Aran Sei

ஆண்டு வருமானம் 8 லட்சம் என நிர்ணயித்தது எப்படி ? உச்ச நீதிமன்றம் சராமாரி கேள்வி

credits : the indian express
”பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு (EWS) 10% இட ஒதுக்கீட்டை அறிமுகப்படுத்திய மூன்றே நாட்களில் அதற்கான ஆண்டு வருமான வரம்பாக 8 லட்சத்தை ஒன்றிய அரசு  கொண்டு வந்தது எப்படி” என்று உச்ச நீதிமன்றம் வியப்புடன் கேள்வியெழுப்பியுள்ளது.
கடந்த 2019 ஆம் ஆண்டு, ஜனவரி 14 ஆம் தேதி,  பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு (EWS) 10% இட ஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்பட்டது. இந்த சட்டம்  நடைமுறைப்படுத்தப்பட்ட மூன்றே நாட்களில் (ஜனவரி 17),  இதைப்  பயன்படுத்தும் நபர்களுடைய  குடும்பத்தின் ஆண்டு வருமானம் 8 இலட்சம் என நிர்ணயிக்கப்பட்டது.
பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கான  இட ஒதுக்கீட்டை நிர்ணயிப்பதற்கான அளவுகோல்களை மறு ஆய்வு செய்யும்படி ஒன்றிய அரசுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தி இருந்தது. அதனால் கடந்த ஆண்டு நவம்பர் 30 ஆம் தேதி ஒன்றிய அரசால் அமைக்கப்பட்ட மூவர் குழு தனது அறிக்கையை ஒன்றிய அரசிடம் டிசம்பர் 31 அன்று சமர்ப்பித்தது. அதில் 8 லட்சம் ஆண்டு குடும்ப வருமானம் நியாயமானது என்ற அந்த குழுவின் பரிந்துரையை தெரிவித்தது.
இது பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான இட ஒதுக்கீட்டில் உள்ள பொருளாதார (கிரீமிலேயர்) அளவுகோலை அப்படியே எடுத்துப் பயன்படுத்தியுள்ளது போல் தெரிகிறது என உச்சநீதிமன்றம் சந்தேகம் கிளப்பியுள்ளது.
பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினரை(EWS) நிர்ணயிப்பதற்கான பொருளாதார அளவுகோல்களை மறுபரிசீலனை செய்வதால் முதுகலை மருத்துவ படிப்பிற்கான நீட் நுழைவுத்தேர்வு சேர்க்கையில் (NEET-PG) தாமதம் ஏற்பட்டது. இதனைக் கண்டித்து இந்தியாவெங்கும் மருத்துவர்கள் போராட்டங்களை நடத்தியுள்ளனர்.
இந்நிலையில், பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினரின் வருமான வரம்பு, தொடர்பான வழக்கை விசாரித்து வரும் உச்ச நீதிமன்றம் “ஒன்றிய அரசால் அமைக்கப்பட்ட மூவர் குழு 8 லட்சம் வருமான வரம்பை நியாயப்படுத்த முயல்வது போல் தெரிகிறது. ஆனாலும் நாட்டின் நலன் கருதி முதுகலை மருத்துவ படிப்பிற்கான நீட் கலந்தாய்வு நடக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளது.
Source : The Hindu
aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்