Aran Sei

‘மத்திய அரசின் நடவடிக்கையால் நாளை தடுப்பூசி முகாம் தொடங்குவது சந்தேகமே’ – சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்

நாளை (மே 1) தொடங்கவுள்ள 18 வயதிலிருந்து 44 வயதிற்கு உட்பட்டவர்களுக்கான தடுப்பூசி முகாமிற்கு தேவையான தடுப்பூசிகள் மருந்து நிறுவனங்களிடம் இருந்து கைக்கு வந்தால்தான், எங்களால் அம்முகாமை நடத்த முடியும் என்றும் நம் மாநிலத்திற்கு வழங்கவுள்ள தடுப்பூசி எண்ணிக்கைகுறித்த விபரங்களை இன்னும் மத்திய அரசு வழங்கவில்லை என்றும் தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இன்று (ஏப்ரல் 30), பத்திரிக்கையாளர்களைச் சந்தித்து பேசியுள்ள அவர், “ஏற்கனவே, நாளை தொடங்கவுள்ள 18 வயதிலிருந்து 44 வயதிற்கு உட்பட்டவர்களுக்கான தடுப்பூசி முகாமிற்கு, தமிழ்நாடு ஒன்றரைக் கோடி கொரோனா தடுப்பூசி மருந்துகள் ஆர்டர் கொடுத்திருக்கிறது. ஆனால், பூனேவில் உள்ள மருந்து நிறுவனத்திடமிருந்து எவ்வளவு தடுப்பூசிகள் கிடைக்கும், ஹைதராபாத் மருந்து நிறுவனத்திடமிருந்து எவ்வளவு கிடைக்கும், மொத்தமாக ஆர்டர் செய்யப்பட்ட எண்ணிக்கையிலிருந்து எவ்வளவு தடுப்பூசிகள் கிடைக்கும், எப்போது கிடைக்கும் போன்றவற்றை மத்திய அரசு இன்னும் தெரிவிக்கவில்லை.” என்று கூறியுள்ளார்.

“இம்முகாமிற்கான திட்டங்களை நாங்கள் முன்னமே தயாரித்து வைத்திருந்தாலும், நாம் புதிதாக இந்த முகாமிற்காக ஆர்டர் செய்திருந்த தடுப்பூசிகள் எப்போது கிடைக்கும்  என்று தெரிந்தால்தான், அதற்கு ஏற்றார்போல மருந்துகளை எடுத்த செல்ல முடியும். மற்ற மாநிலங்களும் இதே பிரச்சனையையே சந்தித்து வருகின்றன. இதை வெளிப்படையாக இன்று ஏன் சொல்கிறோம் என்றால், நாளைய தினம் தொடங்குவதாக அறிவித்திருந்த 18 வயதிலிருந்து 44 வயதிற்கு உட்பட்டவர்களுக்கான தடுப்பூசி முகாமை ஏன் நீங்கள் தொடங்கவில்லை என்று எங்களிடம் கேட்பீர்கள். அதனால், இப்போதே சொல்லி விடுகிறோம்.” ராதாகிருஷ்ணன்  என்று தெரிவித்துள்ளார்.

உயரும் கொரோனா தடுப்பூசி விலை – தனியாருக்கு ரூ.1200 நிர்ணயித்த பாரத் பயோடெக்

“இந்தக் குழப்பத்தைச் சரி செய்ய சீரம் நிறுவனத்திடமும் ஹைதராபாத்தில் உள்ள பாரத் பயோடெக் நிறுவனத்திடமும் தொடர்ந்து தொடர்பில் உள்ளோம். நாம் ஒன்றரைக் கோடி தடுப்பூசிகள் ஆர்டர் செய்திருக்கிறோம். ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான தடுப்பூசிகளை வழங்க மட்டுமே மத்திய அரசு க்ரீன் சிக்னல் வழங்க உள்ளதாக சொல்லியிருக்கிறது. நம் மாநிலத்திற்கு மத்திய அரசு வழங்கவுள்ள அந்தக் குறிப்பிட்ட எண்ணிக்கைகுறித்த விபரம் நாளைக்குள் கிடைக்குமா என்பது சந்தேகமே. இந்த உண்மைநிலையை உங்களிடம் சொல்லிக்கொள்கிறோம்.” என்று ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

மேலும், “45 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கான தடுப்பூசி முகாம்களில் எந்தப் பிரச்சனையும் இல்லை. அவை போதுமான எண்ணிக்கையில் கையிறுப்பு உள்ளன. ஆனால், 18 வயதிலிருந்து 44 வயதிற்கு உட்பட்டவர்களுக்கான தடுப்பூசி முகாமிற்கு தேவையான தடுப்பூசிகள் மருந்து நிறுவனங்களிடமிருந்து கைக்கு வந்தால்தான், எங்களால் அம்முகாமை நடத்த முடியும். எப்போது வரும் என்ற எந்தத் தகவலும் அந்நிறுவனங்களிடம் இப்போது வரை எங்களுக்குக் கிடைக்கவில்லை.” என்று தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் விளக்கியுள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்