ஹரியானா மாநில விவசாயிகள் மீது காவல்துறை தடியடி நடத்திய விவகாரத்தில், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது வழக்குப் பதிவு செய்வதோடு, தடியடியில் உயிரிழந்த விவசாயி குடும்பங்களுக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று ஹரியானா மாநில விவசாயிகள் சங்கங்கள் வலியுறுத்தியுள்ளன.
ஆகஸ்ட் 28 ஆம் தேதி, ஹரியானா முதலமைச்சர் மனோகர் லால் கட்டார் மற்றும் பாஜக மாநில தலைவர் ஓ.பி.தங்கர் ஆகியோர் கலந்து கொண்ட பாஜக கூட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, கூட்டம் நடைபெற்ற கர்னல் நகர் நோக்கிச் சென்ற விவசாயிகளைத் தடியடி நடத்தி காவல்துறையினர் கலைத்தனர்.
நேற்று (ஆகஸ்ட் 30), கர்னலில் ஹரியானாவைச் சேர்ந்த விவசாயிகள் சங்கங்கள் ஒன்றிணைந்து நடத்திய கூட்டத்தில், செப்டம்பர் 6 ஆம் தேதிக்குள் தங்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை என்றால், கர்னலில் அமைந்துள்ள துணை தலைமைச் செயலகத்தை காலவரையின்றி முற்றுகையிடுவோம் என்று அச்சங்கங்கள் எச்சரித்துள்ளன.
இக்கூட்டத்தில் பேசிய பாரதிய கிசான் யூனியன் தலைவர் குர்ணம் சிங் சாருனி, “அமைதிவழியில் போராட்டங்களை நடத்திய விவசாயிகள் மீது ஹரியானா அரசு வன்முறையைக் கட்டவிழ்த்துள்ளது. 11 பேருக்கு ஏற்பட்ட பலத்த காயங்கள் உள்பட 40 பேர் காயமடைந்துள்ளனர். காயங்கள் காரணமாக உயிரிழந்ததாகக் கூறப்படும் சுசில் காஜலின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையளிக்க வேண்டும். காயமடைந்த விவசாயிகளுக்கு தலா 2 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்.” என்று கூறியுள்ளார்.
விவசாய சட்டங்களை நீக்ககோரி போராடி வரும் விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழுவான சம்யுக்த் கிசான் மோர்ச்சா வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஹரியானா முதலமைச்சர் மனோகர் லால் அரசு தடியடிக்கு உத்தரவிட்ட அதிகாரியை உடனடியாக பதவி நீக்கம் செய்து, அவர்மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்படி செய்யவில்லை என்றால், அந்த அதிகாரி யாரோ ஒருவரின் அறிவுறுத்தல்களின்படிதான் செயல்படுகிறார் என்று கருதப்படும்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹரியானா மாநிலத்தில் விவசாயிகள் மீது காவல்துறை நடத்திய தடியடியை கண்டித்து, ஹரியானாவிலும் பஞ்சாப்பிலும் விவசாயிகள் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.
Source: thehindu
தொடர்புடைய பதிவுகள்:
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.