Aran Sei

‘யானை புக்க புலம் போலத் தானும் உண்ணான்’: மோடியின் அரசும் பொதுநலனும் – ரவி ஜோஷி

மோடி அரசுக்கு பொது நலம் என்ற கருத்து உள்ளதா? நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு இதைப் பற்றி தெளிவற்ற கருத்து இருப்பதாகத் தெரிகிறது. பிப்ரவரி ஒன்றாம் நாள் நிதிநிலை அறிக்கையை வைத்த போது அவர் திருவள்ளுவரை மேற்கோள் காட்டி,” ஒரு அரசன் அல்லது ஆட்சியாளர் என்பவன் செல்வத்தை உருவாக்குபவன் அல்லது பெற்றுக் கொள்பவன். மேலும் அதைப் பாதுகாத்து பொது நலனுக்கு விநியோகிப்பவனும் ஆவான்,” என்று கூறினார். இலக்கிய உணர்வுக்காக அன்றி வேறு எந்த விதத்திலும் அறியப்படாத நிதி அமைச்சர் இன்றைய யதார்த்தத்தின் ஒரு பகுதியை வகைப்படுத்துவதில் குறிப்பிடத்தக்க அளவு வியப்பிற்குரியவர். இந்த மேற்கோளில் மூன்று முக்கியக் கூறுகள் உள்ளன.

ஒரு இமாலய துயரம் கற்பிக்கும் ஆறு பாடங்கள் – ராமச்சந்திர குஹா

முதலாவதாக, மக்களுக்கு எது நல்லது என்று அறியாமலே பொது நலன் என்பதற்குள் மக்களை புரட்டித் தள்ளுவதில் ஜனநாயகத்திற்கும், குடியரசுக்கும் முந்தைய கால அரசர்களுக்கும் இன்றைய ஆட்சியாளர்களுக்கும் இடையே அவர் எந்த வேறுபாட்டையும் காணவில்லை. ” செல்வத்தை உருவாக்குவது, பெறுவது மற்றும் அதை பாதுகாப்பதுடன் அதனை விநியோகிப்பது,” என்ற பணி இரண்டாவதாகும்.

ஜிஎஸ்டி போன்ற நேர்முக அல்லது மறைமுக வரிகளை சுமத்துவது அல்லது வெறும் பணத்தை அச்சிடுவது, மக்கள் வரிப்பணத்தில் உருவான தேசியப் பொதுச் சொத்துக்களை  தங்களுக்கு ஆதரவான முதலாளிகளுக்கு விற்பது ஆகியவைதான் செல்வத்தை உருவாக்குவது மற்றும் பெறுவதற்கு அரசு அறிந்துள்ள வழி. இதனை அரசு எவ்வாறு செய்ய விரும்புகிறது என்பதை மக்களுக்குத் தெரிவிக்கும் ஒரு கருவிதான் நிதிநிலை அறிக்கை.

மூன்றாவதாக, ” பொது நலனுக்காக விநியோகிப்பது ” என்பது சொல்லப்படும் குறிக்கோள். இது மிகவும் பிரச்சனைக்குரியது. ஏனெனில் “பொது நலன்” என்ற கருத்தில் அரசனுகோ அல்லது ஆட்சியாளருக்கோ இன்னும் தெளிவில்லை. பொது நலன் என்பது மிகவும் அதிகமாக தவறாக பயன்படுத்தப்படும் சொல் ஆகும். அது எப்போதும் பொதுவாகவும் இருந்ததில்லை. நலனையும் கொடுத்ததில்லை.

ஐஐடி-களில் அநியாயமாக மறுக்கப்படும் இட ஒதுக்கீடு –  ஆர்டிஐ மூலம் கிடைத்த அதிர்ச்சி தகவல்

பொது நலன் என்பது என்ன?

