Aran Sei

`அரசியல்வாதிகளின் உண்மைத்தன்மையைக் கண்டறிவது எங்கள் பொறுப்பல்ல’ – ஃபேஸ்புக் நிறுவனம்

himanta biswa

அரசியல்வாதிகள் சமூக வலைத்தளங்களில் பகிரும் கருத்துகளின் உண்மைத்தன்மையைக் கண்டறிவதிலிருந்து (fact checking) விலக்கு அளித்திருக்கிறது ஃபேஸ்புக் நிறுவனம்.

அசாமின் அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணிக் கட்சியின் (ஏஐயுடிஎஃப்) தலைவர் மெளலானா பத்ருத்தின் அஜ்மலை, சில்சார் விமான நிலையத்தில் அவருடைய கட்சித் தொண்டர்கள் வரவேற்றனர். இந்த வரவேற்பின் போது “பாகிஸ்தான் ஜிந்தாபாத்” எனும் கோஷங்களை தொண்டர்கள் எழுப்பியதாகக் கூறப்படும் காணொலியை அசாமின் அமைச்சர் ஹிமந்தா பிஸ்வா ஷர்மா தன்னுடைய ட்விட்டர் மற்றும் முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

ஹிமந்தா பிஸ்வாவின் மனைவியின் தலைமையில் இயங்கி வரும் நியுஸ் லைவ் செய்தி நிறுவனம் இந்தச் செய்தியைத் தொடர்ந்து ஒளிபரப்பி வந்துள்ளது. டைம்ஸ் நவ், நியுஸ் 18, ஏசியா நெட் போன்ற நிறுவனங்களும் பாகிஸ்தான் சிந்தாபாத் எனும் கோஷங்களை ஏஐயுடிஎஃப் தொண்டர்கள் எழுப்பியதாகச் செய்திகளை வெளியிட்டுள்ளன.

பிஸ்வாவினுடைய முகநூல் மற்றும் ட்விட்டர் பக்கத்தில் “மக்களவை உறுப்பினர் பத்ருத்தின் அஜ்மலை பாகிஸ்தான் ஜிந்தாபாத் எனும் கோஷமிட்டு அடிப்படைவாதிகளும் தேச விரோதிகளும் வரவேற்கின்றனர். இது போன்ற கட்சிகளுடன்தான் காங்கிரஸ் கூட்டணி வைக்க இருக்கிறது” என்று தன்னுடைய கண்டனங்களைப் பதிவு செய்துள்ளார்.

பாகிஸ்தான் ஜிந்தாபாத் என ஏஐயுடிஎஃப் தொண்டர்கள் கோஷமிட்டதாக வெளியான காணொலியை ஆய்வு செய்த ஏஎல்டி நியுஸ் மற்றும் பூம் லைவ் ”ஏஐயுடிஎஃப் தொண்டர்கள் ஆசிஸ் கான் ஜிந்தாபாத எனக் கூறியதை பாகிஸ்தான் ஜிந்தாபாத்” என்று பாஜக அமைச்சர்  திரித்துப் பரப்பியதாகக் கூறியுள்ளது.

இதன் மூலம் பாஜக அமைச்சர் ”தவறான தகவலை” பரப்பியதாக அந்தக் காணொலியை முடக்கியது ஃபேஸ்புக் நிறுவனம். அந்தக் காணொலியை நீக்கிய பின் checked by independent fact checkers எனக் காணொலியை நீக்கிய இடத்தில் பதிவிடப்பட்டுள்ளது.

https://www.facebook.com/photo.php?fbid=2713856752207512&set=p.2713856752207512&type=3

இந்நிலையில் நீக்கப்பட்ட காணொலி மீண்டும் சமூக வலைத்தளங்களில் அந்தந்த நிறுவனங்களால் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

அந்தக் காணொலியில் பாகிஸ்தான் ஜிந்தாபாத் எனக் கோஷமிட்டது உண்மையே அதில் போலியாகச் சித்திரிக்கப்பட்டவை எதுவும் இல்லை. நீக்கிய காணொலியை மீண்டும் பதிவு செய்தமைக்கு நன்றி எனத் தெரிவித்துள்ளார் சர்மா.

ஃபேஸ்புக் செய்தித் தொடர்பாளர், முகநூலில் பகிரப்படும் கருத்துகளின் உண்மைத் தன்மையைக் கண்டறியும் பொறுப்பை நாங்கள் வேறு நிறுவனத்திடம் வழங்கியுள்ளதால் அரசியல்வாதிகளுக்கு இந்தத் திட்டத்திலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாகவும் “தவறான தகவல்கள்” என்ற சொற்கள் சர்மாவின் பதிவில் தவறாக இணைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

தன்னுடைய முகநூல் பதிவின் மூலம் இரு மதங்களுக்கிடையே கலவரத்தைத் தூண்ட முயற்சிப்பதாக காங்கிரஸ் கட்சி, ஹிமந்தா பிஸ்வா மீது காவல்துறையில் புகாரளித்துள்ளது. புகாரை ஏற்றுக்கொண்ட காவல்துறையினர் இரு சமூகங்களுக்கிடையே பதற்றத்தை ஏற்படுத்தியதாக அவர் மீது இந்திய தண்டனைச் சட்டம் 153 ஏ (வெவ்வேறு குழுக்களுக்கிடையில் பகைமையை ஊக்குவித்தல்), 511 (ஆயுள் தண்டனை அல்லது பிற சிறைத்தண்டனை விதிக்கக்கூடிய குற்றங்களைச் செய்ய முயற்சித்தல்), 67 (மின்னணு வடிவத்தில் ஆபாசமான பொருட்களை வெளியிடுவது அல்லது அனுப்புவது) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்