Aran Sei

போர்ட்டோ ரிகாவின் தேர்தல் அரசியலில் இடதுசாரிகள் பொருந்தியது எப்படி?

போர்ட்டோ ரிகா மக்கள், அவர்களின் நவீனத் தாராளவாதிகளுக்கும் இரட்டைக் கட்சி முறைக்கும் இந்த மாதம் நடந்த தேர்தலில் மரண அடி கொடுத்துள்ளனர். முற்போக்கு சக்திகள் மிகப் பெரும் திருப்புமுனையை ஏற்படுத்தி இருக்கின்றனர்.

1968 இல் இருந்து நிலையான இரட்டை ஆட்சி முறையைப் பின்பற்றி வந்த போர்ட்டோ ரிகா பாரம்பரியமான வலது – இடது பிளவினால் அன்றி நாட்டின் நிலை குறித்த கேள்வியில் பிரிந்து விட்டன‌. முன்பு வலிமை வாய்ந்ததாக இருந்த பாப்புலர் ஜனநாயகக் கட்சி (PDP) அமெரிக்க அரசுடன் காமன்வெல்த் நிலையிலேயே நீடிக்க விரும்பியது. புதிய முற்போக்குக் கட்சி (PNP) தனி நாடு நிலைக்காக வாதாடியது.

இரு கட்சிகளுமே நவீனத் தாராளவாதக் கொள்கையைத் தழுவியவைதான். பாப்புலர் ஜனநாயகக் கட்சி இருபாலினத்தவர், திருநங்கைகள் போன்றோரின் உரிமைகளுக்கு ( LGBT -Lesbian,Gay,Bisexual,Transgender) ஆதரவு தரும் அளவு ஓரளவு அதிக தாராளவாதக் கட்சியாக விளங்கியது.

பல பத்தாண்டுகளாக 95% வாக்குகளுடன் இந்த இரு கட்சிகளே மாறி மாறி ஆட்சி அமைத்து வந்தன. சமூக ஜனநாயகப் பார்வை கொண்டிருந்த, ஆனால் சுதந்திரத்தையே முன்னிறுத்தியதால் போர்ட்டோ ரிகா சுதந்திரக் கட்சி(PIP) எப்போதும் பின்தங்கியே இருந்தது. தேசியவாதமில்லாத இடதுசாரி கட்சி, தொழிலாளர்கள் மற்றும் மாணவர்களுக்கிடையில் ஆழமாக வேரூன்றி இருந்தாலும் தேர்தலில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தியதில்லை.

நவம்பர் 3 ல் பொதுத் தேர்தலில், அனைவருடைய பார்வையும் அமெரிக்கத் தேர்தல்களில் நிலைத்திருக்க, போர்ட்டோ ரிகாவில் முற்போக்குக் கட்சிகள் இருகட்சி ஆட்சி முறைக்கு மரண அடி கொடுத்துள்ளனர். அந்த இரு கட்சிகளின் ஒட்டு மொத்த வாக்குகள் சுருங்க, பிஐபி யும், புதிய இடதுசாரி கட்சியும் பரந்த ஆதரவைப் பெற்றன. நவீனத் தாராளவாதம் கண்காட்சிப் பொருளானது.

நவீனத் தாராளவாதத்தின் பிளவு

இந்தத் தீவின் இருகட்சி ஆட்சி முறை முதன்முதலில் 2016 ல் பிளவுபடத் தொடங்கியது. அவற்றின் ஒட்டு மொத்த வாக்கு விழுக்காடு 96 லிருந்து 80 ஆக குறைந்தது. தோல்வியுற்ற ஆளுநர் (gubernatorial) வேட்பாளர் 2008 தேர்தலில்  42% வாக்குகளைப் பெற்றார்.