நாம் பொது நலன் என்ற சொல்லின் பொதுவான புரிதலுக்குச் செல்வோம். அது முதலில், மதிப்புச் சங்கிலியில்,  ‘தனிநலன்’ என்பதிலிருந்து, வேறுபட்டதாகவும், உயர்ந்ததாகவும் கருதப்படுகிறது. இரண்டாவதாக, இது “மிகப்பெரிய எண்ணிக்கையிலான மக்களின் மிகப்பெரிய மகிழ்ச்சி” என்ற புள்ளிவிவர அடிப்படையில் பெறப்பட்டக் கருத்து அல்ல. ஆனால் பற்றாக்குறையாக உள்ள வளங்களை ‘ நியாயமான மற்றும் சமமான ‘ முறையில் ஒதுக்க விரும்பும் நிதிநிலை அறிக்கை உள்ளிட்ட பல்வேறு கொள்கை நடவடிக்கைகளால் அடையப்பட வேண்டிய பேரார்வமிக்க குறிக்கோள் ஆகும். நீதி, சமத்துவம் என்ற கருத்துக்களே பொது நலன் என்ற கருத்தாக்கத்தின்  வேர்களாகும். இந்த இரண்டு சொற்களும் மேலும் விரிவாகப் பார்க்கப்பட வேண்டும். பண்டைய அரசியல் தத்துவியலாளர்கள் எது நீதி, சமத்துவம், சுதந்திரம், சரி மற்றும் தவறு, உரிமைகள் மற்றும் கடமைகள் போன்றவற்றுடன் மற்றவற்றிலிருந்து எது நியாயமான சமுதாயத்தை உருவாக்குகிறது என்ற கேள்வியில் சிக்கி உள்ளனர். அரசியல்வாதிகளையும், கொள்கை வகுப்பவர்களையும் எப்போதும் குழப்பத்தில் ஆழ்த்தும் இந்த முக்கிய சொற்களுக்கு  ஹார்வர்ட் பல்கலைக்கழகப் பேராசிரியர் மைக்கேல் சாண்டல் தனது நீதி குறித்தத் மிகச் சிறந்த தொடர்சொற்பொழிகளில் விளக்கி உள்ளார். அவர் நீதியைப் பற்றி சிந்திக்க மூன்று வழிகள் உள்ளன என்கிறார். அவை அதிகபட்ச நலன், சுதந்திரத்தை மதித்தல் மற்றும் நற்பண்புகளை வளர்த்தெடுத்தல் ஆகியவற்றை சுற்றியே வருகின்றன. அதிகரித்த நலன் என்பதில்  தற்போது ‘நலன்’ என்பது பொருளாதார செழிப்பு மற்றும் பல்வேறு பொருளாதாரம் சாராத குறியீடுகளையும் விட  விரிவான சொல்லாக இருந்தாலும், இயந்திரத்தனமாக கணக்கிடப்படும் ஒட்டு மொத்த உள்நாட்டு உற்பத்தியின் (GDP) வளர்ச்சி என்பதாகச் சுருக்கப்பட்டு விட்டது.

இன்று பெரும்பாலான பொருளாதார அறிஞர்களும் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் மதிப்பு உயரும் என நம்புகிறார்கள். அப்படியானால் நாம் ” வேலைவாய்ப்பில்லாத மீட்சி அல்லது வளர்ச்சிப்” போக்கில் உள்ளோம். இதன் பொருள், தொற்று நெருக்கடியினாலோ அல்லது மிகப்பெரிய தேசிய முழு முடக்கத்தினாலோ வேலை இழந்த பல கோடிக்கணக்கானவர்கள் மீண்டும் அவர்கள் வேலையை பெற வாய்ப்பில்லை. ஆனால் தொழிற்சாலைகள் வளைந்து நெளிந்து அதன் வளர்ச்சியை (செருக்கை) மீட்டெடுக்கும் என்பதாகும்.

ஜம்மு காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து வழங்கப்படும் – நாடாளுமன்றத்தில் அமித் ஷா வாக்குறுதி

உழைப்பாளிகளுக்கு மேலதிக நேரம் வேலை செய்ததற்கான கூலியை தராமல் அதிக நேரம் வேலை வாங்கி, அவர்களை கசக்கிப் பிழியவதுடன், திறமையற்ற உழைப்பாளிகளை பணிநீக்கம் செய்து கொள்ளும் வகையில் தொழிலதிபர்களுக்கும் அல்லது முதலாளிகளுக்கும் உதவுவதை நோக்கமாகக் கொண்டு,( விவசாய சட்டங்கள் நிறைவேற்றப்பட்ட அதே நாளில்) நான்கு தொழிலாளர் சட்டத் தொகுப்புகளும்  நிறைவேற்றப்பட்டுள்ளன.

