லக்கிம்பூர் கெரி கலவர இடத்தில் சேகரிக்கப்பட்ட துப்பாக்கி குண்டுகள் ஒன்றிய இணையமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷீஷ் மிஸ்ரா மற்றும் அவரது நண்பரின் துப்பாக்கிகளில் இருந்து வெளியானவை என தடயவியல் ஆய்வு அறிக்கை தெரிவித்துள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் லக்கிம்பூரில் அக்டோபர் 3 ஆம் தேதி விவசாய சட்டங்களை நீக்கக்கோரி விவசாயிகள் போராட்டம் நடத்தியுள்ளனர். அப்போது ஒன்றிய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து சாலையை முடக்கியுள்ளனர்.
அப்போது, அஜய் மிஸ்ராவுக்கு சொந்தமான ஒரு கார் உட்பட மூன்று கார்கள், போராடிய விவசாயிகள்மீது மோதியதில் நான்கு விவசாயிகள் உயிரிழந்துள்ளனர். அதைத்தொடந்து, நடந்த வன்முறையில் நான்கு விவசாயிகள் உட்பட 8 பேர் உயிரிழந்தனர்.
தாக்குதலுக்குக் காரணமான ஒன்றிய இணையமைச்சர் அஜய் மிஸ்ரா பதவி விலக வேண்டும், அவரது மகன் அஷீஷ் மிஸ்ரா மீது கொலை முயற்சி வழக்குத் பதிய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்ததன் விளைவாக ஆஷீஷ் மிஸ்ரா உள்ளிட்ட 13 கைது செய்யப்பட்டார். 3 பாஜகவினர் இறந்தது தொடர்பாக அக்கட்சியை சேர்ந்த சுமித் ஜெய்ஸ்வால் அளித்த புகாரில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த இரு வழக்குகளின் விசாரணையில் காவல்துறையினரும் தடவியல் நிபுணர்களும் ஈடுபட்டுள்ளனர். தடவியல் நிபுணர்கள் அளித்த ஒன்றிய இணையமைச்சரின் மகன் ஆஷீஷ் மிஸ்ரா அச்சம்பவத்தில் இடம் பெற்றிருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த அறிக்கையின்படி சம்பவ இடத்தில் கண்டெடுக்கப்பட்ட துப்பாக்கி குண்டுகள் ஆஷீஷ் மிஸ்ரா மற்றும் அவரது நண்பர் அங்கித் தாஸின் அரசு உரிமம் பெற்ற கைத் துப்பாக்கிகளில் இருந்து வெளியானவை என உறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்காக இருவரது துப்பாக்கிகளும் பறிமுதல் செய்யப்பட்டு தடவியல்ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டிருந்தன.
உத்தர பிரதேச அரசின் சிறப்பு புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) விசாரித்து வரும் இவ்வழக்கு வேறு மாநில நீதிமன்றத்திலிருந்து ஓய்வு பெற்ற நீதிபதியின் தலைமைக்கு மாற உள்ளது. லக்கிம்பூர் வழக்கை கண்காணித்து வரும் உச்ச நீதிமன்றம், உத்தர பிரதேச அரசின் விசாரணையில் திருப்தி அளிக்கவில்லை என்று தெரிவித்திருந்தது.
இதன் மீது பதிலளிக்க உத்தர பிரதேச அரசுக்கு நவம்பர் 12 வரை கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் சம்பவத்தின்போது பத்திரிகையாளர் ராமன் காஷ்யப் , விவசாயிகள் தாக்குதலில் இறக்கவில்லை எனவும் உ.பி. அரசுஉறுதி செய்துள்ளது. உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அறிக்கையில், மத்திய அமைச்சரின் மகன் ஆஷீஷ் மிஸ்ராவின் வாகனம் மோதியதால் ராமன் உயிரிழந்ததாக உத்தர பிரதேச அரசு குறிப்பிட்டுள்ளது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.