2016 ல் வெற்றி பெற்றவர் 41% வாக்குகளேயே பெற்றார். இரண்டு சுயேச்சை வேட்பாளர்கள் பல பத்தாண்டுகளாக பீடித்துள்ள ஊழல், சிக்கனம் ஆகியவற்றுடன் பொருளாதார வீழ்ச்சியின் காரணமாக வெறுப்புற்றிருந்த தொழிலாளர்களின் வாக்குகளை ஓரளவு பெற்றனர். அப்போதும் இடதுசாரிகள் கலப்புத் தீர்ப்புகளால், ஒப்பீட்டளவில் மிக மோசமாகவே இருந்தனர். இரு தாராளவாதக் கட்சிகளின் ஆதரவு வேகமாகக் குறைந்து வந்த போதும் அதை இடதுசாரிகள் பயன்படுத்திக்கொள்ளவில்லை.

பிறகு வந்தது வரலாற்றுச் சிறப்புமிக்க 2019 கோடைக்காலம். பிஎன்பி கட்சியின் ஆளுநர் ரிக்கார்டோ ரோசெல்லோவும்  உயர் அதிகாரிகளும் நடத்திய அரட்டை வெளியாகி அவர்களுடைய இனவாதம், பெண்ணடிமை வாதம், ஊழல், ஏழைகளின் மீதான கண்டனம் ஆகியவை நாட்டு மக்களை வரலாறு காணாத அளவு ஒன்று திரட்டியது. ஆயிரக்கணக்கான, லட்சக்கணக்கான மக்கள் ஆளுநரைப் பதவி விலகக் கோரி வீதிகளில் திரண்டனர்.

“ரிக்கி ரினன்சியா”(Ricky Renuncia-ரிக்கி பதவி விலகு) முழக்கம் உடனடியாக சமூகம் முழுதும் பரவியது. இளைஞர்கள் குறிப்பாக இளம்பெண்கள் போராட்டங்களில் தலைமை வகித்தனர். போர்ட்டோ ரிகா அரசியலமைப்பு வரலாற்றிலேயே முதன்முறையாக ஒரு ஆளுநர் பதவி விலகிய நிகழ்வு நடந்தேறியது. ஒரு சில வாரங்களில் ஆளுநர் பதவி விலகினார். இது அந்தத் தீவு இதுவரை காணாத ஒன்று.

2016  தேர்தலுக்குப் பின், முற்போக்குச் சக்திகள் ஒரு விரிவான நவீனத் தாராளவாத எதிர்ப்பு கட்சியை உருவாக்கப் பேச்சுவார்த்தை நடத்தினர். அந்தக் கட்சி நாட்டின் தன்மை (Status) குறித்த அனைத்துக் கருத்துகளையும் வரவேற்பதாகவும், பொதுவான காலனிய நிராகரிப்பு என்பதை விட்டு விலகி நிற்கவும் வேண்டும் என முடிவு செய்தனர். அதன் நோக்கம்: நாட்டின் அரசியல் அமைப்பை வேரோடு பிடுங்கி விட்டு தேசிய நிலை குறித்த கேள்விக்குப் பதில் இடது- வலது பாதையில் மறுசீரமைப்பு செய்வது.

இந்த விவாதங்கள் “குடிமக்கள் வெற்றி இயக்கம் (Citizens ‘ Victory Movement-MVC) என்ற அமைப்பை உருவாக்கியது. இந்தப் புதிய கட்சியின் ‘அவசர நடவடிக்கைகளாக’, ஊழலுக்கு எதிரான போர், தொழிலாளர் உரிமைகளை மீட்பது, பொது இடங்களையும் நிறுவனங்களையும் தனியார் மயமாக்குவதிலிருந்து காப்பது ஆகியன வரையறுக்கப்பட்டன.

இதற்கிடையே, எந்த அரசியல் திட்டத்திற்கும் சுதந்திரம் ஒரு பகுதியாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தி இதில் சேர் மறுத்த பிஐபி கட்சியும் தனது நிலையிலிருந்து விலகி தேசிய நிலைக்கு மாறாக சமூகப் பொருளாதாரப் பிரச்சினைகளில் கவனத்தைத் திருப்பியது.

இடதுசாரி ஏற்படுத்திய திருப்புமுனை

இந்த மாதம் நடந்த தேர்தல்கள், 2016 தேர்தல்களை விட அதிகமாக இருகட்சி முறைக்கும் நவீனத் தாராளவாதத்திற்கும் அதிர்ச்சியைக் கொடுத்தன. எம்விசி, பிஐபி கட்சிகளின் ஆளுநர் வேட்பாளர்கள் தலா 14 விழுக்காடு வாக்குகளைப் பெற்றனர்.