சுதந்திரமாக செயல்படுவதை ஊக்குவிப்பது பொது நலனின் மற்றொரு இன்றியமையாத கூறு ஆகும். ஏனெனில் அது ஒரு மனிதனை அவனது நலன்களையும், திறமைகளையும் தொடர அவனை விடுதலை செய்கிறது. ஆனால் சமூக, பொருளாதார வளர்ச்சி இல்லாமல் சுதந்திரங்களைத் தொடர் முடியாது என்கிறார் அமர்த்தியா சென். எனவே, நலனும், சுதந்திரமும் சிக்கலான முறையில் பின்னிப் பிணைந்திருப்பதாகத் தெரிகிறது.

தனிநபர் சுதந்திரத்தின் மீதான தடைகள் அவர்களின் உணவு முறையைக் கட்டுப்படுத்துவதிலிருந்து வேலைகள் மற்றும் வாழ்வாதாரங்களை அழித்தல் மற்றும் உண்மைச் செய்திகளை வெளியிட்டதற்காக ஊடகவியலாளர்களை கைது செய்வது, சொல்லாத நகைச்சுவைக்காக மேடை நகைச்சுவையாளரைக் கூட கைது செய்வது வரை தொடர்கிறது. மேலும், நாடு தழுவிய முழு முடக்கத்தால் பள்ளிகள் மூடப்பட்டு மதிய உணவு நிறுத்தப்பட்டு விட்டதால் கோடிக்கணக்கான குழந்தைகள் சத்துணவு குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர். நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று வரை கூட பள்ளிகள் மூடியே கிடக்கின்றன. ஏழைக் குழந்தைகள் உணவும் பெறுவதில்லை. கல்வியும் பெறுவதில்லை. அவர்களது பெற்றோர்கள் வாழ்வாதாரத்தை இழந்து நிற்கின்றனர். இந்த நிலையில் சுதந்திரத்தைப் பற்றிப் பேசுவது அவர்களது நிலையை ஏளனம் செய்வதாகும்.

இப்பொழுது அரசியல் தத்துவத்தின் மகத்தான ஒரு கேள்விக்கு வருவோம்: அரசு தனது குடிமக்களிடையே நற்பண்புகளை வளர்க்க முற்படுகிறதா? அரசு அவர்களிடம் எதை உண்ண வேண்டும், எதை உடுத்த வேண்டும் அல்லது யாரை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று கூற முடியுமா? அல்லது குடிமக்கள் தாங்களே தங்கள் வாழ்க்கைக்கான சிறந்த வழிகளைத் சுதந்திரமாக தேர்வு செய்து கொள்ளும் வகையில் அரசு நற்பண்புகளை வளர்க்கும் கேள்விகளில் நடுநிலைமை வகிக்க வேண்டுமா? 18 ம் நூற்றாண்டின் இம்மானுவேல் கான்ட் முதல் 20 ம் நூற்றாண்டின் பேராசிரியர் ஜான் ராவ்ல்ஸ் வரையிலான நவீன பொருளாதார தத்துவியலாளர்கள், எந்த ஒரு குறிப்பிட்ட நற்பண்பின் கருத்தாக்கத்தின் மீதோ அல்லது சிறந்த வாழ்க்கைக்கான வழியின் மீதோ நமது உரிமைகளை வரையறுப்பதாக நீதியின் அடிப்படைகள் இருக்கக் கூடாது என்றும், மாறாக, ஒரு நேர்மையான சமூகம்  ஒவ்வொரு தனி மனிதனுக்கும் சிறந்த வாழ்க்கைப் பற்றிய  கருத்தாக்கத்தைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளும் சுதந்திரத்தை மதிக்க வேண்டும் என்றும் இன்று பொது நலன் என்பதன் சாரம் இவ்வாறுதான் புரிந்து கொள்ளப்படுகிறது என்று வாதிடுவதாக பேராசிரியர் சாண்டல் கூறுகிறார்.

