச் செய்தது. ஆனால் இந்திய அரசுடனான அவரது பயனுள்ள உறவு தொடர்ந்தது. அதனால், அவர் மிகவும் பாராட்டிய மற்றும் சுதந்திர இந்தியாவை உருவாக்கும் ஆண்டுகளில் யாருடன் மிக இணக்கமாக வேலை செய்தாரோ, அவர் பெயரால் ஒரு பல்கலைக்கழகத்தை உருவாக்குவதற்கான‌ ஆலோசனையை கேட்டதில் வியப்பொன்றும் இல்லை. என்ஸ்மிங்கரின் முன்மொழிவு திருத்தப்பட்டு மறு வரைவு செய்யப்பட்டு ஜேஎன்யூ விற்கான திட்டமாக மாறியது. ஃபோர்ட் அறக்கட்டளைத் தலைவரான அவர் பரிந்துரைத்தபடி, ஒரு சிறப்புச் சட்டம் நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. அது 1966 ஆம் ஆண்டு, ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகச் சட்டமாக நிறைவேறியது. 1969 ஆம் ஆணடு, பல்கலைக்கழகம், ஜிபி என அழைக்கப்பட்ட கோபால்சாமி பார்த்தசாரதியை துணை வேந்தராகக் கொண்டு முறையாக செயல்படத் துவங்கியது. ஆரவல்லி மலைத் தொடரின் அருகில் பாறைகள் நிறைந்த பகுதியில் நிரந்தர வளாகத்திற்கான கட்டுமானப் பணிகள் தொடங்கியிருந்த வேளையில், பல்கலைக்கழகம், நகரின் தெற்கு புறநகரில், உண்மையில் தேசிய நிர்வாக அகாடமிக்காக கட்டப்பட்ட கட்டிடத்தில் தற்காலிகமாக இயங்கியது.

அரசு நடத்திய புதிய ஜேஎன்யூ வளாகத்தின் ஒருங்கிணைந்த திட்டத்திற்கான வடிவமைப்பு போட்டிக்கு 68 முன்மொழிவுகள் வந்தன‌. போட்டியிட்ட கட்டிட கலைஞர்களிடம், நேருவின் அறிவின் ஒற்றுமைக் குறித்த கல்வித் தத்துவம், “இந்தியாவின் வேற்றுமையில் ஒற்றுமை”, மக்களாட்சியின் ஆன்மா மற்றும் சமூக நீதி ஆகியவை பொதிந்து பிரதிபலிக்கும் வகையில் கட்டிட வடிவமைப்பு இருக்க வேண்டும் என்று அரசு கூறியது.

அந்தக் கட்டளை, கட்டட வடிமைப்பு திட்டம் இந்தியாவின் மாநிலங்களையும், கலாச்சாரங்களை பொருத்தி இருக்க வேண்டும். ஆனால் அதனை “கேரள மாணவர்கள் கேரள இல்லத்திலும், பீகார் மாணவர்கள் பீகார் இல்லத்திலும் வாழ்வது” என்பதாக பொருள் கொள்ளக் கூடாது என்று கூறியது. இந்தியா முழுவதிலிருந்தும் வரும் மாணவர்களும், ஆசிரியர்களும் வேற்றுமையில் ஒற்றுமை என்ற கருத்தின் அடிப்படையில் ஒன்றாக இணைந்து வாழ வேண்டும் என்பதே அதன் நோக்கம்.

நேரு இருந்ததைப் போல “முற்றிலும் நவீனமானவர் இருப்பினும் பழமையில் வேரூன்றி நின்று அதன் சாரத்தை எடுத்துக் கொண்டவர். புதைபடிவங்களை அல்ல” அது போல அவரது பெயரிடப்படும் பல்கலைக்கழகமும் இருக்க வேண்டும்.

ஜேஎன்யூ  உண்மையில் கூறுவதானால் கல்வியில், அரசின் இலட்சியத்தை உள்ளடக்கியதாக, அதன் குடிமக்களுக்கு இந்தியனாக இருக்க, நேரு பாணியில் கற்றுக் கொடுப்பதாக இருக்க வேண்டும். இதில் முரண்பாடு என்னவெனில், வெளியில் இந்த நோக்கமே ஒட்டாமல் இருக்கும் நிலையில், இங்கு இது துல்லியமாகக் கட்டப்படுகிறது.