வெற்றி பெற்ற பிஎன்பி வேட்பாளர் 33% வாக்குகளையே பெற்றார். அதாவது வெறும் 5% வாக்கு வித்தியாசமே இருந்தது. இந்த 2016 தேர்தல் நிலஅதிர்வு ஏதோ குருட்டாம்போக்கில் வந்ததல்ல. உண்மையில் இது அடுத்து வரும் தொடர் அதிர்வுகள், முதல் அதிர்வை விட  வலிமை வாய்ந்ததாக இருக்கும் எனக் காட்டியது.

எம்விசி-பிஐபி கூட்டணி ஏற்படுத்திய திருப்புமுனை ஆளுநர் தேர்தலோடு நின்று விடவில்லை. சட்டமன்றத் தேர்தல்களிலும் நன்றாகத் தொடர்ந்தது. வரலாற்று ரீதியாக, இருகட்சி ஆட்சி முறையில் பிஎன்பி-பிபிடி தவிர பிற கட்சிகள் இரண்டு அவைகளுக்கும் ஒரு உறுப்பினரை மட்டுமே தேர்ந்தெடுக்க முடியும்.

போர்ட்டோ ரிகாவில் தேர்தல் முறைப்படி,  தனித்தனியான மாவட்ட சட்டமன்றங்களில் அதிக இடங்களைப் பெற்றவர்களையும், அனைத்துத் தொகுதிக்கும், அனைவரும் வாக்களிப்பது என்ற முறையில் (At-large – 10 தொகுதிகளுக்கு எனில் ஒவ்வொரு வாக்காளரும் பத்து வாக்குகளைப் பதிவு செய்வர்)

தேர்ந்தெடுக்கப்பட்டவர்களையும்  இணைத்தே ஆட்சி அமைப்பர். ஒவ்வொரு அவையிலும் ஏழு At-large இடங்கள் இருக்கும். எந்த ஒரு கட்சியும் ஆறு பேருக்கு மேல் வேட்பாளர்களை நிறுத்த முடியாது.‌ இதன்படி வெற்றி பெற்ற கட்சி ஒட்டு மொத்தமாக ஆறு பேரைத் தேர்ந்தெடுக்கும். இரண்டாவது இடம் பெற்ற கட்சி நான்கு பேரையும், மூன்றாவது இடம் பெற்ற கட்சி ஒருவரையும் தேர்ந்தெடுக்கும்.

இந்த மாதத் தேர்தலில் பிஎன்பி-பிபிடி கட்சிகள் மொத்தமாக மேலவைக்கான பதினோரு இடங்களில் ஆறை மட்டுமே வென்றன. மக்களவையில் பதினொன்றில் ஏழு இடங்களையே பெற்றன. பிஐபி இரு அவைகளிலும் தலா ஒரு இடத்தைப் பெற்றது. எம்விசி இரு செனட் உறுப்பினர்களையும், இரு மக்களவை உறுப்பினர்களையும் பெற்றது. போர்ட்டோ ரிக்கா தேர்தல் வரலாற்றிலேயே முதன் முறையாக பிஐபி வேட்பாளர் மேலவையில் மறு தேர்தலில் வெற்றி பெற்றார்.

ஆனால் முற்போக்குக் கட்சிகளின் எழுச்சி இத்துடன் முடிவடைந்துவிடவில்லை. சான் ஜுவான் மேஜர் தொகுதியில் எம்விசி வேட்பாளர் பிஎன்பி வேட்பாளருடன் நெருங்கிய போட்டியில் முதலிடத்திற்கு வர உள்ளார். ஒருவேளை தனது தேர்தல் தில்லுமுல்லுகளால் பிஎன்பி வெற்றி பெறலாம். ஆனால் எம்விசி வேட்பாளர் மானுவேல் நாடால் (பிபிடி யிலிருந்து வந்தவர்)மக்களவை உறுப்பினராக உள்ளவர் 30% வாக்குகளுக்கு மேல் பெற்றுள்ளார். இது வியக்கத்தக்க நிகழ்வாகும்.