தடையற்ற சந்தையும் பொது நலனும்

மேற்கூறிய கருத்துக்களில் ஒன்றை எடுத்து அதனை இன்றைய சூழ்நிலையில் பொருத்திப் பார்ப்போம்: தடையற்ற சந்தை பொருளாதாரத்தில் ‘அதிகரித்த நலன்’  என்ற கருத்து நவீன தாராளவாத பொருளாதார சீர்திருத்தத்தின் இதயத்தில் இருக்கும் கருத்துத்தான். இதைத்தான் மூன்று விவசாய சட்டங்களின் நிறைவேற்றம் மூலம் வேளான்மைத் துறையில் சீர்திருத்தம் என்று நாம் இன்று கண்டுக் கொண்டிருக்கிறோம்.

“தடையற்ற சந்தைக்கான தரம் என்பது நலன் மற்றும் சுதந்திரம் ஆகிய இரண்டின் மீது இருக்கிறது. முதலாவதாக, மற்றவர்களுக்குத் தேவையானப் பொருட்களை தங்கள் கடின உழைப்பால் கொண்டு வந்து வருபவர்களுக்கு ஊக்கத் தொகைகளை வழங்குவதன் மூலம் ஒட்டு மொத்தமாக சமூகத்தின் நலனை சந்தைகள் மேம்படுத்துகின்றன. இரண்டாவதாக, சந்தைகள் தனிநபர் சுதந்திரத்தை மதிக்கிறது; பொருட்கள் மற்றும் சேவைகள் மீது ஒரு குறிப்பிட்ட மதிப்பைத் திணிப்பதற்குப் பதில் சந்தைகள் மக்கள் தாங்கள்  பரிமாற்றம் செய்து கொள்ளும் பொருட்களுக்கு என்ன மதிப்பைக் கொடுக்கலாம் என்பதை அவர்களே தேர்வு செய்து கொள்ள அனுமதிக்கின்றன,” என்று சுட்டிக் காட்டுகிறார் பேராசிரியர் சாண்டல். இருப்பினும், இந்த இரண்டு வாதங்கள் மீது ஒரு முக்கியமான, மதிப்புமிக்க விமர்சனமும் உள்ளது. முதலில் தடையற்ற சந்தை என்பது உண்மையில் சுதந்திரமாக இல்லை. வாங்குபவரும் விற்பவரும் சமவலுவுடன் பேரம் பேசும் நிலையில் இல்லை, அல்லது விளையாட்டு, சமதளத்தில்  எப்போதும்  விளையாடப்படுவதில்லை. இரண்டாவதாக, ஒரு விற்பனையாளர் தனது பொருளை வேறு வழியின்றி குறைந்த விலைக்கு விற்கும் போது ஒட்டு மொத்த சமுதாய நலனும் நிறைவேற்றப்படுவ தில்லை. மேலும் வாங்குபவர் தனது ஏராளமான வளத்தினால் ஒரு குறிப்பிட்ட பிரிவு மக்களை வறுமை அல்லது அடிமைத்தனத்தில் ஆழ்த்திவிட முடியும். இது தங்களுக்குத் கிடைக்க வேண்டியது கிடைக்காததால் ஏற்படும் கோபம் மற்றும் அநீதி உணர்வில் முடிகிறது.

விவசாயிகளின் சீற்றம் தீவிரமாக இருப்பது வடிவமைப்பிலேயே அநீதியான, தீமைதரும் இரண்டு காரணங்களால் நியாயமானது. அது அரசியலமைப்பு சட்டம் பிரிவு 32 ன் படி’ அரசியல் அமைப்பு ரீதியாக நிவாரணம்’ பெறுவது போன்ற அடிப்படை உரிமையை மறுக்கிறது. இந்த உரிமை ‘அரசியலமைப்பின் அடிப்படைக் கட்டமைப்புகளில்’ ஒன்றாகக் கருதப்படுகிறது. 2020 ம் ஆண்டின் விவசாயிகளின் உற்பத்தி விற்பனை மற்றும் வணிகம் ( ஊக்குவிப்பு மற்றும் வசதி) சட்டத்தின் அதிகாரம் 5 ன் பிரிவு 13,15 ஆகியவையே அந்த அடிப்படை உரிமையை மறுக்கும் பிரிவுகள்.

