வகுப்பறைக்கு மத அடையாளங்களை அணிந்து வரக் கூடாது என கர்நாடக உயர்நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்திருக்கும் நிலையில், பெங்களூருவைச் சேர்ந்த தனியார் கல்லூரி ஒன்றில், சீக்கிய மாணவியின் தலைப்பாகையை அகற்றக் கோரி கல்லூரி நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.
ஹிஜாப் அணிந்து வர தடை விதித்ததற்கு எதிராக விசாரணை மேற்கொண்டு வரும் கர்நாடக உயர்நீதிமன்றம், மாநிலத்தில் உள்ள அனைத்து வகுப்பறைக்குள்ளும் ஹிஜாப், காவித் துண்டு, தாவணி, மதக் கொடி உள்ளிட்ட எந்தவித மத அடையாளங்களையும் அணிந்து வரக் கூடாது என இடைக்கால உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.
உயர்நீதிமன்ற உத்தரவுகுறித்து கல்லூரி பிப். 16 தேதி மாணவர்களுக்குத் தெரிவிக்கப்பட்டது என கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இந்த வாரத்தின் தொடக்கத்தில், கல்லூரிக்கு வருகை புரிந்த பியூசி கல்வி துணை இயக்குநர், இடைக்கால உத்தரவை மதிக்காமல் ஹிஜாப் அணிந்து வந்திருந்த மாணவிகளிடம், நீதிமன்ற உத்தரவைப் பின்பற்றுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.
ஹிஜாப் அணிந்து வர கூடாது என்றால் மற்ற மாணவர்களும் இதை கடைபிடிக்க வேண்டும். சீக்கிய பெண்கள் தலைப்பாகை அணிந்து வர அனுமதிக்க கூடாது என இஸ்லாமிய மாணவிகள் கல்லூரி நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, சீக்கிய மாணவியின் பெற்றோரைத் தொடர்பு கொண்ட கல்லூரி நிர்வாகம், நீதிமன்ற உத்தரவைக் கடைபிடிக்கும் வகையில், மாணவி தலைப்பாகையை அகற்ற வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளது.
கல்லூரி நிர்வாகத்தின் கோரிக்கை ஏற்க மறுத்துள்ள மாணவியின் பெற்றோர், “மாணவி தலைப்பாகையை அகற்ற மாட்டார். நீதிமன்ற உத்தரவில் சீக்கியர்களின் தலைப்பாகை என குறிப்பிட்டு கூறவில்லை. எனவே, இதனை சட்ட ரீதியாக எதிர்கொள்வோம்” என தெரிவித்துள்ளனர்.
Sources : The New Indian Express
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.