Aran Sei

ஹலால் இறைச்சி குறித்த பாஜகவின் சர்ச்சை கருத்து – கர்நாடகாவை உ.பி., ஆகுவதாக காங்கிரஸ் குற்றச்சாட்டு

முற்போக்கு மாநிலமான கர்நாடகாவை உத்தரப் பிரதேசமாக மாற்ற பாஜக திட்டமிடுகிறது என்று காங்கிரஸ் கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது.

ஹலால் இறைச்சியை விற்பனை செய்வது பொருளாதார ஜிகாத் என்று பாஜக தேசிய பொதுச்செயலாளர் சி.டி.ரவி கூறியுள்ளது புதிய சர்ச்சையை எழுப்பியது.

நேற்று (மார்ச் 30), இது குறித்து பேசிய சி.டி.ரவி, “இந்துக்களிடம் இறைச்சியை இஸ்லாமியர்கள் வாங்க மறுக்கும் போது, ​​இந்துக்கள் ஏன் இஸ்லாமியர்களிடம் இறைச்சியை வாங்க வேண்டும்? இஸ்லாமியர்கள் ஹலால் செய்யப்படாத இறைச்சியை சாப்பிட ஒப்புக்கொண்டால், இந்துக்களும் ஹலால் இறைச்சியை சாப்பிட சம்மதிப்பார்கள்” என்று தெரிவித்தார்.

ஹலால் இறைச்சி விற்பனை என்பது ‘பொருளாதார ஜிகாத்’ – பாஜக தேசியப் பொதுச்செயலாளர் சர்ச்சை கருத்து

ஹலால் என்பது இறைச்சியை அறுக்க இஸ்லாமியர்கள் கையாளும் ஒரு வழிமுறையாகும்.

இது குறித்து, கருத்து தெரிவித்துள்ள கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை, “தற்போது கடுமையான ஆட்சேபனைகள் எழுந்துள்ளதால், ஹலால் இறைச்சி விவகாரம் குறித்து மாநில அரசு பரிசீலிக்கும்” என்று கூறியுள்ளார்.

“ஹலால் இறைச்சி பிரச்சினை இப்போதுதான் தொடங்கியுள்ளது. நாம் அதை ஆய்வு செய்ய வேண்டும். இது நடைமுறையில் இருக்கும் ஒன்று. இப்போது, இது தொடர்பாக கடுமையான ஆட்சேபனைகள் எழுந்துள்ளன. நான் அதை கவனத்தில் கொள்கிறேன்” என்று செய்தியாளர்கள் சந்திப்பில் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.

கர்நாடகா: இந்துத்துவாவினரின் நெருக்கடியால் திருவிழாவில் கடைகள் போட இஸ்லாமியர்களுக்கு அனுமதி மறுப்பு

அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலை கருத்தில் கொண்டு பாஜக அரசு வேண்டுமென்றே இதுபோன்ற விவகாரங்களைக் கையில் எடுத்து வருவதாக அம்மாநில எதிர்க்கட்சித் தலைவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இது குறித்து காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பிரியங்கா காந்தி கூறுகையில், “கர்நாடகாவில் தன் இடத்தை பாஜக இழந்துவிட்டதாக நான் நினைக்கிறேன். அவர்கள் கர்நாடகாவை உத்தரபிரதேசமாக மாற்ற விரும்புகிறார்கள். மக்களிடம் கொண்டு செல்வதற்கு அவர்களிடம் எதுவும் இல்லை. ஆகவேதான் அவர்கள் காஷ்மீர் ஃபைல்ஸ், சிறுபான்மையினரின் பொருளாதார நடவடிக்கைகளுக்குத் தடை விதிப்பது, ஹலால் இறைச்சி போன்றவற்றைக் கொண்டு வருகிறார்கள்” என்று கூறியுள்ளார்.

இஸ்லாமிய வியாபாரிகளை தடை செய்துள்ள கர்நாடக அரசு அடுத்து விப்ரோவை தடை செய்யுமா? – காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் கேள்வி

“ஏற்கனவே, நாம் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகிறோம். ஆனால், அவர்கள் மிகவும் முற்போக்கான மாநிலமான கர்நாடகாவை உத்தரப் பிரதேசமாக மாற்றத் திட்டமிட்டுக்கொண்டிருக்கிறார்கள். இது வெறும் தேர்தல் தந்திரம்தான்” என்று அவர் விமர்சித்துள்ளார்.

இவ்விவகாரம் குறித்து காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சட்டப்பேரவை உறுப்பினர் தினேஷ் குண்டுராவ் பேசுகையில், “ஹலால் இறைச்சியை வாங்க விரும்பும் மக்கள் அதை வாங்குவார்கள். ஹலால் இறைச்சியை வாங்க விரும்பாத மக்கள் அதை வாங்க மாட்டார்கள். இதில் எந்த சட்டவிதியும் இல்லை. இதை சர்ச்சையாக்குவது வேறெதையோ குறிவைக்கும் செயல். இது நாட்டிற்கு மிக மிக ஆபத்தானது. பசுவராஜ் பொம்மை அரசின் அணுகுமுறையை நான் கண்டிக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

Source: ANI

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்