Aran Sei

ஒபாமாவின் சுயசரிதை – மன்மோகன் சிங்குக்குப் புகழாரம்

மெரிக்காவின் முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவின் ‘ஏ ப்ராமிஸ்டு லாண்ட் (A Promised Land) எனும் சுயசரிதை இரண்டு பாகங்களாக வெளியாகவுள்ளது. இந்தப் புத்தகத்தில், இந்தியா மீதான தனது ஆர்வம், மகாத்மா காந்தியின் வாழ்க்கை மற்றும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குடனான அவரது உறவு குறித்து ஒபாமா விரிவாகப் பேசியிருக்கிறார் என்றும் அதில், மன்மோகன் சிங்கை ‘அசாதாரண ஞானமும் கண்ணியமும் உள்ளது’ என்றும்  குறிப்பிட்டுள்ளதாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

2010-ம் ஆண்டு, நவம்பர் மாதம், நடைபெற்ற தனது இந்தியப் பயணத்தைக் குறித்து ஒபாமா விவரித்துள்ளார். அப்போது, அவருக்கும் மன்மோகன் சிங்குக்கும் இடையே ஒரு நல்ல உறவு உருவாகியது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

“70 வயதை தாண்டிய, மென்மையான குணம் படைத்த ஒரு பொருளாதார நிபுணர். சீக்கிய நம்பிக்கையின் அடையாளங்களாக இருந்த தலைப்பாகையை அணிந்து வெள்ளை தாடியையும் கொண்டிருந்தார். ஆனால், மேற்கத்திய கண்ணுக்கு அவர் ஒரு புனிதனைப் போல் தோன்றினார். அவர் 1990 களில் இந்தியாவின் நிதி அமைச்சராக இருந்தார். அப்போது, லட்சக்கணக்கான மக்களை வறுமையிலிருந்து உயர்த்தினார். மன்மோகன் ஒரு புத்திசாலியான, சிந்தனைமிக்க, நேர்மையான பிரதமராக இருந்தார்” என்று ஒபாமா விவரித்துள்ளார்.

“மன்மோகன் சிங் வெளியுறவுக் கொள்கையில் எச்சரிக்கையாக இருந்திருக்கக் கூடும். அமெரிக்காவின் நோக்கங்களைச் சந்தேகிக்கும் ஓர் இந்திய அதிகாரத்துவ மனநிலையிலிருந்து வெளிவராமல் இருந்திருக்கக் கூடும். எங்களது முதல் சந்திப்பின் போது அவரது  ‘அசாதாரண ஞானத்தையும் கண்ணியத்தையும்’ பற்றி நான் புரிந்துகொண்டேன். தலைநகர் டெல்லிக்கு நான் சென்றபோது, பயங்கரவாத எதிர்ப்பு, உலகளாவிய சுகாதாரம், அணுசக்தி பாதுகாப்பு மற்றும் வர்த்தகம் தொடர்பான விவகாரங்களில் அமெரிக்க ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான ஒப்பந்தங்களை எட்டினோம்” என்று அவர் கூறியுள்ளார்.

2010-ம் ஆண்டில், தனது முதல் இந்தியப் பயணத்தை மேற்கொண்டதாக ஒபாமா குறிப்பிட்டுள்ளார். இந்தியா எப்போதும் தனது ‘மனதில் நீங்காத இடத்தைப் பிடித்திருக்கும்’ என்றும் அவர் கூறியுள்ளார்.

இந்திய நாடு, உலக மக்கள் தொகையில் 6-ல் ஒரு பகுதியையும், 2,000 தனித்துவமான இனக்குழுக்களையும், 700 க்கும் மேற்பட்ட மொழிகளையும் கொண்டுள்ளதால் இந்த நெருக்கம் ஏற்பட்டிருக்கலாம் என்று அவர் தெரிவித்துள்ளார். பாலிய பருவத்தில், இந்தோனேசியாவில் வாசிக்கும்போது, மகாபாரதம் மற்றும் ராமாயணத்தைப் பற்றிக் கேட்டதால் கூட இந்தியாவுடனான இந்த நெருக்கம் உருவாகியிருக்கலாம் என்றும் அவர் கூறியுள்ளார். கல்லூரிக் காலத்தில், இந்தியா மற்றும் பாகிஸ்தானைச் சேர்ந்த அவரது நண்பர்கள் அவருக்கு ‘தால்’ மற்றும் ‘கீமா’ செய்வதற்குக் கற்றுக் கொடுத்து, பாலிவுட் படங்களை அறிமுகம்படுத்தியதாகவும் ஒபாமா குறிப்பிட்டுள்ளார்.

இந்தப் புத்தகத்தில், காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோருடனான சந்திப்பைப் பற்றியும் ஒபாமா விவரித்துள்ளார்.

இதில், 2011-ம் ஆண்டை (ஒபாமா பதவிக்காலத்தின் முடிவு) பற்றிய விவரங்கள் அதிகமாக இடம்பிடித்துள்ளது. ஆகையால், அதன் பிறகு (2014-ம் ஆண்டு) பதவியேற்ற பிரதமர் மோடியைப் பற்றிய விவரங்கள் புத்தகத்தில் இடம்பெறவில்லை என்று ‘தி இந்து‘ இணையத்தளம் வெளியிட்ட செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்