குஜராத் அரசின் மதசுதந்திரம் (திருத்த) சட்டம் 2021ன் பிரிவுகளுக்குக் குஜராத் உயர்நீதிமன்றம் விதித்திருக்கும் தடைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய இருப்பதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சனிக்கிழமை (ஆகஸ்ட் 28) கருத்து தெரிவித்திருந்த குஜராத் முதலமைச்சர் விஜய் ரூபானி, “திருமணத்தின் மூலம் வலுக்கட்டாயமாக நடைபெறும் மதமாற்றத்தை நிறுத்த அரசு உறுதி பூண்டுள்ளது” என தெரிவித்துள்ளார்.
மேலும், குஜராத் மதசுதந்திரம் (திருத்த) சட்டம் 2021ன் பல பிரிவுகளுக்கு விதிக்கும் உயர்நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்படும் என கூறியுள்ளார்.
இந்தியாவில் இந்துக்கள் பெரும்பான்மை இருக்கும் வரையில் மட்டுமே அரசியலமைப்பு, மதச்சார்பின்மை மற்றும் சட்டம் நீடிக்கும் என அம்மாநில துணை முதலமைச்சர் நிதின் பட்டேல் தெரிவித்திருந்த நிலையில், முதலமைச்சர் விஜய் ரூபானியின் இந்த கருத்து வந்துள்ளது.
முன்னதாக வியாழனன்று (ஆகஸ்ட் 26) குஜராத் உள்துறை அமைச்சர் பிரதீப்சிங் ஜடேஜா வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ”லவ் ஜிகாத்’ அச்சுறுத்தல் உண்மையானது. குஜராத்தில் மதங்களுக்கு இடையேயான மதமாற்ற எதிர்ப்பு சட்டத்தின் விதிகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ள உயர்நீதிமன்ற இடைக்கால உத்தரவின் எதிர்த்து மாநில அரசு உச்சநீதிமன்றத்தை அணுகும்” என குறிப்பிட்டிருந்தார்.
குஜராத் மதசுதந்திரம் (திருத்த) சட்டம் 2021ன் பிரிவுகள் 3, 4, 4 (ஏ), 4 (சி), 5, 6, 6(ஏ) பிரிவுகளுக்குத் தடை விதிப்பதற்கான இடைக்கால உத்தரவை ஆகஸ்ட் 19 தேதி வழங்கி உத்தரவிட்டிருந்த குஜராத் உயர்நீதிமன்றம், “ஒரு மதத்தைச் சேர்ந்த ஒருவர் எந்த நிபந்தனையும், நிர்பந்தமுமின்றி வேறொரு மதத்தைத் திருமணம் செய்யும்போது அதைத் தடை செய்யக் கூடாது. அத்தகைய திருமணங்களைச் சட்டவிரோத திருமணங்கள் என கூற முடியாது” என தெரிவித்திருந்தது.
”வீட்டை விட்டு வெளியேறச் செய்து பின்பு மதமாற்றத்திற்கு நிர்பந்திக்கப்படும் இந்து சிறுமிகளைப் பாதுகாப்பதற்கு மாநில அரசு உறுதிப் பூண்டுள்ளது. லவ் ஜிகாத்திற்கு எதிரான சட்டம் இந்தச் சூழலில் தான் கொண்டு வரப்பட்டது. மேலும், இது போன்ற செயல்களுக்கு எதிராக வலுவான நடவடிக்கை எடுக்க வேண்டும்” என குஜராத் முதலமைச்சர் விஜய் ரூபானி தெரிவித்துள்ளார்.
2003 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட அசல் சட்டத்தில், 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.