இதேபோல் எம்விசி வேட்பாளர் ஈவா ப்ரதோஸ் பிஎன்பி யிடமிருந்த சான்ஜுவான் ஒற்றை உறுப்பினர் மாவட்ட அவையைக் கைப்பற்றி இருக்கிறார். இங்கு பிபிடி மூன்றாமிடத்திற்குத் தள்ளப்பட்டு விட்டது. இந்தப் பதவிக்கு இருகட்சிகளுக்கு வெளியே இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் (பெண்) உறுப்பினர் இவரே.

புதிய  At-large எம்விசி  சட்டமன்ற உறுப்பினர்கள் இடதுசாரி தத்துவத்தில் வேரூன்றி இருப்பவர்கள். மரியானா, உழைக்கும் மக்கள் கட்சியின்(WPT) தலைவர். அவர் சோர்வறியாத செயற்பாட்டாளர். சமூக இயக்கங்களில் முன்னே நிற்பவர். இவர் 80,000 வாக்குகளைப் பெற்றுள்ளார். இதுவே எம்விசி At-large வேட்பாளர்களில் பெற்ற மிக அதிக வாக்குகள்.

ஜோஸ் பெர்னார்டோ மார்க்கஸ் இளம் முற்போக்காளர். பிஎன்பி  மேயரின் மகனான இவர் பாரம்பரிய கட்சிகளிலிருந்து விலகி, தனது தலைமுறையினருக்கு வழிகாட்டியாகத் திகழ்கிறார். செனட்டில், ஆனா இர்மா ரிவேரா லாசன், இனவாத எதிர்ப்புப் போராளி. LGBT போராட்டங்களில் தீவிரமாகச் செயல்பட்டவர். பிபிடியின் முன்னாள் ஆளுநர் வேட்பாளர் ரஃபேல் பெர்னாபே உறுதியான சோசலிசவாதி.

எதிர்காலத்தை நோக்கி

எம்விசி வாக்குகள் அடிப்படையில் தேர்தலில் வெற்றி பெறாவிட்டாலும், அது நாட்டின் அரசியல் வரைபடத்தை மாற்றி உள்ளது‌. சட்டமன்றங்களில் கணிசமாக ஊடுருவி உள்ளது. சமூகத்தின் முக்கியப் பகுதி மக்களை, குறிப்பாக இளைஞர்களைத் தன்பக்கம் திரட்டி உள்ளது. இவை 2024 தேர்தலில் எளிதில் வெற்றி பெறுவதற்கான பாதைகளாகும்.

இன்று ஏராளமானவர்கள் எம்விசி-பிஐபி கூட்டணியை ஆதரிக்கின்றனர். கெடுவாய்ப்பாக இடதுசாரிகள் மீது பிரிவினைவாதிகள் என்ற வரலாற்று பழி இருந்தாலும், தேர்தல் ஒற்றுமைக்கான வழிகள் ஏதோ ஒரு வடிவத்தில் தெரிகிறது.

அடுத்து வரும் நான்காண்டுகளில் இடதுசாரிகள் தங்களது ஆரம்ப வெற்றியை எப்படி கட்டமைக்கப் போகிறார்கள் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

பிபிடி எப்படியோ தன் பெரும்பான்மையைச் சட்டமன்றத்தில் நிறுவலாம். அதற்குப் பொருள் பிஎன்பி நிர்வாக அதிகாரத்தின் கீழ் பிளவுபட்ட அரசு இருக்கும்.

இடதுசாரிகளின் நிலைப்பாடு இன்னும் தெளிவின்றியே உள்ளது. ஆனால் பல பத்தாண்டுகளுக்குப் பிறகு அது போர்ட்டோ ரிகாவின் முக்கிய உந்து சக்தியாக வளர்ந்துள்ளது என்பதை மறுக்க முடியாது.

 

(www.thewire.in இணையதளத்தில் ஜோர்ஜ் M.ஃபரினாசி-ஃபர்னோஸ் எழுதிய கட்டுரையின் மொழியாக்கம்)

 

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்