இந்த சட்டத்தின் கீழ் அல்லது இதன்படி இயற்றப்படும் விதிமுறைகள் அல்லது ஆணைகள்படி நல்ல நம்பிக்கையுடன் செய்யும் அல்லது செய்யும் எண்ணத்துடன் செயல்படும் மத்திய அரசின் மீதோ, மாநில அரசுகள் மீதோ, அல்லது மத்திய,மாநில அரசு அதிகாரிகள் மீதோ அல்லது வேறு எந்த நபர் மீதோ வழக்கு, விசாரணை அல்லது பிற சட்ட நடவடிக்கைகளை எடுக்க முடியாது.” என்கிறது பிரிவு 13.

பிரிவு 15: ” எந்த ஒரு விவகாரத்தையும் அறிந்துஎடுத்து, செய்து முடிக்கும், இந்த சட்டத்தின் மூலம் அல்லது இதன்கீழ் இயற்றப்படும் விதிமுறைகளின் படி அதிகாரம் பெற்ற எந்த அதிகாரியின் மீதும், எந்த ஒரு சிவில் நீதிமன்றத்திற்கும் வழக்குத் தொடருவதையோ, சட்ட நடவடிக்கைகள் எடுப்பதையோ அனுமதிக்கும் அதிகாரம் இல்லை.”

இந்த இரண்டு பிரிவுகளும் நீதியை அணுகுவதற்கான உரிமையை மறுப்பது மட்டுமின்றி, சமமற்ற பேரம் பேசுவதை நடைமுறையாக்குகிறது. இதனால் அநீதி நீடிக்கிறது.

எந்த வகையான ‘பொது நலன்’  இந்த விவசாய சட்டங்கள் மூலம் எதிர்பார்க்கப்படுகிறது? அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக ஆழ்ந்து உணருபவர்களை இந்த அரசனும் அல்லது ஆட்சியாளரும் எப்படி நடத்துவார்? அவர்களை அரசின் எதிரிகளாக கருதி, தடுப்பரண்களையும், முட்கம்பி களையும், ஆணிகளையும் அவர்களது வணிகப் பாதையில் அமைத்துத் தடுப்பாரா அல்லது அவர்களோடு பேச்சு வார்த்தை நடத்தி அவர்களது குறைகளின் மூலத்தை அகற்றுவாரா?

இந்த சட்டத்தை எதிர்த்தப் போராட்டத்தில், தில்லியின் கடுங்குளிர் காரணமாக இறந்த 180 விவசாயிகளைப் பார்க்காமல் கண்ணை மூடிக் கொள்வாரா? இத்தகைய அரசனை அல்லது ஆட்சியாளரை நிச்சயமாக திருவள்ளுவர் சிந்தித்திருக்க மாட்டார். நமது அரசியலமைப்பே இது குறித்து போதுமான அளவு வழிகாட்டும்போது நாம் ஏன் அவ்வளவு தூரம் செல்ல வேண்டும்.

நமது ஆட்சியாளர்கள் நமது அரசியலமைப்பிற்குத் திரும்பிச் சென்று அதன் முகவுரையைப் படித்தாலே போதும் ‘பொது நலன்’ பற்றிய தெளிவான கருத்து வெளிப்படும். ஆட்சியாளர்கள் தங்கள் சட்டங்களை முகவுரை ஏற்படுத்தியுள்ள துலாக் கோலில் வைத்துப் பார்த்தால், அவை அதில்  பொறிக்கப்பட்டுள்ள நான்கு குறிக்கோள்களின் சோதனையில் வெற்றி பெற முடியுமா என பார்த்தால், ஆட்சியாளர் ‘பொது நலனை’ உறுதி செய்ய மிக நீண்ட தூரம் செல்ல வேண்டியிருக்கும்.

நீதி, சமூக, பொருளாதார மற்றும் அரசியல்; சிந்தனை, வெளிப்பாடு, நம்பிக்கை மற்றும் வழிபாடு ஆகியவற்றிற்கான சுதந்திரம்; சம மரியாதை மற்றும் சம வாய்ப்பு மற்றும் அவற்றை எல்லாரிடத்திலும் வளர்ப்பது; தனி மனிதனின் மரியாதை மற்றும் ஒற்றுமை மற்றும் நாட்டின் ஒருமைப்பாட்டை உறுதி செய்யும் சகோதரத்துவம்.”

 

www.thewire.in இணைய தளத்தில் ரவி ஜோஷி எழுதியுள்ள கட்டுரையின் மொழியாக்கம்

https://thewire.in/government/does-modi-sarkar-have-a-notion-of-the-common-good

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்