Aran Sei

ஹத்ராஸ் வழக்கு : குற்றம்சாட்டப்பட்டவருக்கு எதிராக சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல்

செப்டம்பர் மாதம் உத்திர பிரதேசத்தில் தலித் பெண் ஒருவர் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் நான்கு குற்றவாளிகளுக்கு எதிராக மத்திய புலனாய்வு துறை (சி.பி.ஐ) குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது 

ஹத்ராஸை சேர்ந்த 19 வயது பெண், சந்தீப், ரல்குஷ், ரவி மற்றும் ராமு எனும் நால்வரால் செப்டம்பர் மாதம்  14 ஆம் தேதி கூட்டு பாலியல் வன்புணர்வுக்கும், தாக்குதலுக்கும் ஆளானார். அலிகரில் உள்ள மருத்துவமையில் முதலில் அனுமதிக்கப்பட்ட அப்பெண், பிறகு டெல்லியில் உள்ள சஃப்த்ர்ஜுங் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். செப்டம்பர் 29 ஆம் தேதி உயிரிழந்தார். 

குற்றவாளிகள் மீது, இந்திய தண்டனை சட்டம் 302 , 376 , 376 A , 376 D மற்றும் எஸ்.சி/எஸ்.டி வன்கொடுமை சட்டத்தின் சட்டப்பிரிவுகளின் கீழ் சி.பி.ஐ குற்றம் சாட்டப்பட்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.  

குற்றம்சாட்டப்பட்டவர்கள் உள்ளூர் காவல்துறையினால் கைது செய்யப்பட்டு, காவலில் வைக்கப்பட்டுள்ளனர். 

அக்டோபர் 1 அன்று, உத்திர பிரதேச காவல்துறை உயரதிகாரி ( ஏ.டி.ஜி.பி) பிரசாந்த் குமார், ஆக்ராவின் அரசு பரிசோதனைக்கூடத்தில் இருந்து வந்த தடயவியல் அறிக்கையில், பாதிக்கப்பட்டவர், பாலியல் வன்புணர்வு செய்யப்படவில்லை என நிரூபிப்பதாகக் கூறினார். உடற்கூராய்வும் இதையே காண்பிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.  “பரிசோதனை அறிக்கையில் விந்தணுக்கள் கண்டுபிடிக்கப்படவில்லை எனத் தெளிவாக இருக்கிறது” என்ற அவர், செப்டம்பர் 22 ஆம் தேதி அன்றே பாலியல் வன்கொடுமை குறித்து குறிப்பிடப்பட்டாலும், செப்டம்பர் 25 அன்றுதான் மாதிரிகள் பரிசோதனைக்கூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது எனவும் தெரிவித்தார். 

இது குறித்து பேசிய காங்கிரஸ் தலைவர் ப்ரியங்கா காந்தி, உண்மை நிலைத்து நிற்கும் என்றார். சிபிஐ தாக்கல் செய்திருக்கும் குற்றப்பத்திரிக்கை ஆதித்தியநாத் அரசு, உத்திர பிரதேச காவல்துறை, துணை இயக்குநர் ஜெனரல், ஹத்ராஸின் மாவட்ட மாஜிஸ்திரேட் மற்றும் மாநில நிர்வாகத்தின் மூத்த அதிகாரிகள் குறித்து கேள்விகள் எழுப்புகிறன்றன என்றும் கூறினார். 

மேலும், “பாதிக்கப்பட்டவருக்கு வாழ்விலும் மரணத்திலும் அம்மாநிலம் மரியாதை அளிக்கவில்லை. குடும்பத்தின் ஒப்புதல் இல்லாமல் நள்ளிரவில் அவர் தகனம் செய்யப்பட்டார். மூத்த காவல் அதிகாரிகள் பாலியல் வன்புணர்வு நடக்கவில்லை என்றனர். அவருடைய குடும்பத்தினரை அச்சுறுத்தினர், பாதிக்கப்பட்ட நபரை அவமானப்படுத்தினர். இந்த உண்மையைத் தெரிவித்த ஊடகங்களும் தாக்கப்பட்டன. ஆனாலும் மொத்த உத்திர பிரதேச அரசும் காவல்துறையும் முயற்சி செய்தும் அவர்களால் உண்மையை கட்டுப்படுத்த முடியவில்லை” என்று தெரிவித்தார். 

“நீதிக்கான முக்கியமான நடவடிக்கையை சிபிஐ எடுத்திருப்பது நம்பிக்கையளிப்பதாக உள்ளது. பாதிக்கப்பட்டவரின் குடும்பம் அனுபவித்த வேதனைக்கு நடுவே இது சிறு ஆறுதலாக இருக்க வேண்டும்” என்று காங்கிரஸ் தலைவர் ப்ரியங்கா காந்தி கூறியுள்ளார்.

முதலில் இவ்வழக்கு ஹத்ராஸில் உள்ள சந்த்பா காவல்நிலையத்தில்தான் பதிவு செய்யப்பட்டது. பாதிக்கப்பட்டவரின் சகோதரர், சந்தீப் வயலில் வைத்து பாதிக்கப்பட்ட நபரை கழுத்தை நெறித்து கொலை செய்ய முயற்சித்ததாக புகார் அளித்தார். பிறகு, செப்டம்பர் 22 ஆம் தேதி, தான் கூட்டு பாலியல் வன்புணர்வுக்கும், தாக்குதலுக்கும் ஆளானதாக பாதிக்கப்ப்பட்ட பெண் தெரிவித்தார். 

செப்டம்பர் 30 அன்று அதிகாலையில் அவசர அவசரமாக பாதிக்கப்பட்ட நபரின் உடல் தகனம் செய்யப்பட்டது என செய்திகள் வெளியானதும் பொது மக்கள் கண்டனம் தெரிவிக்க தொடங்கினர். எதிர்க்கட்சிகளும் அதற்குக் கண்டனம் தெரிவித்தன. அக்டோபர் 11 அன்று வழக்கு விசாரணையை கையில் எடுத்த சிபிஐ,  அதற்கென சிறப்புப் படை அமைத்தது. 

சிபிஐ , குற்றம் நடந்த இடத்தில் தடயவியல் நிபுணர்களை வைத்து பரிசோதனை செய்தது. குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு காந்திநகரில் உள்ள தடயவியல் பரிசோதனைக் கூடத்தில் பரிசோதனைகள் செய்யப்பட்டன. பாதிக்கப்பட்ட நபரை கவனித்த மருத்துவர்களை சிபிஐ அதிகாரிகள் விசாரித்தனர்.  பாதிக்கப்பட்டவரின் குடும்ப உறுப்பினர்களின் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டன. 

(தி இந்துவில் வெளியான செய்தியின் மொழியாக்கம்) 

 

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்