Aran Sei

ராஜஸ்தானில் ஆணவக்கொலை – பாதுகாப்பு அளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டதையும் மீறி நடந்துள்ள பயங்கரம்

ராஜஸ்தானில் தாழ்த்தப்பட்ட சமுகத்தை சேர்ந்தவரைத் திருமணம் செய்த பெண்ணுக்கு, பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று காவல்துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில், அந்தப் பெண் கொலை செய்யப்பட்டுள்ளதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது. காவல்துறையின் அலட்சியத்தால் இந்த கொலை நடைபெற்றுள்ளதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த ரோஷன் மகாவர் என்பவரை திருமணம் செய்ததற்காக, தனது மகள் பிங்கி ஷைனியை, பெண்ணின் தந்தை சங்கர் லால் சைனி, கழுத்தை நெரித்துக் கொலைசெய்ததாக, மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அனில்குமார் தெரிவித்துள்ளார் என்று அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

மிரட்டல்களும் அச்சுறுத்தல்களும் என்னைத் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன – கௌசல்யா

கடந்த பிப்ரவரி 16 ஆம் தேதி, ரோஷனுக்கும், பிங்கி சைனிக்கும் திருமணம் நடந்ததாகவும், பெண் வீட்டாரின் அச்சுறுத்தல் காரணமாக பிப்ரவரி 26 அன்று, ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தை பாதுகாப்பு வேண்டி அவர்கள் அணுகினார்கள் என்றும் தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்நிலையில், ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் உள்ளூர் காவல்துறைக்கு அந்த ஜோடிக்கு தகுந்த பாதுகாப்பு அளிக்க வேண்டும் எனவும், அவர்கள் எங்கு சென்று வாழ விரும்பினாலும் அதை உறுதிபடுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டதாக அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது

“லவ் ஜிகாத்” சட்டங்கள் – ஆணாதிக்கத்தின் வெளிப்பாடு

இதன் பிறகு ஜெய்ப்பூர் சென்று வசித்து வந்த ரோஷனும் பிங்கியும் பணப் பிரச்சனை காரணமாக மார்ச் 1 ஆம் தேதி, தவுசா கிராமத்திற்கு திரும்பி வந்தாகவும், அப்போது பிங்கியின் குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள் பலர் வற்புறுத்தி அவரை வீட்டிற்கு இழுத்துச் சென்றார்கள் என்றும் காவல்துறை கண்காணிப்பாளர் அனில்குமார் தெரிவித்துள்ளதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் கூறியுள்ளது.

இந்நிலையில், கடந்த புதன்கிழமை இரவு, தனது மகள் பிங்கியை கொன்றுவிட்டதாக, பிங்கியின் தந்தை சங்கர் லால் சைனி, காவல்நிலையத்தில் சரணடைந்ததாகவும், நாங்கள் பெண்ணின் வீட்டை அடைந்தபோது கழுத்து நெரிக்கப்பட்டு பிங்கி இறந்துகிடந்தார் என்றும் அனில்குமார் கூறியுள்ளதாக அந்தச் செய்தி கூறுகிறது.

ரோஷன் மற்றும் பிங்கியின் வழக்கறிஞர் நவால் சிங் சிக்ரவர் “இந்தக் கொலை முழுக்க முழுக்க காவல்துறையின் அலட்சியத்தால் நடந்திருக்கிறது. உயர் நீதிமன்றம் அவர்களை பாதுகாக்க உத்தரவிட்டப் பிறகும், காவல்துறை பாதுகாக்க தவறி இருக்கிறது” என்று தெரிவித்துள்ளாரென தி இந்தியன் எக்ஸ்பிரஸ் கூறுகிறது.

இந்த கொலை வழக்குகுறித்து பிங்கியின் தந்தை உட்பட 11 பேர் மீது, வன்கொடுமை தடுப்பு சட்டம் மற்றும் பிங்கியை கடத்தும் போது 1.2 லட்சம் மதிப்பிலான பொருள்களை திருடி சென்றது உட்பட பல்வேறு பிரிவுகளின் கீழ், முதல் தகவல் அறிக்கையில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அந்த  செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

27 வயது கேரள இளைஞர் கொலை : ஆணவக்கொலையா என சந்தேகம்

பிங்கி கொல்லப்பட்ட பின். தி இந்தியன் எக்ஸ்பிரஸ் –யிடம் பேசிய ரோஷன் “எனக்கு வாழவே பயமாக இருக்கிறது. அவர்கள் பிங்கியை கடத்தி சென்ற அப்போதே பிங்கியை கொன்று விடுவார்களோ என்று பயமாகவே இருந்தது. ஆனால் காவல்துறை அதை பொருட்படுத்தவே இல்லை” என்று நடுக்கத்தோடு தெரிவித்துள்ளதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும் “நாங்கள் திருமணம் செய்த போதே அவர்கள் எங்களை கொன்றுவிடுவோம் என்று அச்சுறுத்தினர். அதுமட்டுமில்லாது கோலி சாதி (தாழ்த்தப்பட்ட) பையனுக்கு மலி (பிற்படுத்தப்பட்ட) சாதி பெண் கேட்கிறதா ? என்று கேட்டார்கள். அவர்கள் சாதி சேற்றை என்மீது வாரி இறைத்தனர்” என்றும் ரோஷன் கூறியதாக அந்த  செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மாற்று சாதிப் பெண்ணை காதலித்த இளைஞர் அடித்துக் கொலை – பெண்ணின் தந்தை உட்பட 5 பேர் கைது

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள மக்கள் குடியுரிமை நடுவத்தின் தலைவர் கவிதா ஸ்ரீவஸ்தவா “இது வெட்கக்கேடானது. நீதிமன்றம் ஜோடிகளை பாதுகாக்க உத்தரவு பிறப்பித்த பிறகும் ராஜஸ்தான் அரசு , காவல்துறை ஆகியவற்றின் அலட்சியத்தால், பிங்கி கொல்லப்பட்டிருக்கிறார்” என்று குறிப்பிடப்பட்டுள்ளதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தெரிவித்துள்ளது.

மேலும் ‘ரோஷன், பிங்கி கடத்தப்பட்டபோது காவல் நிலைய அவசர உதவி எண்ணை அழைத்தபோதும் உடனடியாக நடவடிக்கை எடுக்காமல், கோத்வாலி காவல் நிலையத்துக்கு அழைக்க சொன்னதாகவும், இந்த வழக்கில் பாதிக்கப்பட்டவரை பாதுகாக்க தவறிய, தவுசா பகுதியின் வட்டார அலுவலர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோரை உடனடியாக பணிநீக்கம் செய்யவேண்டும் எனவும் கவிதா ஸ்ரீவஸ்தவா தெரிவித்துள்ளதாக அந்த  செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்