அரசியலமைப்பு நிர்ப்பந்தத்தின் காரணமாக உத்தரகண்ட் முதலமைச்சர் பதவியிலிருந்து தான் விலகியதாக பாஜகவை சேர்ந்த தீரத் சிங் ராவத் கூறியதும், கொரோனா காரணமாக மாநில இடைத்தேர்தலை நடத்த முடியாது என்பதும் மிகப்பெரிய பொய் என்று மூத்த காங்கிரஸ் தலைவர் ஹரிஷ் ராவத் தெரிவித்துள்ளார்.
நேற்று (ஜூலை 2), தீரத் சிங் ராவத் தனது உத்தரகண்ட் முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
இதுகுறித்து, செய்தியாளர்களை சந்தித்து பேசியவர், “நான் எனது ராஜினாமா கடிதத்தை ஆளுநரிடம் சமர்ப்பித்துள்ளேன். அரசியலமைப்பு நெருக்கடியைக் கருத்தில் கொண்டு, நான் ராஜினாமா செய்வது சரியானது என்று உணர்கிறேன். இதுநாள் வரை எனக்குக் கொடுத்த ஒவ்வொரு வாய்ப்பிற்கும் ஒன்றிய தலைமைக்கும் பிரதமர் நரேந்திர மோடிக்கும் என் நன்றியைக் கூறிக்கொள்கிறேன்.” என்று கூறியுள்ளார்.
கொரோனா பெருந்தொற்று – பாஜக தலைவர்கள் சமீபத்தில் சொன்ன, ஆனால் சொல்லியிருக்கக் கூடாத கருத்துக்கள்
கடந்த ஆண்டு மார்ச் மாதம் திரிவேந்திர சிங் ராவத் தனது உத்தரகண்ட் முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்ததால், மார்ச் 10 ஆம் தேதி, தீரத் சிங் ராவத் முதலமைச்சராக பதவியேற்றுக்கொண்டார்.
இந்த ராஜினாமா குறித்து பேசிய மூத்த காங்கிரஸ் தலைவரும் உத்தரகண்ட் முன்னாள் முதலமைச்சருமான ஹரிஷ் ராவத் தனது டிவிட்டர் பக்கத்தில், “கொரோனா தொற்றின் காரணமாக உத்தரகண்டில் இடைத்தேர்தல்களை நடத்த முடியாது என்பதையும், அரசியலமைப்பு கட்டாயத்தால் உத்தரகண்ட் முதலமைச்சர் பதவி விலகுவதாக கூறுவதையும் விடவா பெரிய பொய் இருக்க போகிறது? உண்மை என்னவென்றால், இதற்கு முன்னரே இதே கொரோனா காலத்தில் இடைத்தேர்தல்கள் நடத்தப்பட்டுள்ளன. சால்ட் தொகுதியில் (உத்தரகண்ட் மாநிலத்தில் ஒரு சட்டமன்றத் தொகுதி) இடைத்தேர்தல் நடைபெற்றது. முதலமைச்சர் தீரத் சிங் ராவத் அங்கிருந்து போட்டியிட்டிருக்கலாம்.” என்று தெரிவித்துள்ளார்.
“வேறு யாரயாவது ராஜினாமா செய்ய வைத்து, இவர் அங்கிருந்து தேர்தலில் போட்டியிட முடியும். ஆனால், சட்டத்தைப் பற்றிய முழுமையான அறிவு இல்லாததால், மற்றொரு முதலமைச்சர் இம்மாநிலத்தின் மீது திணிக்கப்பட்டுள்ளார். ஐந்து ஆண்டுகளில், பாஜக மூன்று முதலமைச்சர்களை உத்தரகண்ட் மாநிலத்திற்கு அளிக்கிறது.” என்று மூத்த காங்கிரஸ் தலைவரும் உத்தரகண்ட் முன்னாள் முதலமைச்சருமான ஹரிஷ் ராவத் விமர்சித்துள்ளார்.
Source; ani
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.