Aran Sei

அமெரிக்காவில் கோயில் கட்டும் பணியில் தலித் தொழிலாளர்கள் சித்திரவதை? – மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு பதிவு

credits : the quint

அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாகாணத்தில் பிரம்மாண்ட இந்து கோயிலை கட்டுவதற்காக, இந்தியாவில் இருந்து அழைத்துவரப்பட்ட தலித் ஊழியர்கள், கடுமையான சித்ரவதைகளையும் கொடுமையையும் அனுபவிப்பதாக, அந்நாட்டின் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

1907 ஆம் ஆண்டு, ஷாஸ்திரிஜி மகராஜ் எனும் நபரால் தொடங்கப்பட்ட பொச்சன்வாசி அக்‌ஷார் புருஷோத்தம் சுவாமிநாராயண் சன்ஸ்தா (பேப்ஸ்) எனும் அமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பு இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடனும், பாரதிய ஜனதா கட்சியினுடனும் நெருங்கிய தொடர்பில் இருப்பதாகவ தி குவிண்ட் இணையதளம் தெரிவித்துள்ளது.

பேப்ஸ் அமைப்பின் ஆன்மிக தலைவர் பிரமுக் சுவாமி மகராஜ், மறைவின் போது பிரதமர் நரேந்திரமோடி அவருக்கு புகழஞ்சலி செலுத்தியதாகவும் அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது. பேப்ஸ் அமைப்பு, அபுதாபியில் கட்டும் இந்து கோயிலுக்கு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டியது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவை மீட்டுருவாக்கும் 50 தலித்துகள்: அவுட்லுக் பட்டியலில் இளையராஜா, பா.இரஞ்சித், பாடகர் அறிவு

மேலும், பாரதிய ஜனதா கட்சியின் நீண்ட கால கனவுத் திட்டமான ராமர் கோயில் கட்டுமானத்திற்கு, பேப்ஸ் அமைப்பு  ஏறக்குறைய 2 கோடியே 12 லட்சம் நிதி உதவி வழங்கியதாக தி நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

சோகனூரில் தலித்துகள் இரட்டைப் படுகொலை – நடந்தது என்ன?

இந்த அமைப்பு அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாநிலத்தில் பல்லாயிரம் கோடி ரூபாய் செலவில் இந்து கோயில் ஒன்றை கட்டும் பணியை கடந்த 2010 ஆம் ஆண்டு தொடங்கியது. இந்திய வம்சாவளியினர் ஏறக்குறைய நான்கு லட்சம் பேர் வசிக்கும் நியூ ஜெர்சியில், அமெரிக்க நாட்டிலேயே மிகப் பெரிய இந்து கோயிலை கட்டும் நோக்கோடு அக்கோயிலின் கட்டுமானம் இன்று வரையிலும் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், நியூ ஜெர்சியில் உள்ள ராபின்ஸ்வில் பகுதியில் கோயில் கட்டுமானத்தை மேற்கொண்டு வரும் பேப்ஸ் அமைப்புக்கு எதிராக, மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

கடந்த 2020 ஆம் ஆண்டு, அக்கோயில் கட்டுமானத்தில் ஈடுப்பட்டிருந்த  தொழிலாளர் ஒருவர் மரணமைடைந்ததாகவும்,  இதன் பின்னர், இந்தியா திரும்பிய தொழிலாளர்களில் ஒருவரான குமார் சாவந்த், இவ்விவகாரத்தை, வாஷிங்டனில் செயல்படும் தலித் உரிமைகளுக்கான சர்வதேச ஆணையத்தின் இயக்குநரும், வழக்கறிஞருமான ஸ்வாதி சாவந்திடம் கொண்டு சேர்த்ததன் அடிப்படையில், பேப்ஸ் அமைப்புக்கு எதிராக மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

அவர்கள் தாக்கல் செய்த மனுவில்,  ”இந்தியாவைச் சேர்ந்த 200 ஊழியர்கள் (பெரும்பான்மை தலித்துகள்) ஒப்பந்த அடிப்படையில் கோயில் கட்டும் பணிக்கு அழைத்துவரப்பட்டனர். இந்த தொழிலாளர்களிடமிருந்து பல்வேறு ஆவணங்களில் கையொப்பம் வாங்கி, அவர்கள் தேர்ந்த ஓவியர்கள் என அமெரிக்க தூதரக அதிகாரிகளிடம் பொய் சொல்லக் கூறி, அவர்கள் அமேரிக்காவுக்கு வழவழைக்கப்பட்டனர்”  என்று தி நியூ யார்க் டைம்ஸ் வெளியிட்டுள்ள செய்தி கூறுகிறது.

