Aran Sei

மதம் மாற்றுவதாக விஎச்பி குற்றச்சாட்டை மறுத்த பெண்: தற்போது மாற்றி பேசியதால் இஸ்லாமியர் கைது

னவரி 14 அன்று மத்தியபிரதேசத்தில் உள்ள உஜ்ஜைனி ரயில் நிலையத்தில் ஒன்றாகப் பயணித்த குடும்ப நண்பர்களான ஆசிப் ஷேக், சாக்ஷி ஜெயின் ஆகிய இருவரை ‘லவ் ஜிஹாத்’ என்று குற்றம் சாட்டி காவல்நிலையத்திற்கு வலுக்கட்டாயமாக விஷ்வ ஹிந்து பரிஷத் இழுத்துச் சென்றுள்ளனர். ஆனால் இருவரும் குடும்ப நண்பர்கள் என்பதைக் கண்டறிந்த காவல்துறையினர் அவர்களை விடுவித்தனர். இந்நிலையில் கடந்த ஜனவரி 24 அன்று தன்னிடமிருந்து மிரட்டி பணம் பறித்ததாகவும், பலவந்தமாக மத மாற்றம் செய்ய முயல்வதாகவும் சாக்ஷி ஜெயின் கொடுத்த புகாரின் பேரில் ஆசிப் ஷேக் கைது செய்யப்பட்டுள்ளார்.

என்னை ரகசியமான முறையில் தகாத ரீதியாகப் புகைப்படங்களை எடுத்து ஆசிப் ஷேக் மிரட்டுவதாகவும், அவரை திருமணம் செய்து கொள்வதற்காக என்னை இஸ்லாத்திற்கு மதம் மாறுமாறு வற்புறுத்த்ட்டுவதாகவும் சாக்ஷி ஜெயின் ஜனவரி 23 அன்று இரவு 11 மணியளவில் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இந்துத்துவாவினரால் பாதிப்புக்குள்ளாகும் இந்துப் பெண்கள் – உங்கள் நடவடிக்கையால் என் வாழ்க்கை பாதிக்குமென மன்றாடிய பெண்

இதனைத் தொடர்ந்து ஆசிப் ஷேக் மீது இந்தியத் தண்டனை சட்டத்தின் கீழ் பிரிவு 384 (பணம் பறித்தல் ) 3 (ஒரு மதத்திலிருந்து மற்றொரு மதத்திற்குச் சட்டவிரோதமாக மாற்றுவதைத் தடை செய்தல்) மற்றும் 5 (பிரிவு 3 யை மீறியதற்கான தண்டனைகள்) மற்றும் மத்தியபிரதேச மதச் சுதந்திரச் சட்டம், 2021 இன் கீழ் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

ஆனால் ஜனவரி 14 அன்று விஎச்பி கட்சியினர் ஆசிப் ஷேக் மற்றும் சாக்ஷி ஜெயின் ஆகியோரை லவ் ஜிகாத் என்று குற்றம் சாட்டி வலுக்கட்டாயமாக உஜ்ஜைனி ரயில்வே காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக விஷ்வ ஹிந்து பரிஷத் அழைத்துச் சென்றனர். ஆனால் அவர்கள் இருவரும் குடும்ப நண்பர்கள் என்பதைக் கண்டறிந்த காவல்துறை அவர்களை விடுவித்தனர்.

விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர் இவர்களை இழுத்துச் செல்லும் பொது எடுக்கப்பட்ட காணொளிகள் வலைத்தளங்களில் வெளியிடப்பட்டன. அதில் தன்னை படம் எடுப்பதை நிறுத்துங்கள், உங்களுடைய தவறான புரிதலால் என் வாழ்க்கையே பாதிக்கப்படும், என்னை ஏன் படம் பிடிக்கிறீர்கள். நான் வயது வந்த பெண், நான் என்ன செய்கிறேன் என்று எனக்குத் தெரியும், நான் ஒரு ஆசிரியர் எனச் சாக்ஷி ஜெயின் விஎச்பி ஆட்களிடம் கூறியுள்ளார்.

இந்தூரில் உள்ள அம்பேத்கர் நகர் நீதிமன்றம் ஆசிப் ஷேக்கின் பிணை மனுவை நிராகரித்தது. அவருக்கு பிணை வழங்கினால் அது மத கலவரத்தை உருவாக்கலாம் என்ற காவல்துறையினரின் கூற்றுக்கு இணங்க இத்தகைய முடிவை நீதிமன்றம் எடுத்துள்ளது. பிறகு ஆசிப் ஷேக் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

சாக்ஷி ஜெயின் மற்றும் அவரது கணவர் அமன் யாதவிடம் ஆசிப் ஷேக் உடனான நட்பைப் பற்றிக் கேட்டபோது இருவரும் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டனர். “நீங்கள் என்ன வேண்டுமானாலும் எழுதிக் கொள்ளுங்கள்” என்று இருவரும் அழைப்பைத் துண்டிக்கும் முன் தொலைப்பேசியில் தெரிவித்ததாக தி வயர் செய்தி வெளியிட்டுள்ளது.

2016 ஆம் ஆண்டில் ஆசிப் ஷேக்கின் நண்பரான அமன் யாதவ் சாக்ஷி ஜெயினை திருமணம் செய்ததில் இருந்து ஆசிப் ஷேக்கும் சாக்ஷி ஜெயினும் நண்பர்களாக இருப்பதாகவும், கொரோனா இரண்டாவது அலையின் போது வியாபாரம் பாதிக்கப்பட்டதால் ஆசிப் ஷேக்கிற்கு 20,000 ரூபாயைக் கடனாகச் சாக்ஷி ஜெயின் கொடுத்துள்ளார் என்று ஆசிப் ஷேக்கின் தாய் மும்தாஜ் தெரிவித்துள்ளார்.

பிப்ரவரி 1 அன்று சிறையில் உள்ள ஆசிப் ஷேக்கை சந்திக்க அவரது தாய் மும்தாஜ் சென்றுள்ளார். ஆனால் ஆசிப் ஷேக்கிற்கு கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டதால் அவரை பார்க்க மும்தாஜ்க்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. சிறைக்குள் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்ட என் மகனைக் கொன்றுவிடுவார்கள்” என்று மும்தாஜ் கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்