சம்யுக்த் கிசான் மோர்ச்சா ஒப்புதல் அளித்தால், ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த விவசாயிகள் நவம்பர் 26 ஆம் தேதி நாடாளுமன்றத்திற்கு பேரணியாக செல்வார்கள் என்று அம்மாநில பாரதிய கிசான் யூனியனின் தலைவர் குர்னாம் சிங் சதுனி தெரிவித்துள்ளார்.
சம்யுக்தா கிசான் மோர்ச்சா என்ற 40 விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழுவானது, ஒன்றிய அரசின் மூன்று விவசாய சட்டங்களை நீக்கக் கோரி போராட்டங்களை முன்னெடுத்து வருகிறது.
இந்நிலையில், நேற்று(நவம்பர் 7), ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த பல்வேறு விவசாயிகள் சங்கங்களின் கூட்டம் ரோஹ்டக்கில் நடைபெற்றுள்ளது. அதைத்தொடர்ந்து, கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து செய்தியாளர்களிடம் பேசியுள்ள குர்னாம் சிங் சதுனி, “அரசியலமைப்பு தினமான நவம்பர் 26 ஆம் தேதி, நாடாளுமன்றத்துக்கு பேரணியாக செல்ல கூட்டத்தில் முடிவு செய்தோம். நவம்பர் 9ம் தேதி சம்யுக்த் கிசான் மோர்ச்சா கூட்டத்தில், இத்திட்டத்தை முன்வைப்போம். அவர்கள் ஒப்புதல் அளித்தால், நாங்கள் செல்வோம்” என்று தெரிவித்துள்ளார்.
பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் அரவிந்த் சர்மாவின் சர்ச்சைக்குரிய கருத்துக்கு எதிராக வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று கூட்டத்தில் வலியிறுத்தப்பட்டுள்ளது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
தனது கட்சித் தலைவர்கள் சிலர் ரோஹ்தக்கில் தடுக்கப்பட்டது குறித்து பேசிய பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் அரவிந்த் சர்மா, “ஹரியானா முன்னாள் அமைச்சர் மணீஷ் குரோவரை யாராவது குறிவைக்க முயன்றால் அவர்களின் கண்களைப் பிடுங்கிவிடுவோம், கைகளை வெட்டுவோம்” என்று மிரட்டியதாகக் கூறப்படுகிறது.
ஒன்றிய அரசின் விவசாயச் சட்டங்களை நீக்கக் கோரி போராடும் ஹரியானா விவசாயிகள் மீது பல்வேறு வழக்குகள் போடப்பட்டு, சம்மன்கள் வழங்கப்பட்டுள்ளது என்றும் இந்த சம்மனுக்கு யாரும் பதில் அளிக்கக் கூடாது என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது என்றும் குர்னாம் சிங் சதுனி தெரிவித்துள்ளார்.
Source: PTI
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.