Aran Sei

ஜம்மு காஷ்மீரில் அதிவேக இணையப் பயன்பாடு (4ஜி) முடக்கம்

credits : the indian express

தேர்தல் ஆணையம், ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் இணையப் பயன்பாட்டை  முடக்கியுள்ளது.

ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் டிசம்பர் 1 முதல் டிசம்பர் 24 வரை மாவட்ட மேம்பாட்டு கவுன்சிலுக்குத் (டிடிசி) தேர்தல் நடக்க இருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

முதற்கட்ட தேர்தல் நவம்பர் 28 ஆம் தேதி நடைபெறும் எனத் தேர்தல் அதிகாரிகள் கூறியுள்ளனர். இதற்கான வேட்புமனுக்கள் பெறப்பட்டு வருகின்றன. மொத்தமுள்ள 43 இடங்களுக்கு, 350 க்கும் மேற்பட்ட வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில் ஜம்மு காஷ்மீரில் மொத்தம் 20 மாவட்டங்கள் உள்ளன. இவற்றில் 18 மாவட்டங்களில் அதி வேக இணைய வசதிகள் (4ஜி ) துண்டிக்கப்பட்டு 2 ஜி சேவையே கிடைக்கப்படுவதாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த அறிவிப்பை வெளியிட்ட உள்துறை அமைச்சகத்தின் முதன்மைச் செயலாளர் ஷலீன் கப்ரா ”அதிவேக இணைய வசதிகள் (4ஜி) கந்தெர்பால் மற்றும் உதம்பூர் மாவட்டத்தில்தான் கிடைக்கும் என்றும் மற்ற அனைத்து மாவட்டங்களிலும் 2ஜி இணைய வசதிதான் கிடைக்கும்” எனக் கூறியுள்ளார்.

280 இடங்களில் மாவட்ட மேம்பாட்டு கவுன்சில் தேர்தலும், 13,400 பஞ்சாயத்துகள் மற்றும் காலியாக இருக்கிற நகர்ப்புற உள்ளாட்சிப் பொறுப்புகளுக்கு இடைத்தேர்லும் நடைபெற இருக்கும் வேளையில் தேர்தலைச் சீர்குலைக்கத் தீவிரவாதிகளும் பிரிவினைவாதிகளும் முயற்சி செய்வதற்குத் துணையாக அதிவேக இணைய வசதிகள் பயன்படுவதைத் தடுக்கவே இணைய வசதியை முடக்கியுள்ளதாக கப்ரா தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் பன்முகத்தன்மையையும் ஒருமைப்பாட்டையும் பாதுகாக்கவும் சட்ட ஒழுங்கைப் பாதுகாக்கவும் 4ஜி இணையத்தை முடக்கியுள்ளதாக கப்ரா கூறியுள்ளார்.

இந்தத் தடை போஸ்ட்பெயிட் சிம் கார்டு வைத்திருப்பவர்களுக்குக் கிடையாது எனவும்  ப்ரீபெய்ட் சிம் கார்டு வைத்திருப்பவர்கள் விசாரிக்கப்பட்டு விதிகளுக்கு உட்பட்டு 4ஜி கிடைக்க வாய்ப்புள்ளதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு இருந்த சிறப்பு அந்தஸ்து 370-வது பிரிவு ரத்து செய்யப்பட்ட போது ஜம்மு காஷ்மீர் முழுவதும் செல்போன்களுக்கு எஸ்எம்எஸ், இணையம் மற்றும் லேண்ட்லைன் வசதிகள் துண்டிக்கப்பட்டிருந்தன.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்