மகாத்மா காந்தியை கொன்ற நாதுராம் கோட்சே தூக்கிலிடப்பட்ட ஹரியானா மாநிலம் அம்பாலா மத்திய சிறையில் இருந்து கொண்டு வரப்பட்ட மண்ணைக் கொண்டு நாதுராம் கோட்சேவுக்கு சிலை அமைக்கப் போவதாக இந்து மகாசபை அறிவித்துள்ளது.
கோட்சேவின் நினைவு தினமான நேற்று(நவம்பர் 15), மத்திய பிரதேச மாநிலம் குவாலியரில், இந்து மகாசபையின் தேசிய துணைத் தலைவர் டாக்டர் ஜெய்வீர் பரத்வாஜ் செய்தியாளர்களைச் சந்தித்து பேசியுள்ளார்.
அப்போது, “நாதுராம் கோட்சே மற்றும் நாராயண் ஆப்தே ஆகியோர் தூக்கிலிடப்பட்ட அம்பாலா சிறையில் இருந்து கடந்த வாரம் இந்து மகாசபா ஆர்வலர்கள் மண்ணை கொண்டு வந்தனர். இந்த மண்ணில் கோட்சே மற்றும் ஆப்தே சிலைகள் தயாரிக்கப்படும். மேலும் அச்சிலைகள் குவாலியரில் உள்ள மகாசபா அலுவலகத்தில் நிறுவப்படும்” என்று தெரிவித்துள்ளார்.
“இந்து மகாசபை தொண்டர்கள் கோட்சே மற்றும் ஆப்தே ஆகியோரின் சிலைகளை உத்தரபிரதேசம் மீரட்டில் உள்ள தியாகிகள் மேடையில் இன்று(நவம்பர் 15) நிறுவினர். ஒவ்வொரு மாநிலத்திலும் இது போன்ற தியாகிகள் மேடைகள் நாங்கள் கட்டுவோம். குவாலியர் மாவட்ட இந்து மகாசபை அலுவலகத்தில் நிறுவப்பட்ட கோட்சேவின் மார்பளவு சிலையை, மாவட்ட நிர்வாகம் 2017 ஆம் ஆண்டு கைப்பற்றியது. ஆனால், இதுவரை திருப்பித் தரப்படவில்லை” என்று அவர் கூறியுள்ளார்.
இதற்கிடையில், குவாலியரின் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சத்யேந்திர சிங் தோமர், இதுவரை இங்கு சிலை எதுவும் நிறுவப்படவில்லை என்றும் அந்த அமைப்பினரின் செயல்பாடுகள் குறித்து காவல்துறையினர் கண்காணித்து வருகின்றனர் என்றும் தெரிவித்துள்ளார்.
Source: PTI
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.