Aran Sei

‘பிரதமர் மோடி ஆர்எஸ்எஸ்ஸின் கைப்பாவையாக செயல்படுகிறார்’ – கர்நாடக முன்னாள் முதலமைச்சர் விமர்சனம்

ன்றியத்திலும் கர்நாடகாவிலும் உள்ள பாஜக அரசுகள் ஆர்எஸ்எஸ்ஸின் வழிகாட்டுதலின்படி செயல்படுகின்றன என்றும் பிரதமர் நரேந்திர மோடி அதன் கைப்பாவை என்றும் கர்நாடக மாநில முன்னாள் முதலமைச்சரும் மதசார்பற்ற ஜனதா தளத் தலைவருமான ஹெ.டி.குமாரசாமி தெரிவித்துள்ளார்.

நேற்று(அக்டோபர் 5), கர்நாடக மாநிலத் தலைநகர் பெங்களூருவில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசியுள்ள ஹெ.டி.குமாரசாமி, “தேசிய அளவில் அரசியல் நகர்வுகளைக் கவனித்து வருகிறேன். நம் மாநில அரசாக இருந்தாலும் சரி, ஒன்றிய அரசாக இருந்தாலும் சரி, அவை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் அரசுகள் அல்ல. அவை ஆர்எஸ்எஸ்ஸின் வழிகாட்டுதலின் பேரில் செயல்படுகின்றன. பிரதமர் நரேந்திர மோடி சுதந்திரமாக அல்லாமல், ஆர்எஸ்எஸ் கைப்பாவையாக செயல்படுகிறார்” என்று விமர்சித்துள்ளார்.

“இது பாஜகவின் அரசாங்கம் அல்ல. இது ஆர்எஸ்எஸ் அரசாங்கம். இது நரேந்திர மோடியின் அரசாங்கம் கூட இல்லை. இந்த நாட்டை நூறு ஆண்டுகளுக்கு முன்பு இருந்த நிலைக்குத் தள்ளுவதற்கு சதி நடக்கிறது” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

ராமர் கோவில் நன்கொடை : ‘ஹிட்லரின் நாஜிக்கள் செய்ததை ஆர்.எஸ்.எஸும் செய்தால் நாடு என்னாகும்?’ – எச்.டி.குமாரசாமி

ஆர்எஸ்எஸ் பற்றிய ஒரு புத்தகத்தைப் படித்து வருவதாக குறிப்பிட்டுள்ள ஹெ.டி.குமாரசாமி, “ஆர்எஸ்எஸ் இதுவரை நாட்டின் வளர்ச்சி குறித்தும் வறுமையை ஒழிப்பது குறித்தும் விவாதிக்கவில்லை. அவர்களின் ஒரே வேலைத்திட்டம் இந்த நாட்டை தங்கள் கட்டுக்குள் கொண்டு வருவதுதான். ஆர்எஸ்எஸ்ஸின் மறைமுகமான திட்டத்தில் சிக்கிக்கொள்ளாதீர்கள் என்று நம் நாட்டு இளைஞர்களை எச்சரிக்கை செய்கிறேன்” என்று ஹெ.டி.குமாரசாமி கூறியுள்ளார்.

அப்புத்தகத்தை மீண்டும் குறிப்பிட்டுள்ள அவர், “ஆர்எஸ்எஸ், அதன் மறைமுகமான வேலைத்திட்டத்தின் ஒரு பகுதியாக, அரசு அதிகாரிகளைக் கொண்ட குழுவை உருவாக்கியுள்து. அவர்கள் இப்போது பல்வேறு நிறுவனங்களில் பணியில் உள்ளனர். இந்த நாட்டில் அரசு ஊழியர்கள், ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் என தோராயமாக 4,000 பேர் ஆர்எஸ்எஸ் காரியகர்த்தாக்கள் என்று இந்த புத்தகத்தில் கூறியிருக்கிறார்கள். அவர்கள் தேர்வு எழுத ஆர்எஸ்எஸ் பயிற்சி அளிக்கிறது. ஓர் ஆண்டில், அதாவது 2016-ல் மட்டும், ஆர்எஸ்எஸ்ஸிடமிருந்து பயிற்சி பெற்ற 676 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கின்றனர்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

‘ராமரின் பெயரில் ஊழல்’ – தெருத் தெருவாக கொள்ளையடிப்பதாக எச்.டி.குமாரசாமி குற்றச்சாட்டு

மேலும், “மனுநீதியே அவர்களின் (ஆர்எஸ்எஸ்/பாஜக) முக்கிய அஜெண்டா. அவர்கள் இந்துத்துவா பற்றி பேசுகிறார்கள். தேவைப்படுபவர்களுக்கு உரிய நலன்களை வழங்குவதுதான் அதிகாரத்தில் இருப்பவர்களின் முக்கிய குறிக்கோளாக இருக்க வேண்டும். மாறாக, இந்துத்துவா அல்ல” என்று ஹெ.டி.குமாரசாமி வலியுறுத்தியுள்ளார்.

Source: PTI

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்