ஹரியானா மாநிலம் குர்கானில் திறந்த வெளியில் தொழுகை நடத்தும் இஸ்லாமியர்கள் தொந்தரவு செய்யப்படும் சம்பவம் தொடர்ச்சியாக நடைபெற்றுக்கொண்டிருக்கையில், மத நல்லிணக்கத்தை சீர்குலைப்பதாகவும், நிலத்தை அபகரிக்க முயன்றதாகவும் குற்றஞ்சாட்டி, அப்பகுதியைச் சேர்ந்த இந்துத்துவ ஆர்வலர்கள் அளித்த புகாரின் பேரில், மாநிலங்களவை முன்னாள் உறுப்பினர் முகமது அதீப் உள்ளிட்டோர்மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
முகமது அதீப், அப்துல் ஹசீப் காஷ்மி, முஃப்தி முகமது சலீம் காஷ்மி ஆகியோர்மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவுகள் 153(கலவரத்தை உருவாக்கும் நோக்கில் மக்களை தூண்டிவிடுதல்) மற்றும் பிரிவு 34 ஆகியவற்றின்கீழ், செக்டர் 40 காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்று குர்கான் காவல்துறை தெரிவித்துள்ளது.
குர்கானில் தொழுகைக்கு அனுமதி மறுத்த ஹரியானா முதலமைச்சர் – பறிக்கப்படுகிறதா சிறுபான்மையினரின் உரிமை?
இது குறித்து நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் பேசியுள்ள செக்டர் 40 காவல் நிலைய அதிகாரி குல்தீப் சிங், உண்மைகள் சரிபார்க்கப்பட்டு சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளார்.
வெறுப்பு பரப்பப்படுவதையும் வகுப்புவாத வன்முறையையும் தடுக்கும் நடவடிக்கைகள் தொடர்பான நீதிமன்றத்தின் உத்தரவுகளைச் செயல்படுத்த தவறியதற்காக ஹரியானா காவல்துறை இயக்குநர் மற்றும் அம்மாநில தலைமைச் செயலாளர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, டிசம்பர் மாதம் முகமது அதீப் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
முகமது அதீப் உள்ளிட்டோர்மீது புகாரளித்தவர்களான தினேஷ் பார்தி, ஹிம்மத், விக்கி குமார் ஆகியோர், அவர் மத நல்லிணக்கத்தை சீர்குலைப்பதாகவும், நிலத்தை அபகரிக்க முயல்வதாகவும், கலவரத்தைத் தூண்டும் செயல்களில் ஈடுபட்டதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர்.
இஸ்லாமியர்களின் தொழுகை இடத்தில் கோவர்தன் பூஜை நடத்திய இந்துத்துவவாதிகள் – கலந்து கொண்ட பாஜக தலைவர்
இப்புகார் குறித்து பிடிஐ செய்தி நிறுவனத்திடம் பேசியுள்ள முகமது அதீப், தனக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது குறித்து தனக்குத் தெரியாது என்றும் அது பற்றி இப்போதுதான் தெரிந்து கொண்டேன் என்றும் கூறியுள்ளார்.
“நாங்கள் அமைதியை குறித்தும், மத நல்லிணக்கத்தைக் குறித்தும் பேசுகிறோம். ஆனால், கோட்சே புகழ் பாடுபவர்கள் எங்கள் மீது குற்றம் சாட்டிக்கொண்டிருக்கிறார்கள்” என்று அவர் தெரிவித்துள்ளார்.
ஹரியானாவில் முதலமைச்சர் மனோகர் லால் கட்டார் தலைமையிலான பாஜக ஆட்சி செய்து வருகிறது.
Source: PTI
தொடர்புடைய பதிவுகள்:
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.