”அவர்கள் நியூ ஜெர்சி வந்தவுடன், கோயில் நிர்வாகிகளால் அவர்களுடைய பாஸ்போர்ட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கோயிலுக்கு வரும் பக்தர்களுடனும் கோயிலில் உள்ள பிரதிநிகளுடனும் பேசக் கூடாது என்று வலியுறுத்தப்பட்டுள்ளனர். அவர்களுக்கு பயிறு வகைகளையும் உருளைக்கிழங்களையும் மட்டும் உணவாக கொடுத்து, சிறிய விதிமுறை மீறலுக்கு கூட அவர்களுடைய சம்பளத்தில் இருந்து கோயில் நிர்வாகம் பிடித்தம் செய்துள்ளனர்” என்று அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பேசிய வழக்கறிஞர்கள், ”அவர்கள் காலை 6.30 முதல் இரவு 7.30 வரை, பெரிய கற்களை தூக்குதல், சாலைகள் போடுதல், சாக்கடையை சுத்தம் செய்தல், பெரும் இயந்திரங்களை இயக்குதல் உட்பட பல்வேறு வேலைகளை செய்தாலும் அவர்களுக்கு மாதம் 33,000 ரூபாய் தான் ஊதியமாக வழங்கப்பட்டுள்ளது. அதிலும் 3,672 ரூபாய் தான் அவர்களுக்கு நேரடியாக வழங்கப்பட்டது. மீதமுள்ள சம்பள தொகை அவருடைய இந்திய கணக்கில் செலுத்தப்பட்டது” என்று தெரிவித்துள்ளதாக தி குவிண்ட் செய்தி வெளியிட்டுள்ளது.

பேப்ஸ் அமைப்பின் முதன்மை செயல் அதிகாரி, கான் படேல், உள்ளிட்ட பலரின் பெயர் மனுவில் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பாக பேசிய படேல், ”ஊதியம் தொடர்பாக அவர்கள் வைத்துள்ள குற்றச்சாட்டை முற்றும் முழுதுமாக மறுக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார். பேப்ஸ் அமைப்பின் தலைவர்கள் ஆள் கடத்தலில் ஈடுபட்டதாகவும், ஊதிய சட்டத்திற்கு புறம்பாக ஊதியம் வழங்கியதாகவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையடுத்து, நேற்றைய தினம், எஃப்பிஐ (புலனாய்வு முகமை), உள்நாட்டு பாதுகாப்புத் துறை, தொழிலாளர் துறை ஆகியோர் கோயிலில் நடத்திய சோதனையில், 90 தொழிலாளர்கள் மீட்கப்பட்டதாக தி குவிண்டின் செய்தி கூறுகிறது.

இந்த வழக்கை தொடர்ந்துள்ள டேனியல் வெர்னர் எனும் வழக்கறிஞர், தன்னுடைய அனுபவத்தில், தொழிலாளர்களை குறைந்த ஊதியத்துக்கு கட்டாயப்படுத்தி வேலை வாங்கும் முதல் சம்பவம் இது தான் என்று கூறியுள்ளார். இதற்கு முன்னர் 1995 ஆம் ஆண்டு கலிஃபோர்னியாவில் தாய்லாந்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் மீட்கப்பட்ட சம்பவத்தை அவர் நினைவு கூர்ந்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக பேசிய ஸ்வாதி சாவந்த், “அவர்கள் (தொழிலாளர்கள்) நல்ல வேலை, அமெரிக்காவை காண வேண்டும் எனும் எண்ணத்தில் இங்கு வந்துள்ளனர். அவர்கள் மிருகங்களை விட மிக மோசமாக நடத்தப்படுவோம் என்றோ, பழுதடையாத இயந்திரத்தைப் போல வேலை வாங்கப்படுவோம் என்றோ சிறிதும் யோசித்திருக்க மாட்டார்கள்” என்று தி நியூயார்க் டைம்ஸிடம் தெரிவித்துள்ளார்.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்