கட்டிடக்கலைப் போட்டிகள் தொடர்ந்தன‌. இறுதியில் சி.பி.குக்ரேஜாவின் விண்ணப்பம் வெற்றி பெற்றது. அது பாறைகளுக்கும் புதர்களுக்கும் நடுவே அந்த நிலப்பரப்பை பிரதிபலிக்கும் வகையில் சிவப்பு செங்கற்களால் ஒரு வளாகத்தைக் கட்ட திட்டமிட்டது‌. மாணவர்களின் உறைவிடங்களுக்கு, நாட்டின் ஒருமைப்பாட்டைக் குறிக்கும் வகையில் இந்திய நதிகளின் பெயர்கள் வைக்கப்பட்டன. 1973 ல் மாணவர்கள் மட்டும் தங்கக் கூடிய புதிய வளாகம்  தயாரானது. ஆசிரியர்கள் பழைய வளாகத்திலேயே தங்கி இருந்தனர். திட்டமிட்டதைவிட ஒரு வருடத்திற்கு முன்பே பல்கலைகழகம் முழுமையாக செயல்பட ஆரம்பித்துவிட்டது.

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக பட்டதாரியும், முன்னாள் சட்டத்தரணியும் (Barrister), நிர்வாகியுமான(Diplomat) துணை வேந்தர் பார்த்தசாரதி இந்தியா முழுவதிலிருந்தும் மற்றும் வெளிநாடுகளிலிருந்தும் சிறந்த ஆசிரியர்களை நியமனம் செய்தார். துவக்கத்தில் பெரும்பாலான மாணவர்கள் சலுகைப் பெற்ற, ஆங்கிலமயமாக்கப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்தவர்களாகவும், மேல்மட்ட கல்வி நிறுவனங்களில் பட்டம் பெற்றவர்களாகவுமே இருந்தனர். மாணவர் அமைப்பை பன்முகப்படுத்த, பொருளாதார ரீதியாக நலிவடைந்த பிரிவினர் மற்றும்  நாட்டில் அதிகாரபூர்வமாக பின்தங்கிய பகுதிகள் என அறிவிக்கப்பட்டுள்ள பகுதிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு முன்னுரிமை தரும் வகையில் 1974ல் சேர்க்கை முறையில் மாற்றம் கொண்டு வரப்பட்டது.

பார்த்தசாரதியும் அவருக்கு துணையாக விளங்கிய பதிவாளர் என்.வி.கே‌.மூர்த்தியும், நேருவியத் துணியிலிருந்து வெட்டப்பட்ட, மென்மையான, பரந்த நோக்குடைய தனிநபர்கள். அவர்கள் தங்கள் பன்முகப் பார்வைகளையும் கருத்துக்களையும் திறந்த மனதுடன் வைத்தனர். எதிர்ப்புகளைச் சகித்துக் கொண்டனர். இந்தியாவின் பன்முகத்தன்மையை ஆதரித்தனர். முற்போக்கு சமூக, அரசியல் விழுமியங்களை உயர்த்திப் பிடித்தனர். மேலும் பன்னாட்டுக் கண்ணோட்டத்தை வெளிப்படுத்தினர். அவர்கள் ஜேஎன்யூவை கல்விசார் சிறப்பான இடமாகவும், மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் நிர்வாகத்தினரிடையே சுதந்திரமான கருத்து பரிமாற்றத்தை வளர்த்தனர். இந்த சூழலில் பகுத்தறிவுவாதம் செழித்து வளர்ந்தது. ஆசிரியர் பணிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட பல வரலாற்றாசிரியர்களும், சமூகவியலாளர்களும் இடதுசாரிகளாக இருந்தனர். பட்டதாரி மாணவர்களே, மாணவர்களில் மிகப் பெரும்பான்மையினராக இருந்தனர். இளங்கலை மாணவர்கள் மொழியியல் வகுப்புகளுக்குள்ளேயே அடங்கினர். அதில் நேருவின் இளைய மருமகளும், சஞ்சை காந்தியின் மனைவியுமான மேனகா காந்தி, ஜெர்மன் மொழி பயிலும் மாணவியாக இருந்தார்.

1975 வரை பல்கலைக்கழகம் 800 மாணவர்களையும், 200ஆசிரியர்களையும் கொண்ட சிறிய நிறுவனமாகவே இருந்தது. இது முறைசாரா நேருக்கு நேர் உறவுகளையும், பரிமாற்றங்களையும் ஒன்று சேர்த்து சமூகமாக நெருக்கமாகப் பின்னப்பட்ட புறச்சூழலை வளர்த்தது‌.

ஆண்களுக்கும் பெண்களுக்கும், அருகருகே அமைந்திருந்த உறைவிட வளாகம், அவர்களுக்கிடையேயான உரையாடலுக்குத் தாராளமான சூழலையும், இருபாலருக்குமிடையே நட்பையும் உருவாக்கியது. இது இந்தியாவிற்கு பழக்கப்படாத ஒன்று.

(கியான் ப்ரகாஷ் எழுதிய ‘ஜேஎன்யூ கதைகள் : முதல் 50 ஆண்டுகள்’ என்ற நூலில் இடம்பெற்றுள்ள தகவல்களை மையமாக கொண்டு, www.scroll.in இணையதளத்தில் வெளியான கட்டுரையின் மொழியாக்கம்)

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்