Aran Sei

வருமான வரி தாக்கல் செய்தவர்களுக்கு மட்டும் ஹஜ் யாத்திரையா? – ஜவாஹிருல்லா கண்டனம்

credits : newyork times

ஜ் பயணம் மேற்கொள்ளும் தமிழகம், புதுச்சேரி மற்றும் அந்தமான் பயணிகள் கேரள மாநிலம் கொச்சியிலிருந்து புறப்பட் வேண்டும் என்ற விதிமுறை அமுல்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் சென்னையிலிருந்து ஹஜ் விமான சேவை தொடர வேண்டும், புனித ஹஜ் பயணம் மேற்கொள்வோர் வருமான வரி செலுத்த வேண்டும் என்ற அறிவிப்பைத் திரும்பப் பெற வேண்டும் என்று மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தியுள்ளது.

மனித நேய மக்கள் கட்சியின் தலைவர் பேரா. எம்.எச். ஜவாஹிருல்லா  வெளியிட்டுள்ள அறிக்கையில் “ரூ 2 இலட்சத்திற்கு அதிகமான செலவாகும் வெளிநாட்டு பயணங்கள் மேற்கொள்வோர் வருமான வரித் துறைக்கு வருடாந்திர கணக்குகளை சமர்ப்பிக்க வேண்டும் என்ற பொது விதியின் அடிப்படையில் 2021ல் புனித ஹஜ் பயணத்தை மேற்கொள்வோரும் வருமான வரி தகவல்களைத் தாக்கல் செய்ய வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது” மேற்கோள் காட்டியுள்ளார் .

”ஹஜ் செல்வோர் வருமான வரி கண்டிப்பாகச் செலுத்த வேண்டும் என்பது பல ஹஜ் பயணிகளுக்குத் தேவையற்ற சுமையை ஏற்படுத்தும், மேலும் பல ஹஜ் பயணிகள் கிராமங்களிலிருந்து வருவதால் அவர்கள் வருமான வரி செலுத்துதல் என்ற நிபந்தனையை நிறைவேற்றுவது என்பது சாத்தியமில்லாதது” என்று ஜவாஹிருல்லா கூறியுள்ளார்.

எனவே, மத்திய அரசு புனித ஹஜ் பயணிகளுக்கு வருமான வரி கட்டாயம் என்ற அறிவிப்பை திரும்பப் பெற வேண்டும் என்றும், 5 விழுக்காடு ஜி.எஸ்.டி. உள்ளிட்ட வரிகளைச் செலுத்துவதிலிருந்தும் விலக்கு அளிக்க வேண்டும் என்றும் ஜவாஹிருல்லா கேட்டுக்கொண்டுள்ளார்.

”கொரோனா பரவலை காரணம் காட்டி சென்னை விமானநிலையத்திலிருந்து புறப்படும் ஹஜ் பயணிகளுக்கான விமானங்கள் கேரளா மாநிலம் கொச்சியிலிருந்து புறப்படும் என அறிவித்திருப்பது தமிழக மற்றும் புதுவை ஹஜ் பயணிகள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது” என தெரிவித்துள்ள ஜவாஹிருல்லா “தற்போது கொரோனா பரவலால் சென்னையிலிருந்து ஹஜ் விமானம் புறப்படாது எனத் தெரிவித்துள்ள மத்திய அரசு, தமிழ்நாடு, புதுச்சேரி, அந்தமான், கேரளா ஆகிய நான்கு மாநிலப் பயணிகளையும் கொச்சி விமான நிலையத்தில் கூடவைப்பதால் கொரோனா தொற்று மேலும் அதிகமாகுமே தவிரக் குறையாது” என்று அறிக்கையில் சுட்டிகாட்டியுள்ளார்

எனவே, தமிழ்நாடு, புதுச்சேரி, அந்தமான் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்தோர் எப்போதும் போல் சென்னையிலிருந்தே புனித ஹஜ் யாத்திரை மேற்கொள்ள மத்திய அரசு அனுமதி அளிக்க வேண்டும் என்றும் தமிழக முதலமைச்சரும் இதனை மத்திய அரசிடம் வலியுறுத்த வேண்டும் என்றும் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் கேட்டுக்கொள்வதாக மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா தன் அறிக்கையில் கேட்டுக்கொண்டுள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்