Aran Sei

கர்னல் தடியடி குறித்து விசாரணை நடத்த அரசு தயார் – போராட்டத்தை விலக்கிக் கொண்ட விவசாயிகள்

ரியானா மாநிலம் கர்னலில் விவசாயிகள்மீது தடியடி நடத்தியது தொடர்பாக விசாரணை நடத்தப்படும் என அரசு உறுதியளித்ததை தொடர்ந்து விவசாயிகள் போராட்டத்தை திரும்ப பெற்றுள்ளனர்.

மாவட்ட நிர்வாகத்திற்கும் அரசு தரப்பிற்கும் இடையில் நடைபெற்ற நான்காம் கட்ட பேச்சுவார்த்தையில், இந்த முடிவு எட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் 28 ஆம் தேதி நடைபெற்ற நிகழ்வு மற்றும் அதில் ஐஏஎஸ் அதிகாரி அயுஷ் சின்ஹாவின் பங்குகுறித்து ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை மேற்கொள்ளப்படும் என விவசாயிகளிடம் மாவட்ட நிர்வாகம் உறுதியளித்துள்ளது. அதுவரை ஆயுஷ் சின்ஹா விடுப்பில் இருப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தடியடியில் உயிரிழந்த விவசாயி சுஷில் காஜல் குடும்பத்தில் இரண்டு பேருக்கு பணி வழங்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது. இருப்பினும், உயிரிழந்த விவசாயியின் குடும்பத்தினருக்கு பொருளாதார இழப்பீடு வழங்க வேண்டும் என்ற விவசாயிகள் தரப்பு கோரிக்கை தொடர்பாக இதுவரை எந்தப் பதிலும் இல்லை.

பேச்சுவார்த்தைக்குப் பிறகு மாவட்ட நிர்வாகம் தரப்பில் மூத்த ஐஏஎஸ் அதிகாரி தேவேந்தர் சிங் மற்றும் விவசாயிகள் சங்கத்தின் தரப்பில் குர்னம் சிங் சௌத்ரி இருவரும் கூட்டாக இணைந்து செய்தியாளர்கள் சந்திப்பை நடத்தி, போராட்டம் விலக்கிக் கொண்டது தொடர்பாக அறிவித்தனர்.

”ஐஏஎஸ் அதிகாரிகுறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற எங்கள் கோரிக்கையை அரசு ஏற்றுள்ளது. விசாரணை மேற்கொள்ள இருக்கும் ஒய்வு பெற்ற நீதிபதியால், அதிகாரி குற்றம்சாட்டப்பட்டால், அது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்” என குர்னம் சிங் சௌத்ரி தெரிவித்துள்ளார்.

ஐஏஎஸ் அதிகாரி தேவேந்திர சிங், “விவசாயிகள் எங்கள் நண்பர்கள். எழுப்பப்பட்ட அனைத்து கோரிக்கைகள் தொடர்பாக நியாயமான மற்றும் இணக்கமான தீர்வை எட்டியுள்ளோம்” என கூறியுள்ளார்.

Source : The Indian Express

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்